Published : 26 Feb 2021 03:15 AM
Last Updated : 26 Feb 2021 03:15 AM

1.39 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.123 கோடி வெள்ள நிவாரணம் ஒதுக்கீடு: தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் தகவல்

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 11 மாதங்களுக்கு பிறகு நேரடி விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ் தலைமையில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தை தொடங்கி வைத்து ஆட்சியர் பேசியதாவது:

தூத்துக்குடி மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் 1.04 லட்சம் ஹெக்டேரில் வேளாண்மைப் பயிர்களும், 17 ஆயிரம் ஹெக்டேரில் தோட்டக்கலைப் பயிர்களும் என மொத்தம் 1.21 லட்சம் ஹெக்டேர் பயிர்கள் சேதமடைந்துள்ளன.

இந்த பயிர்களுக்கு நிவாரணத்தொகையாக 1,39,355 விவசாயிகளுக்கு மொத்தம் ரூ.123.48 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் 79,710 விவசாயிகளுக்கு ரூ.96.56 கோடி விடுவிக்கப்பட்டு விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள தொகையும் இன்னும் 4 அல்லது 5 தினங்களில் வரவு வைக்கப்படும். மாவட்டத்தில் கூட்டுறவு பயிர் கடன் ரூ.181 கோடி தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

முதல் கட்டமாக வைகுண்டம், பேய்க்குளம், பண்ணம்பாறை, வசவப்பபுரம், மணக்கரை, இருவப்பபுரம் ஆகிய 6 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது என்றார்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி பேசும்போது, ‘‘மேல ஈரால் பகுதியில் 2016- 2017-ல் மக்காசோளம் பயிரிட்ட 40 விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டுத் தொகை இன்னும் கிடைக்கவில்லை. விரைவாக கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.

முன்கார் சாகுடி

நாசரேத் பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் பேசும்போது, ‘‘முன்கார் சாகுபடி என்பது தூத்துக்குடி மாவட்டத்துக்கு மட்டுமே வழங்கப்படும் பிரத்யேக அனுமதியாகும். இந்த ஆண்டு அணைகளில் நீர் இருப்பு நன்றாக இருப்பதால் முன்கார் சாகுபடிக்கு அனுமதி பெற ஆட்சியர் இப்போதே நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு அனுமதி பெற்றால் தான் பிசான சாகுபடி மார்ச் மாதத்தில் முடிவடைந்ததும், ஏப்ரல் மாதத்தில் முன்கார் சாகுபடியை விவசாயிகள் தொடங்க முடியும். மேலும் நாசரேத் பகுதியிலும் நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும்’’ என்றார்.

குரும்பூரைச் சேர்ந்த தமிழ்மணி பேசும்போது, ‘‘வாழைப் பயிருக்கு இதுவரை பயிர் காப்பீட்டுத் தொகைகிடைத்ததில்லை. எனவே, வாழைப்பயிருக்கும் பயிர் காப்பீட்டுத் திட்ட இழப்பீடுத் தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கூட்டுறவு ஏலக்கூடத்தில் வாழைத்தார்களுக்கு அடிப்படை விலையாக ரூ.25 நிர்ணயிக்க வேண்டும். கடம்பா குளம் மற்றும் மறுகால் ஓடையை தூர்வார வேண்டும்’’ என்றார்.

கிணற்றை மீட்க வேண்டும்

‘‘கயத்தாறு அருகே அரசன்குளத்தில் உள்ள குடிநீர் கிணற்றை தனிநபர் ஆக்கிரமித்துள்ளார். அதனை மீட்க வேண்டும்’’ என தமிழ் விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் ஓ.ஏ.நாராயணசாமி , வலியுறுத்தினார்.

‘‘மணிமுத்தாறு அணையில் இருந்து 3-வது மற்றும் 4-வது ரீச்சில் திறக்கப்பட்டுள்ள தண்ணீர் சாத்தான்குளம் பகுதியில் உள்ளசெட்டிகுளம் உள்ளிட்ட 8 குளங்களுக்கு இன்னும் வரவில்லை. அணையில் போதிய தண்ணீர் இருப்பதால் இந்தக் குளங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என சாத்தான்குளத்தை சேர்ந்தமகா பால்துரை வலியுறுத்தினார்.

கயத்தாறில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்க வேண்டும் என விவசாயி ராதாகிருஷ்ணனும், குமாரகிரி, குலையன்கரிசல் கிராம நிர்வாக அதிகாரிகள் சரியாக பணி செய்வதில்லை என அப்பகுதி விவசாயிகளும் குறை கூறினர்.

அத்திமரப்பட்டி ஜோதிமணி பேசும்போது, ‘‘உப்பாற்று ஓடையின் இருகரைகளையும் பலப்படுத்தி சுற்றுவட்டார கிராம மக்களைவெள்ள பாதிப்பில் இருந்து நிரந்தரமாக காப்பாற்ற வேண்டும். கோரம்பள்ளம் குளத்தை தூர்வாரி ஆழப்படுத்த வேண்டும். அத்திமரப்பட்டியில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும்’’ என்றார்.

‘‘பயிர் காப்பீட்டுத் தொகை அனைத்து விவசாயிகளுக்கும் முறையாக கிடைக்க வேண்டும். பயிர்க் கடன் தள்ளுபடி உண்மையான விவசாயிகளுக்கு கிடைக்க வேண்டும். தாமிரபரணி பாசன குளங்களை தூர்வார வேண்டும்’’ என முன்னாள் எம்எல்ஏ எஸ்.ராஜேந்திரன் வலியுறுத்தினார்.

கடன் தள்ளுபடியில் மோசடி

‘‘தூத்துக்குடி மாவட்டத்தில் ஆளும்கட்சியினர் தலைவர்களாக உள்ள கூட்டுறவு வங்கிகளில் போலிஆவணங்கள் மூலம் பயிர்க் கடன் தள்ளுபடியில் முறைகேடுகள் நடந்துள்ளன. இது தொடர்பாக முறையாக விசாரணை நடத்தி உண்மையான விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வெள்ள நிவாரணத் தொகையை காலநிர்ணயம் செய்து அனைத்து விவசாயிகளுக்கும் முறையாக வழங்க வேண்டும்’’ என தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் கே.பி.ஆறுமுகம் வலியுறுத்தினார்.

விவசாயிகள் எழுப்பிய கேள்விகளுக்கு ஆட்சியர் செந்தில் ராஜ்மற்றும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் விரிவான விளக்கம் அளித்தனர்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரான், தூத்துக்குடி சார் ஆட்சியர் சிம்ரோன் ஜீத் சிங் கலோன், கோட்டாட்சியர்கள் தனப்பிரியா, சங்கரநாராயணன், வேளாண்மை இணை இயக்குநர் முகைதீன், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) பாலசுப்பிரமணியன், கூட்டுறவு இணைப் பதிவாளர் ரவிச்சந்திரன், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குநர் சிவகாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x