

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் சங்கம் சார்பில் 4-வது நாளாக திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் நேற்று காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.
சங்கத்தின் மாநில துணைத் தலைவர் பாக்கியம் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் எல்லம்மாள், சிஐடியு கட்டிட கட்டுமான சங்க பொதுச் செயலாளர் குமார், சிஐடியு மாவட்ட தலைவர் உண்ணிகிருஷ்ணன், செயலாளர் ரங்கராஜ் ஆகியோர் பேசினர். அங்கன்வாடி ஊழியர்களை அரசு ஊழியர்களாக அறிவிக்க வேண்டும், அகவிலைப்படியுடன் கூடிய ஓய்வூதியம்வழங்க வேண்டும், முறையான குடும்ப ஊதியத்தை அறிவிக்க வேண்டும்.
பணி ஓய்வு பெறும்போது பணிக்கொடையாக ஊழியர் களுக்குரூ.10 லட்சம், உதவியாளர்களுக்கு ரூ.5 லட்சம் வழங்க வேண்டும்என்பன உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினர்.
போராட்டத்தின் ஒருபகுதியாக, அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் அங்கேயே சமையல் செய்து உணவு உண்டனர். மாவட்ட நிர்வாகிகள், உறுப்பினர்கள் என 200-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
உதகை
இதேபோல, உதகையில் உள்ள ஆட்சியர் அலுவலகம் முன் நேற்று நடைபெற்ற போராட்டத்துக்கு, சங்கத் தலைவர் சசிகலா தலைமை வகித்தார். போராட்டத்தில் ஈடுபட்ட அங்கன்வாடிப் பணியாளர்கள், உதவியாளர்கள் 210 பேரை போலீஸார் கைது செய்தனர்.
கோவை
இதேபோல கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அங்கன்வாடி பணியாளர்கள் மடி ஏந்தி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.