காங்கிரஸுக்கு எத்தனை தொகுதிகள்? அண்ணா அறிவாலயத்தில் பேச்சுவார்த்தை

காங்கிரஸுக்கு எத்தனை தொகுதிகள்? அண்ணா அறிவாலயத்தில் பேச்சுவார்த்தை
Updated on
1 min read

திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கான தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை அண்ணா அறிவாலயத்தில் இன்று தொடங்கியது. இதில் காங்கிரஸ் கட்சி சார்பில் அமைக்கப்பட்ட குழு, திமுக பொதுச் செயலாளர் தலைமையிலான குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்தியது.

சட்டப்பேரவை பொதுத்தேர்தல் குறித்த அறிவிப்பு அடுத்த வாரம் வெளியாக உள்ளது. இதில் திமுக, காங்கிரஸ், மதிமுக, இடதுசாரி கட்சிகள், விசிக, மமக எனக் கடந்த முறை மக்கள் நலக் கூட்டணியில் பங்கேற்ற பெரும்பாலான கட்சிகள் அணிவகுத்து நிற்கின்றன.

அதிமுக கூட்டணியில் பாஜக, பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் உள்ளன. இதில் பாமக, தேமுதிக தங்கள் நிலைப்பாட்டை இன்னும் அறிவிக்கவில்லை. மக்கள் நீதி மய்யம், அமமுக, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் தனித்தனியாக நிற்கின்றன.

கூட்டணிக் கட்சிகளுக்கான தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையை தமிழகத்தின் இரண்டு பெரிய கட்சிகளும் தொடங்கியுள்ளன. இதில் திமுக தனது முதல் கட்டப் பேச்சுவார்த்தையை காங்கிரஸ் கட்சியுடன் தொடங்கியுள்ளது. காங்கிரஸ் கட்சியின் சார்பில் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்த மேலிடப் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் தலைமையில் கே.எஸ்.அழகிரி, உம்மன் சாண்டி, கே.ஆர்.ராமசாமி, ரன்தீப் சிங் சுர்ஜேவாலா ஆகியோர் பங்கேற்றனர்.

திமுக சார்பில் பொதுச் செயலாளர் துரைமுருகன் தலைமையில் கனிமொழி உள்ளிட்டோர் பங்கேற்றனர். முதற்கட்டப் பேச்சுவார்த்தை நடந்த நிலையில், வெளியில் வந்த காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ்.ழகிரி பேச்சுவார்த்தை திருப்திகரமாக இருந்ததாகத் தெரிவித்தார்.

காங்கிரஸ் தரப்பில் மேலிடப் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் டெல்லியில் தலைமையிடம் ஆலோசனை நடத்திவிட்டு சென்னை வந்த நிலையில் நேற்றிரவு சத்தியமூர்த்தி பவனில் திமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துவது குறித்து ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி கடந்த 2016 தேர்தலில் 41 தொகுதிகளில் நின்றது. இம்முறை 35 தொகுதிகள் கேட்க முடிவெடுத்ததாகக் கூறப்படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in