

கோவை மாவட்டத்தை ஒட்டியுள்ள கேரள மாநில வனப்பகுதியான சைலண்ட்வேலியில் மாவோயிஸ்ட்களுக்கும் கேரள போலீஸாருக்கும் இடையே துப்பாக்கிச் சூடு நடைபெற்றது. இதையொட்டி தமிழக எல்லையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத் தப்பட்டுள்ளன.
கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், மன்னார்க்காடு மற்றும் அட்டப்பாடி பகுதிகளுக்கு இடைப் பட்ட அமைதி பள்ளத்தாக்கு (சைலண்ட்வேலி) வனப் பகுதியில் நேற்று மாலை சுமார் 5 மணிய ளவில் போலீஸாருக்கும், மாவோ யிஸ்ட்களுக்கும் இடையே துப் பாக்கிச் சண்டை நடைபெற்றது.
திருவிழம்குன்னு, அம்பலப் பாரா வனப் பிரிவில் மாவோ யிஸ்ட்கள் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் தேடுதல் வேட்டை நடந்தது. அதைத் தொடர்ந்து இருதரப்பினருக் குமிடையே துப்பாக்கிச்சூடு நடைபெற்றதாகவும், அதில் மாவோயிஸ்ட் இயக்கத்தைச் சேர்ந்த ஒருவருக்கு காயம் ஏற் பட்டதாகவும் தகவல் வெளியாகி யுள்ளது.
கடந்த அக்.17-ம் தேதி இதே சைலண்ட்வேலி வனப்பகுதி யில் மாவோயிஸ்ட் அமைப்பினருக் கும், கேரள போலீஸாருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடந்தது. அதுதொடர்பாக அட் டப்பாடியை சேர்ந்த ஐயப்பன், வயநாட்டைச் சேர்ந்த சோமன் ஆகியோரது புகைப்படங்களை வெளியிட்டு போலீஸார் தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் அடுத்த தாக்குதல் நேற்று நடைபெற்றுள்ளதால், தமி ழக எல்லையோரப் பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள் ளது.
தமிழக மேற்கு மண்டல காவல் துறைத் தலைவர் கே.சங்கர் கூறியதாவது: மன்னார்காடு அருகே உள்ள சைலண்ட்வேலி வனத்தில் கேரள தண்டர்போல்ட் போலீஸாருக்கும், மாவோயிஸ்ட் களுக்கும் துப்பாக்கிச் சண்டை நடைபெற்றதாக தகவல் கிடைத் துள்ளது. இந்த தகவல் உறுதி செய்யப்பட்டதையடுத்து, தமிழக எல்லையோரப் பகுதிகளான கோவை மாவட்டத்தின் ஆனை கட்டி, மாங்கரை, காருண்யா நகர், ஆலாந்துறை உள்ளிட்ட சோதனைச்சாவடிகளில் கூடுதல் கண்காணிப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
நீலகிரி மாவட்டத்தில் மஞ்சூர், கிண்ணக்கோரை உள்ளிட்ட எல்லையோரப் பகுதிகளில் கண் காணிப்பு பலப்படுத்தப்பட்டுள் ளது. இந்த துப்பாக்கிச் சண்டை நடந்த இடம் தமிழக எல்லையிலிருந்து சுமார் 20 கி.மீ. தொலைவில் உள்ளது.
எனவே காயம் ஏற்பட்டதாக கூறப்படும் மாவோயிஸ்ட்கள் தமிழகப் பகுதிக்குள் வர வாய்ப்பில்லை. இருப்பினும், கோவை, நீலகிரியில் மருத்துவ மனைகளில் கண்காணிப்பு பலப் படுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.