

திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு இரட்டை இலக்கத்தில் தொகுதிகளைக் கேட்டு வலியுறுத்துவோம் என, அக்கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
தஞ்சாவூரில் திருமண நிகழ்வுக்கு வந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் இன்று (பிப். 25) மதியம் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
"ஏற்கெனவே போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கு ஓய்வுக் காலத்துக்குரிய, பணப்பலன்கள் கொடுக்காமல் 8,000 கோடி ரூபாய் பாக்கி வைத்துள்ள நிலையில், தற்போது அரசு ஊழியர்களின் நிலைமையும் அதேபோல ஆக்குவதற்காகத்தான் ஓய்வு பெறும் வயதை 60 என அறிவித்துள்ளது.
இதனால், தமிழக இளைஞர்களின் வேலைவாய்ப்பு என்பது கடுமையாக பாதிக்கப்படும். இன்றைக்கு போக்குவரத்துக் கழக ஊழியர்களின் வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு தமிழக அரசுதான் காரணம்.
திமுக, காங்கிரஸ் உடன் கூட்டணிப் பேச்சுவார்த்தை குறித்துப் பேசுகிறது. அடுத்தகட்டமாக பிற கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தும். கம்யூனிஸ்ட் கட்சி ஏற்கெனவே இரட்டை இலக்கத்தில் போட்டி போட்டுள்ளது. வரும் தேர்தலிலும் இரட்டை இலக்கத்தில் போட்டியிட வலியுறுத்துவோம்.
டிடிவி தினகரனை பிரதமர் வேட்பாளராகக் கூட அறிவிக்கலாம். ஆனால், மக்கள் என்ன செய்யப் போகிறார்கள் என்பதுதான் கேள்வி. ஏற்கெனவே வெற்றி பெற்ற ஆர்.கே.நகர் தொகுதியில் டிடிவி தினகரன் நின்று டெபாசிட் வாங்கட்டும். பிறகு, அவர் முதல்வரா என்ன என்பதைப் பார்க்கலாம்.
சசிகலாவின் வருகை, தமிழ்நாட்டு அரசியலில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது. அதிமுகவில் வேண்டுமானால் கூடுதலாகக் குழப்பத்தை உண்டு பண்ணலாம். அதிமுக - சசிகலா இடையே ஏகப்பட்ட பிரச்சினைகள் உள்ளன. அவர்கள் எளிதில் இணைவது சாத்தியமல்ல.
பிரதமர் மோடி தேர்தல் முடியும் வரை தமிழகத்துக்கு அடிக்கடி வருவார். வடமாநிலங்களில் அவருக்கு செல்வாக்கு குறைந்து விட்டதால், தென்மாநில மக்களை ஏமாற்றுவதற்காக வந்து கொண்டிருக்கிறார்.
ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருப்பதாக முதலில் கூறியது, தற்போது துணை முதல்வராக உள்ள ஓ.பன்னீர்செல்வம்தான். அதுகுறித்து விசாரிக்கும் ஆணையத்தின் முன் இதுவரை ஓ.பன்னீ்ர்செல்வம் ஆஜராகவில்லை. இது தொடர்பாகத்தான் ஸ்டாலின் கருத்து கூறியுள்ளார்".
இவ்வாறு கே.பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.