Published : 26 Feb 2021 03:15 AM
Last Updated : 26 Feb 2021 03:15 AM

காவிரி- குண்டாறு இணைப்புத் திட்டத்தில் காவிரி முதல் தெற்கு வெள்ளாறு வரையிலான முதல்கட்ட பணிக்கான மக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம்

காவிரி- குண்டாறு இணைப்புத் திட்டத் தில் கரூர் மாவட்டம் மாயனூரில் இருந்து புதுக்கோட்டை தெற்கு வெள்ளாறு வரையிலான முதல்கட்ட பணிக்கான பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம் திருச்சியில் நேற்று நடைபெற்றது.

வறட்சி பாதிப்பு பகுதிகளைக் கொண்ட கரூர், திருச்சி, புதுக்கோட்டை மாவட்டங்களில் குடிநீர், நீர்ப்பாசன தேவைகளுக்காகவும், நிலத்தடி நீராதாரத்தை மேம்படுத்தவும், காவிரியில் வெள்ளப் பெருக்கால் தண்ணீர் கடலில் வீணாகச் சென்று கலப்பதைத் தடுக்கவும் காவிரி- குண்டாறு இணைப்புத் திட்டத்தை நிறைவேற்ற அரசு திட்டமிட்டுள்ளது.

இந்தத் திட்டத்தில் காவிரி (கட்டளை) முதல் குண்டாறு வரை 259.992 கிமீ நீளத்துக்கு கால்வாய் வெட்டப்பட உள்ளது. இந்தப் பணிகள் 3 பகுதிகளாக நடைபெறவுள்ளன. அதன்படி, முதல்கட்டமாக காவிரி முதல் தெற்கு வெள்ளாறு வரை 118.450 கிமீ நீளத்துக்கும், 2-ம் கட்டமாக தெற்கு வெள்ளாறு முதல் வைகை ஆறு வரை 108 கிமீ நீளத்துக்கும், 3-ம் கட்டமாக வைகை ஆறு முதல் குண்டாறு வரை 33 கிமீ நீளத்துக்கும் என கால்வாய் வெட்டப்பட உள்ளது.

திருச்சி மாவட்டத்தில் ரங்கம், திருவெறும்பூர் ஆகிய வட்டங்களுக்கு உட்பட்ட அம்மாப்பேட்டை, மாத்தூர், பாகனூர், அளுந்தூர், நாகமங்கலம், முடிகண்டம், தொரக்குடி, சூரியூர் உட்பட 9 கிராமங்கள் வழியாக இந்தக் கால்வாய் செல்கிறது. இந்தத் திட்டத்துக்காக திருச்சி மாவட்டத்தில் புறம்போக்கு மற்றும் பட்டா நிலங்கள் என மொத்தம் 226.66 ஹெக்டேர் நிலம் கையகப்படுத்தப்படவுள்ளது.

இந்நிலையில், காவிரி முதல் தெற்கு வெள்ளாறு வரை 118.450 கிமீ நீளத்துக்கு கால்வாய் வெட்டும் முதல்கட்ட பணிக்கு, பொதுப் பணித் துறை நீராதார அமைப்பின் செயற்பொறியாளரால் திருச்சி மாவட் டத்துக்கு சுற்றுச்சூழல் அனுமதிக்காக சமர்ப்பிக்கப்பட்ட சுற்றுச்சூழல் மற்றும் சமூக தாக்க மதிப்பீட்டு ஆய்வு அறிக்கை விண்ணப்பத்துக் கான பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம் திருச்சி ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.

தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரி யம் ஏற்பாடு செய்த இந்தக் கருத் துக் கேட்புக் கூட்டத்துக்கு, ஆட்சியர் சு.சிவராசு தலைமை வகித்தார். பொதுப் பணித் துறை ஆற்றுப் பாதுகாப்புக் கோட்ட கண்காணிப்புப் பொறியாளர் ஆர்.திருவேட்டைசெல்வம், மாசு கட்டுப்பாடு வாரிய மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் ஆர்.லட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்தக் கூட்டத்தில் பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள், விவசாயிகள் உள்ளிட்டோர் திட்டம் குறித்து விளக்கத்தை கேட்டறிந்து, தங்கள் பரிந்துரைகள், கருத்துகளை பதிவு செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x