

திருவானைக்காவல் கோயிலில் முருகன் சன்னதியில் இருந்து முருகன் சிலை காணாமல் போனதாக, சமூக வலைதளங்களில் பரவும் தகவலை நம்ப வேண்டாம் என்று, கோயில் உதவி ஆணையர் கேட்டுக் கொண்டுள்ளார்.
திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோயில் வளாகத்தில் உள்ள மல்லப கோபுரத்தின் வலதுபுறம் பிள்ளையார் சன்னதியும், இடதுபுறம் வள்ளி-தெய்வானையுடன் கூடிய முருகன் சன்னதியும் உள்ளன.
இதனிடையே, முருகன் சன்னதியில் இருந்த சிலையைக் காணவில்லை என்று, முருகன் சிலை இல்லாமல் படம் ஒன்று சமூக வலைதளங்களில் பரவியது. இந்தச் செய்தி பக்தர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில், திருவானைக்காவல் கோயில் உதவி ஆணையர் செ.மாரியப்பன், முருகன் சிலையைக் காணவில்லை என்று வரும் தகவல்களை நம்ப வேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
இதுகுறித்து, அவர் இன்று (பிப். 25) கூறும்போது, "முருகன் சன்னதியில் சுவருடன் கூடிய புடைப்புச் சிற்பமாக வள்ளி-தெய்வானையுடன் முருகன் இருக்கிறார். கோயிலுக்கு அடிக்கடி வந்து செல்லும் பக்தர்களுக்கு இது நன்றாகத் தெரியும்.
சமூக வலைதளங்களில் பரவி வரும் புகைப்படத்தில் புடைப்புச் சிற்பத்தின் கீழே உள்ள பூஜைப் பொருட்கள் வைக்கும் சிமென்ட் மேடையை சிலை இருந்த பீடம் என்று தவறாகப் பதிவிட்டுள்ளனர். முருகன் சிலை மாயமானதாகப் பரவும் தகவல் முற்றிலும் வதந்தியாகும். இதை யாரும் நம்ப வேண்டாம்" என்றார்.