Published : 25 Feb 2021 03:18 PM
Last Updated : 25 Feb 2021 03:18 PM

காங்கிரஸைத் தூக்கி எறியுங்கள்; நாடு முழுவதும் மக்கள் புறக்கணிக்கின்றனர்: புதுச்சேரியில் பிரதமர் மோடி பேச்சு

பிரதமர் மோடி | படம்: எம்.சாம்ராஜ்

புதுச்சேரி

செ.ஞானபிரகாஷ்/அ.முன்னடியான்

புதுச்சேரியில் வரும் சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பின் அமையும் அரசு, மக்கள் விரும்பும் ஆட்சியைக் கொடுக்கும் என உறுதியளிக்கிறேன் என, பிரதமர் மோடி தெரிவித்தார்.

பல்வேறு திட்டங்களைத் தொடங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி இன்று (பிப். 25) புதுச்சேரிக்கு வருகை தந்தார். ஜிப்மரில் பல்வேறு திட்டங்களைத் தொடங்கி வைத்த பின்னர், லாஸ்பேட்டை விமான நிலைய சாலையில் நடைபெற்ற பாஜக பிரச்சார பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றார்.

இதில், தமிழில் 'வணக்கம்' கூறி பிரதமர் பேசியதாவது:

"புதுவையின் மேம்பாட்டுத் திட்டங்களைத் தொடங்கி வைத்துவிட்டு வந்துள்ளேன். இத்திட்டங்களுக்காக புதுவை மக்களுக்கு நல்வாழ்த்துகள். இந்திய நாடு சுயசார்பு நோக்கில் நகரும் தருணத்தில் புதுவைக்கும் பங்களிப்பு உள்ளது. நான் பல முறை இங்கு வந்துள்ளேன். தற்போது உங்களிடம் உற்சாகம், சந்தோஷம், மகிழ்ச்சி காற்று மாறி வீசுகிறது.

புதுவையில் பெரும் மகிழ்ச்சியைப் பார்க்கிறேன். இதற்கு இரண்டு காரணங்கள். ஒன்று தொடங்கப்பட்டுள்ள மேம்பாட்டுத் திட்டங்கள். 2-வது காரணம், காங்கிரஸ் கட்சியின் மோசமான நிர்வாகத்திடம் இருந்து விடுதலை பெற்றதைக் கொண்டாடுகிறீர்கள்.

2016-ல் புதுவை மக்கள் நம்பிக்கையோடு வாக்களித்தீர்கள். காங்கிரஸ் அரசு மக்களின் பிரச்சினைக்குத் தீர்வு தந்து திட்டங்களைத் தரும் என மக்கள் நினைத்தனர். ஆனால், காங்கிரஸ் அரசு 5 ஆண்டுகளில் மக்கள் நம்பிக்கையை நிராசையாக்கியுள்ளது. புதுவை மக்கள் மகிழ்ச்சியோடு இல்லை. அவர்களின் கனவு, நம்பிக்கை தகர்க்கப்பட்டுள்ளது. மக்களுக்குத் தேவையான அரசு கிடைக்கவில்லை.

நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி. | படம்: எம்.சாம்ராஜ்.

காங்கிரஸ் கட்சியின் மேலிடத் தலைவர்களுக்குச் சேவை செய்வதில் கவனம் செய்யும் அரசுதான் கிடைத்தது. காங்கிரஸ் கட்சியின் முன்னுரிமை மாறுபட்டது. முன்னாள் முதல்வர் நாராயணசாமி, கட்சித் தலைவரின் காலணியைத் தூக்குவதில் அக்கறை காட்டுவார். ஆனால், ஏழை மக்களின் வாழ்க்கையை மேம்படுத்த, ஏழ்மையை ஒழிக்க அவர் முன்வரவில்லை. டெல்லியைச் சேர்ந்த ஒரு குழுவினர், புதுவையை ஆட்சி செய்தனர். வரும் சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பின் அமையும் அரசு, மக்கள் விரும்பும் ஆட்சியைக் கொடுக்கும் என உறுதியளிக்கிறேன்.

புதுவையில் காங்கிரஸ் அரசு அனைத்துத் துறைகளையும் சீரழித்துள்ளது. பாரம்பரிய நூற்பாலைகள் மூடப்பட்டுள்ளன. உள்ளூர் தொழில்கள் நசிந்துள்ளன. மக்களுக்கு வேலை செய்ய காங்கிரஸுக்கு விருப்பமில்லை. அது பரவாயில்லை. மற்றவர்கள் வேலை செய்வதையும் ஏன் விரும்பவில்லை என்பதுதான் புரியவில்லை. காங்கிரஸ் அரசு மத்திய அரசின் திட்டங்களைச் செயல்படுத்த ஒத்துழைக்கவில்லை. மத்திய அரசு நிதியைப் பயன்படுத்த முன்வரவில்லை. கடல்சார் மேம்பாட்டுத் திட்டங்களை நிறைவேற்றவில்லை.

