Last Updated : 25 Feb, 2021 07:55 PM

 

Published : 25 Feb 2021 07:55 PM
Last Updated : 25 Feb 2021 07:55 PM

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ரூ.14 கோடியில் பாளை. வ.உ.சி. மைதானம் புனரமைப்பு: பணிகள் தொடங்கியுள்ளதால் நடைபயிற்சி, விளையாடுவதற்கு தடை

திருநெல்வேலி

பாளையங்கோட்டையில் சுதந்திர போராட்ட வீரர் வ.உ.சி.யின் பெயரில் அமைந்துள்ள வ.உ.சி. மைதானம் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ரூ.14 கோடி மதிப்பீட்டில் புனரமைக்கப்படுகிறது. இதற்கான பணிகள் இன்று தொடங்கியதை அடுத்து இங்கு நடைபயிற்சி மற்றும் விளையாடுவதற்கு தடைவிதிக்கப்பட்டிருக்கிறது.

திருநெல்வேலி, பாளையங்கோட்டை பகுதிகளில் இருந்தும், மாவட்டம் முழுவதும் இருந்தும் பொதுமக்கள் எளிதில் வந்து செல்லும் வகையில் வ.உ.சி. மைதானம் இருக்கிறது.

அண்ணா விளையாட்டு மைதானம் மேம்படுத்தப்படுமுன் இங்குதான் ஆண்டுதோறும் ஹாக்கி விளையாட்டு பிரபலமாக நடத்தப்பட்டு வந்திருக்கிறது. தென்மாவட்டங்களில் பல ஹாக்கி வீரர்களை உருவாக்கிய பெருமை மிக்கது வ.உ.சி. மைதானம்.

இதுபோல் தேசிய அளவிலான கபடி போட்டிகளை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் இங்கு நடத்தியிருக்கிறது. இதுபோல் வாலிபால், கால்பந்து என்று பல்வேறு போட்டிகளுக்கான களமாக இருந்த வ.உ.சி. மைதானம் சமீபகாலமாக போட்டிகள் நடத்தப்படாமல் பொட்டல் வெளியாக காட்சியளித்தது. சுதந்திர தினவிழா, குடியரசு தினவிழாக்கள் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் இங்கு நடத்தப்படுகிறது.

திருநெல்வேலி மாநகராட்சி உதயமாகுமுன் பாளையங்கோட்டை நகராட்சியில் இருந்த இந்த மைதானம் கடந்த 12.1.1965-ல் சென்னை மாநில ஸ்தலஸ்தாபன அமைச்சராக இருந்த எஸ்.எம்.ஏ. மஜீத் என்பவரால் திறந்து வைக்கப்பட்டிருந்தது.

அப்போது பாளையங்கோட்டை நகராட்சி தலைவராக எம்.எஸ். மகராஜபிள்ளையும், ஆணையராக டி. கோவிந்தராஜனும், பொறியாளராக சி. முத்துக்குமாரசாமியும், ஒப்பந்தக்காரராக எம். சுடலைமுத்து மூப்பனாரும் இருந்துள்ளனர்.

இது தொடர்பான கல்வெட்டு இம்மைதானத்தில் இருக்கிறது. இம்மைதானத்தில் கிழக்கு பகுதியில் அமைக்கப்பட்டிருந்த காலரிகள் அமைக்க கடந்த 15.8.1965-ல் இந்தியா பிரான்ஸ் இன்டர்நேஷனல் ஹாக்கி விளையாட்டு கமிட்டி நன்கொடை அளித்திருந்தது. இது தொடர்பாகவும் கல்வெட்டு இங்குள்ளது.

பழமைவாய்ந்த இந்த மைதானத்தை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் புனரமைப்பு செய்ய மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டு ரூ.14 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. புனரமைப்பு பணிகள் நேற்று தொடங்கியது. இங்குள்ள காலரிகள் மற்றும் மைதானத்தின் தென்புறத்தில் மேடை அமைப்புகளை இடித்து அகற்ற முடிவு செய்யப்பட்டிருக்கிறது.

காலரிகள் புதிதாக அமைக்கப்படும் அதேநேரத்தில் வெளிப்புறத்தில் வணிக வளாகமாக கடைகளை கட்டவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் இன்று தொடங்கியதை அடுத்து மைதானத்தின் உள்புறத்தில் நடைபயிற்சி மேற்கொள்ளவும், மைதானத்தினுள் விளையாடுவதற்கும் தடைவிதித்து தடுப்புகள் அமைக்கப்பட்டு வருகின்றன.

மைதானத்தின் வடபுறமுள்ள சிறுவர் பூங்கா, தென்புறமுள்ள உள்விளையாட்டு அரங்கம் ஆகியவற்றை வழக்கம்போல் பயன்படுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

மைதானத்தை புனரமைக்கும் அதேநேரத்தில் அதன் பழமையை வரும் தலைமுறைக்கு தெரியப்படுத்தும் வகையில் அதிலுள்ள பழமையான கல்வெட்டுகளை சேதப்படுத்தாமல் புதிய கட்டிடத்திலும் பதித்து வைக்க வேண்டும் என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பு.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x