Published : 25 Feb 2021 03:44 PM
Last Updated : 25 Feb 2021 03:44 PM

போக்குவரத்துத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம்: ஓசூர் - பெங்களூரு இடையே தமிழக அரசுப் பேருந்துகள் இன்றி பயணிகள் தவிப்பு

ஓசூர் பேருந்து நிலையத்தில் போக்குவரத்துத் தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் காரணமாக 10 சதவீதப் பேருந்துகளே இயக்கப்பட்டன. இதனால் ஓசூர் நகரில் இருந்து தமிழக நகரங்கள் மற்றும் பெங்களூரு உள்ளிட்ட வெளிமாநில நகரங்களுக்குப் பயணிக்க, தமிழக அரசுப் பேருந்துகள் இன்றி பயணிகள் தவிப்புக்கு ஆளாகினர்.

போக்குவரத்துத் தொழிலாளர்களுக்குப் புதிய ஊதிய ஒப்பந்தம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தொமுச, சிஐடியு உட்படத் தொழிற்சங்கக் கூட்டமைப்புகள் இணைந்து வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. இதன் எதிரொலியாக ஓசூர் பேருந்து நிலையத்தில் அதிகாலை 5 மணியில் இருந்தே 90 சதவீத அளவுக்கு அரசுப் பேருந்துகள் இயக்கப்படவில்லை. இதனால் அதிகாலை முதல் பேருந்து நிலையத்துக்கு வருகை தந்த பயணிகள், பேருந்துகள் இன்றித் திண்டாடும் நிலை ஏற்பட்டது.

ஓசூர்- பெங்களுரு இடையே தினமும் 20 நகரப் பேருந்துகளும் (அத்திப்பள்ளி வரை), 400 விரைவுப் பேருந்துகளும் (பெங்களூரு சாட்டிலைட் பேருந்து நிலையம் வரை) இயக்கப்பட்டு வருகின்றன. இவற்றில் தொழிலாளர் வேலைநிறுத்தம் காரணமாக 10 சதவீதப் பேருந்துகளே இயக்கப்பட்டன. இதனால் ஓசூர் நகரில் இருந்து பெங்களுரு நகருக்குப் பணி நிமித்தமாகவும், கல்வி, மருத்துவம் நிமித்தமாகவும் தினசரி சென்று வரும் பயணிகள் பாதிக்கப்பட்டனர்.

தமிழக அரசுப் பேருந்துகள் இயங்காத சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்டு 100க்கும் மேற்பட்ட கர்நாடக அரசுப் பேருந்துகள் ஓசூர் - பெங்களூரு இடையே தொடர்ந்து இடைவிடாமல் இயக்கப்பட்டன. 50க்கும் மேற்பட்ட தனியார் பேருந்துகளும் ஓசூர்- பெங்களுரு இடையே ஓடின. இதில் தனியார் பேருந்துகளில் வழக்கத்தை விடக் கட்டணம் கூடுதலாக வசூலிக்கப்பட்டதால் பயணிகள் பாதிக்கப்பட்டனர்.

அதேபோல ஓசூர் பேருந்து நிலையத்தில் இருந்து தேன்கனிக்கோட்டை, தளி, கெலமங்கலம், அஞ்செட்டி உள்ளிட்ட மலைக் கிராமங்களுக்கும் இதர கிராமப் பகுதிகளுக்கும் 10 சதவீத அளவுக்கு ஒரு சில பேருந்துகளே இயக்கப்பட்டன. போக்குவரத்துத் தொழிலாளர்களின் கோரிக்கைகள் நிறைவேறாத பட்சத்தில் இந்த வேலைநிறுத்தம் காலவரையற்ற வேலைநிறுத்தமாகத் தொடரும் என்று போக்குவரத்துத் தொழிலாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x