சில நாட்கள் முன்பு வீடியோ பார்த்தேன். ஒரு மீனவப் பெண் புயல், வெள்ளக் காலத்தில் படும் அவதியை வலியோடும், வேதனையோடும் கட்சித் தலைவரிடம் தெரிவிக்கிறார். ஆனால், நாராயணசாமி உண்மையைச் சொல்லாமல், அதனை மாற்றி மொழிபெயர்ப்பு செய்தார். நாட்டு மக்களிடமும், கட்சித் தலைமையிடமும் நாராயணசாமி பொய் கூறி வருகிறார். காங்கிரஸார் பொய் கூறும் கலாச்சாரம் கொண்டவர்கள். இவர்களால் மக்களுக்குச் சேவையாற்ற முடியுமா?

பிரதமருக்கு மாலை அணிவித்து மரியாதை. படம்: எம்.சாம்ராஜ்

காங்கிரஸ் அடுத்தவர்களை ஜனநாயக விரோதிகள் என அழைக்கத் தவறியதில்லை. அவர்களின் செயல்பாட்டை முதலில் கண்ணாடியில் பார்க்க வேண்டும். புதுவையில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த மறுக்கின்றனர். உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும் காங்கிரஸ் தேர்தல் நடத்த முன்வரவில்லை. இந்த ஜனநாயக விரோத மனநிலையைப் புதுவை மக்கள் தண்டிப்பார்கள். ஜம்மு, காஷ்மீரில் தேர்தல் நடைபெற்றது. குஜராத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றது. பிற கட்சிகளை விட பாஜகவினர் 10 மடங்கு வெற்றி பெற்றனர். அங்கெல்லாம் தேர்தல் நடத்த முடியும். ஆனால், புதுவையில் நடத்த முடியாது. காங்கிரஸின் இந்த ஜனநாயக விரோதப் போக்கை மக்கள் தண்டிப்பார்கள்.

காங்கிரஸின் கலாச்சாரத்தைப் புதுவையில் 5 ஆண்டாகப் பார்க்கிறீர்கள். தேசிய அளவில் எப்படிச் செயல்படுகிறார்கள் என நாங்கள் பார்த்து வருகிறோம். காங்கிரஸார் பிரித்தாளும் கொள்கையைப் பயன்படுத்துகின்றனர். மக்களைப் பிரித்து பொய் கூறி அவர்களை ஆட்சி செய்ய வேண்டும் என்பதே அவர்களின் கலாச்சாரம்.

சில சமயம் காங்கிரஸார் மாநிலங்களுக்கு இடையில் பிரச்சினைகளை எழுப்புவார்கள். மக்களைப் பிரித்து எதிரிகளாக்கி அரசியல் செய்வார்கள். பொய் சொல்வதில் அனைத்துப் பதக்கமும் பெறத் தகுதியானவர்கள் காங்கிரஸ் தலைவர்கள். மீனவ நலத்துறைக்கு அமைச்சகம் அமைப்போம் என்கின்றனர். தேசிய ஜனநாயக கூட்டணி 2019-ல் மீன்வளத்துறைக்கு தனி அமைச்சகம் உருவாக்கியுள்ளது. கடந்த ஆண்டுகளை விட 80 சதவீதம் அதிக நிதியை ஒதுக்கியுள்ளோம். வாஜ்பாய் அரசு மலைவாழ் மக்களுக்குத் தனி அமைச்சகம் ஏற்படுத்தித் தந்தது. பொய் கூறுவதால்தான் காங்கிரஸை மக்கள் ஏற்க மறுக்கின்றனர்.

நிகழ்ச்சி மேடையில் பிரதமர் மோடி, பாஜக தலைவர்கள். படம்: எம்.சாம்ராஜ்.

நாடு முழுவதும் காங்கிரஸை மக்கள் புறக்கணிக்கின்றனர். இந்திய சரித்திரத்தில் 100-க்கும் குறைவான எம்.பி.க்களை காங்கிரஸ் பெற்றது. காங்கிரஸ் மன்னர் ஆட்சி, குடும்ப ஆதிக்க தலைமுறை ஆட்சி கொள்கை கொண்டது. வேண்டியவர்களுக்கு மட்டும் நல்லது செய்யும் ஆட்சி முடிவுக்கு வந்துவிட்டது. முற்போக்குக் கொண்ட இளைஞர்களுக்கான நாடாக இந்தியா மாறி வருகிறது.

புதுவையின் தேர்தல் அறிக்கையாக ஒன்றைக் கூற விரும்புகிறேன். 'பெஸ்ட்' மாநிலமாக புதுவை மாற்றப்படும். பி என்றால் 'பிசினஸ்', இ என்றால் 'எஜூகேஷன்', எஸ் என்றால் 'ஸ்பிரிச்சுவல்' - ஆன்மிகம், டி என்றால் 'டூரிசம்' ஆகிய துறைகளில் முதன்மை பெற்ற மாநிலமாக புதுவையை தேசிய ஜனநாயகக் கூட்டணி மாற்றும். புதுவையை சிறந்த மாநிலமாக மாற்றுவதே என் தேர்தல் அறிக்கை.

