

பணியிடங்களில் நடைபெறும் பாலியல் அத்துமீறல்கள் தொடர்பாக விசாரிப்பதற்கு நிரந்தர உள்ளக (Domestic Enquiry committee) விசாரணைக் குழுக்கள் அமைக்க வேண்டும் என்ற சட்டபூர்வ ஏற்பாடு பெருமளவு பெண்கள் பணிபுரியும் காவல்துறையில் அமைக்கப்படவில்லை என்பது காவல்துறையில் நிலவிவரும் ஆணாதிக்க சார்பு நிலையை வெளிப்படுத்துகிறது என முத்தரசன் விமர்சித்துள்ளார்.
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் இன்று வெளியிட்ட அறிக்கை:
''காவல்துறை உயர் அதிகாரியான சட்டம் - ஒழுங்கு சிறப்பு டிஜிபி , முதல்வர் பங்கேற்ற அரசு நிகழ்ச்சியின் பாதுகாப்புப் பணிக்காகச் சென்ற இடத்தில் பெண் ஐபிஎஸ் அதிகாரியிடம் அத்துமீறி நடந்துள்ளதாகப் புகார் எழுந்துள்ளது. இதனையொட்டி அவர் காத்திருப்போர் பட்டியலில் வைத்திருப்பதாகவும், அவர் மீதான குற்றச்சாட்டு குறித்து விசாரிக்கக் குழு அமைக்கப்பட்டிருப்பதாகவும் அரசு அறிவித்துள்ளது.
கடுமையான குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ள அவரை உடனடியாகத் தற்காலிகப் பணிநீக்கம் செய்ய வேண்டும். அப்போதுதான் விசாரணை எந்தவித அழுத்தங்களும் இல்லாமல் நடைபெறுவது ஓரளவு சாத்தியமாகும். பணியிடங்களில் நடைபெறும் பாலியல் அத்துமீறல்கள் தொடர்பாக விசாரிப்பதற்கு நிரந்தர உள்ளக (Domestic Enquiry committee) விசாரணைக் குழுக்கள் அமைக்க வேண்டும் என்ற சட்டபூர்வ ஏற்பாடு பெருமளவு பெண்கள் பணிபுரியும் காவல்துறையில் அமைக்கப்படவில்லை என்பது காவல்துறையில் நிலவிவரும் ஆணாதிக்கச் சார்பு நிலையை வெளிப்படுத்துகிறது.
இந்த நிலையில் “காத்திருப்போர் பட்டியல்” என்பது குற்றம் புரிந்தவரைக் காப்பாற்றும் பதுங்குக் குழியாகும். எனவே, சம்பந்தப்பட்ட டிஜிபியை உடனடியாகத் தற்காலிகப் பணிநீக்கம் செய்து, நேர்மையான விசாரணைக்கு உத்தரவிடுமாறு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி முதல்வரைக் கேட்டுக் கொள்கிறது''.
இவ்வாறு முத்தரசன் தெரிவித்துள்ளார்