Published : 26 Feb 2021 03:15 AM
Last Updated : 26 Feb 2021 03:15 AM

கீழ்பவானி வாய்க்காலை நவீனப்படுத்தும் திட்டத்தை கைவிட வேண்டுகோள்: தமிழக அரசை அறிவுறுத்த பிரதமருக்கு கடிதம்

கீழ்பவானி வாய்க்காலை நவீனப்படுத்தும் திட்டத்தை கைவிட வேண்டுமென தமிழக அரசை அறிவுறுத்த, பிரதமர் நரேந்திரமோடிக்கு திமுக சுற்றுச்சூழல் அணி மாநிலச் செயலாளர் கார்த்திகேய சிவசேனாபதி கடிதம் எழுதியுள்ளார்.

பிரதமர் மோடி நேற்று தமிழகம் வந்த நிலையில், கோவையில் நடைபெற்ற விழாவில் பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். இதில், கீழ்பவானி கால்வாயை நவீனப்படுத்தும் திட்டமும் அடங்கும்.இதுதொடர்பாக, கீழ்பவானி பாசன விவசாயிகள் சங்க போராட்டக்குழுசார்பில், பிரதமருக்கு திமுக சுற்றுச்சூழல் அணி மாநிலச் செயலாளர்கார்த்திகேய சிவசேனாபதி எழுதியுள்ள கடித விவரம்:

கீழ்பவானி வாய்க்காலை கான்கிரீட்மயமாக்கும் திட்டத்தை கடந்த 2013-ம் ஆண்டு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசு முன்னெடுத்தது.

ஆனால், விவசாயிகளின் கடும்எதிர்ப்பால் திட்டம் கைவிடப்பட்டது. தற்போது, இந்த வாய்க்காலை நவீனப்படுத்துதல், புதுப்பித்தல் என்ற பெயரில் மீண்டும் அத்திட்டத்தை நிறைவேற்ற முதல்வர் பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு துடிக்கிறது.

மண்ணாலான கீழ்பவானி வாய்க்கால் மூலமாக சுமார் 2 லட்சம் ஏக்கருக்கு மேல் விவசாயம் நடைபெற்று வருகிறது. இதில் நேரடியாக 1 லட்சத்து 35 ஆயிரம் ஏக்கருக்கு வாய்க்கால் மூலமாக நேரடியாக தண்ணீர் பெறப்படுகிறது. தண்ணீர் திறப்பின்போது மற்ற நிலங்களில் கிணறுகள், குளம், குட்டைகளில் நீர் நிரம்பி, அதன் மூலமாகவும் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது.

வாய்க்காலில் மண் கரைகள் இருப்பதால்தான், நீர் செறிவூட்டம் காரணமாக நிலத்தடி நீரும் உயர்ந்து வருகிறது. அதோடு வாய்க்கால் நீர், நிலத்தின் வழியே ஊடுருவி உரம்பு நீர் பாசனமாக 50 ஆயிரம் ஏக்கர் அளவில் பயன்படுத்தப்படுகிறது. வாய்க்காலை ஒட்டி பல ஆண்டுகளான சிறிய நீர்வாழ் உயிரினங்கள் வாழ்கின்றன. இத்தகைய சூழலில் நவீனப்படுத்துகிறோம் என்ற பெயரில் கான்கிரீட் போடும்போது மேற்கூறிய அனைத்தும் பாழ்ப்பட்டுபோகும் நிலை உருவாகும். ஈரோடு, திருப்பூர் மாவட்ட மக்கள் மற்றும் விவசாயிகளின் நீராதாரமும், மக்களின் குடிநீராதாரமும் பாதிக்கப்படும். ஏற்கெனவே பிஏபி வாய்க்கால், முல்லை பெரியார்பாசன வாய்க்கால் எனஇரண்டிலுமே இத்திட்டம் தோல்வியில் முடிந்துள்ளது. இதையெல்லாம் மாநில அரசு கவனத்தில்கொள்ளவில்லை.

பயனாளிகளான விவசாயி களிடையே எந்தவித கருத்துகேட்பு கூட்டமும் நடத்தாமல், கடும் எதிப்பை மீறி ரூ.933.10 கோடி மதிப்பிலான இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த அதிமுக அரசு அவசரம் காட்டி வருகிறது. விவசாயிகளின் கருத்துகளுக்கு மதிப்பளித்தும், ஆபத்தை உணர்ந்தும் திட்டத்தை கைவிடமாநில அரசுக்கு அறிவுறுத்த வேண்டும். இவ்வாறு கடிதத்தில் குறிப் பிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x