புதுவை இளைஞர்கள் திறமை வாய்ந்தவர்கள். அவர்களுக்குச் சரியான ஆதரவு தேவை. இதனை தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு தரும். தகவல் தொழில்நுட்பம், மருத்துவம், ஜவுளி உள்ளிட்ட பல துறைகளை ஊக்குவிக்கும். புதிய தொழில்களை ஸ்டார்ட் அப் இந்தியா திட்டத்தின் மூலம் ஊக்கப்படுத்தி வருகிறோம். இதனால் பல சுமைகள் குறைந்துள்ளன. தொழில் முனைவோருக்கு பல திட்டங்களைக் கொண்டு வந்துள்ளோம்.

கல்விக்கான உள்கட்டமைப்பு திட்டங்களில் மத்திய அரசு கவனம் செலுத்தி வருகிறது. 2020-ல் தேசிய கல்விக் கொள்கை உருவாக்கியுள்ளோம். கற்றலில் பல மாற்றங்களைக் கொண்டுவந்துள்ளோம். புதிய தொழில் கொள்கை, கல்வி நிறுவனங்களில் மாற்றம் கொண்டுவரும். நாடு முழுவதும் பொறியியல், மருத்துவக் கல்லூரிகளை அதிகரித்து வருகிறோம்.

கல்வியில் மொழி ஒரு தடையாக உள்ளது. எனவே, மருத்துவம், தொழில் கல்வியில் உள்ளூர் மொழியில் படிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதனால், மாணவர்கள் பயன்பெறுவர். பல்வேறு கலாச்சாரம் சங்கமிக்கும் இடமாக புதுவை உள்ளது.

ஆன்மிகச் சுற்றுலாவுக்கான அற்புதப் பகுதியாகவும் உள்ளது. இங்கு மக்கள் ஆன்மிகத் தேடலை உணர வருகின்றனர். உலகெங்கும் உள்ள சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் தகுதியான நகரமாக புதுவை உள்ளது. கடல், காற்று, மண் என எல்லா வளமும் புதுவையில் உள்ளது. உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி வருகிறோம். இதனால் கூடுதலாக சுற்றுலாப் பயணிகள் ஈர்க்கப்படுவார்கள். இதனால், பொருளாதார வருவாயும் உயரும்.

கடந்த சில ஆண்டுகளாக சுற்றுலாத்துறை வேகமாக வளர்ந்து வந்துள்ளது. சுற்றுலாத்துறையின் முக்கியத்துவமான இடத்தில் 65-ம் இடத்திலிருந்து 34-ம் இடத்துக்கு இந்தியா முன்னேறியுள்ளது. சுற்றுலாவால் பொருளாதாரம் அதிகரித்துள்ளது.

2 துறைகளில் நாம் கவனம் செலுத்த வேண்டும். கடல்சார்ந்த துறைகளின் மேம்பாடு, கூட்டுறவுத் துறையை பலப்படுத்த வேண்டும். நீலப்புரட்சி செய்யாமல் இந்தியா முழுமையடையாது. சாகர்மாலா திட்டங்களின் மூலம் கடற்கரை, மீனவ சமுதாயத்தில் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது. கடந்த பட்ஜெட்டில் கடற்கரை மாநிலங்களுக்கு நிதி ஒதுக்க அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. பல இடங்களில் துறைமுகம் அமைத்து வருகிறோம். தற்போதுள்ள துறைமுகத்தை திறமையானதாக மாற்றி வருகிறோம். மீனவர்களுக்கு கடனுதவி, கடன் அட்டை வழங்குவது, நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதற்கு ஏற்பாடுகள் செய்துள்ளோம்.

மீன்வளத்துறைக்கு ரூ.46 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கியுள்ளோம். 2014-ம் ஆண்டு ஒதுக்கியதை விட 50 சதவீதம் அதிகம். இந்தியாவில் மீன் ஏற்றுமதி கணிசமாக உயர்ந்துள்ளது.

தலைமையின் கைப்பாவையாக இருந்து காங்கிரஸ் கூட்டுறவு துறையை நசித்துவிட்டது. குஜராத்தில் கூட்டுறவு பல மாற்றங்களை மக்கள் வாழ்வில் கொண்டுவந்துள்ளது. புதுவையில் கூட்டுறவுத் துறையை துடிப்பானதாக மாற்றுவோம். புதுவை மக்களுக்கு குறிப்பாக பெண்களின் முன்னேற்றத்துக்கு உதவிகரமாக மாற்றப்படும்.

நான் புதுவையில் செய்ய வேண்டிய பணிகள் ஏராளமாக உள்ளன. மாநில முன்னேற்றத்துக்கு விரோதியான காங்கிரஸைத் தூக்கி எறியுங்கள். தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு ஆதரவு தாருங்கள். புதுவையின் மேன்மை, பெருமையை மீட்டெடுக்க பாஜக கூட்டணிக்கு வாக்களியுங்கள். புதுவைக்கு நல்லாட்சியைத் தாருங்கள்".

இவ்வாறு மோடி பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x