பொதுமக்களுக்கு இலவசமாக கரோனா தடுப்பூசி வழங்கக்கோரிய வழக்கு: மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு

பொதுமக்களுக்கு இலவசமாக கரோனா தடுப்பூசி வழங்கக்கோரிய வழக்கு: மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு
Updated on
1 min read

தமிழகத்தில் போர்க்கால அடிப்படையில் பொதுமக்கள் அனைவருக்கும் இலவசமாக கரோனா தடுப்பூசி போடக் கோரிய வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ், உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு:

இந்தியாவில் கரோனாவால் 1.50 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். இந்தியா முழுவதும் முதல் நிலை களப்பணியாளர்களுக்கு கரோனா தடுப்பூசி போடப்படுகிறது.

தமிழகத்தில் 135 தனியார் மருத்துவமனைகளுக்கு கரோனா தடுப்பூசி போட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கரோனா தடுப்பூசிக்கு அரசு விலை நிர்ணயம் செய்யவில்லை. இதனால் ஏழை மக்கள் பயன்பெற முடியாத நிலை உள்ளது.

அரசுத் தரப்பில் பொதுமக்களுக்கு இன்னும் இலவச தடுப்பூசி போடப்படவில்லை. இது மக்கள் மத்தியில் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

எனவே,போர்க்கால அடிப்படையில் பொதுமக்கள் அனைவருக்கும் இலவசமாக கரோனா தடுப்பூசி போடவும், தனியார் மருத்துவமனையில் போடப்படும் கரோனா தடுப்பூசிக்கு விலை நிர்ணயம் செய்யவும் உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு தலைமை நீதிபதி சஞ்சிப் பானர்ஜி, நீதிபதி ஹேமலதா அமர்வில் விசாரணைக்கு வந்தது. பின்னர், கரோனா தடுப்பூசி தொடர்பாக நீதிமன்றம் உத்தரவிட முடியாது.

மனு தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை 8 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in