Published : 25 Feb 2021 10:24 AM
Last Updated : 25 Feb 2021 10:24 AM

பொருளாதாரச் சிக்கலில் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை என்பதை அரசு உறுதி செய்ய வேண்டும்: உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை

தனியார் ஒப்பந்த அடிப்படையில் பல ஆண்டுகள் பணியாற்றிய ஆர்.டி.ஓ. அலுவலக ஊழியர்களைப் பணி நிரந்தரம் செய்ய 2 மாதத்தில் முடிவெடுக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், பணி நீக்கம் எனும் கத்தி அவர்கள் தலைமீது தொங்குவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று தெரிவித்துள்ளது.

தமிழகம் முழுவதும் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் எனும் ஆர்.டி.ஓ. அலுவலகங்களில் புரோகிராமர்கள், சிஸ்டம் அனலிஸ்ட்ஸ் போன்ற பணியிடங்களுக்கு தனியார் ஏஜென்சி மூலம், ஒப்பந்த அடிப்படையில் பணியாளர்கள் நியமிக்கப்பட்டனர். 2005-ம் ஆண்டு முதல் 2018-ம் ஆண்டு வரை தொடர்ந்து பணியாற்றி வரும் இவர்களுக்குப் பணி நிரந்தரம் வழங்க போக்குவரத்து ஆணையர், உள்துறைச் செயலாளருக்கு 2014 மற்றும் 2017-ம் ஆண்டுகளில் பரிந்துரைகள் அனுப்பினார்.

ஆனாலும், பணி நிரந்தரம் வழங்கப்படவில்லை. இந்நிலையில், தங்களுக்குப் பணி நிரந்தரம் வழங்கவில்லை எனக்கூறி, சிவகுமார், கார்த்திகேயன் உள்பட 27 பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.

அந்த மனுக்களில், வணிகவரித் துறை, நகராட்சி நிர்வாகம் போன்ற துறைகளில் பணியாற்றியவர்களுக்கு, பணி நிரந்தரம் வழங்கப்பட்டுள்ளதால், தங்களுக்கும் பணி நிரந்தரம் வழங்க வேண்டும் எனக் கோரியிருந்தனர்.

இந்த வழக்குகளுக்கு பதிலளித்த உள்துறைச் செயலாளர், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலமோ, வேலைவாய்ப்பு அலுவலகம் மூலமோக தேர்வு செய்யப்படாத இவர்களுக்குப் பணி நிரந்தரம் வழங்க முடியாது. தனியார் நிறுவனம் மூலம் ஒப்பந்தப் பணியில் பணியாற்றிய இவர்களுக்குப் பணி நிரந்தரம் வழங்கும்படி, போக்குவரத்து ஆணையர் அளித்த பரிந்துரைகள் நிராகரிக்கப்பட்டுள்ளன எனத் தெரிவிக்கப்பட்டது.

இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதி வைத்தியநாதன், தற்காலிக அடிப்படையில் 10 முதல் 15 ஆண்டுகள் வரை பணியாற்றிய இவர்கள், பணி நிரந்தரம் கிடைக்கும் என, இலவு காத்த கிளி போல காத்திருக்கின்றனர். உயர் நீதிமன்றம் மற்றும் பிற துறைகளில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றியவர்கள் பணி நிரந்தரம் செய்யப்பட்டுள்ள நிலையில், இவர்களைப் பணி நிரந்தரம் செய்ய அரசு தயங்குவது ஏன் எனத் தெரியவில்லை எனத் தெரிவித்து, இவர்களுக்குப் பணி நிரந்தரம் வழங்குவது குறித்து இரண்டு மாதங்களில் முடிவெடுத்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என, உள்துறைச் செயலாளருக்கு உத்தரவிட்டார்.

மேலும், உயர் நீதிமன்றம் மற்றும் மதுரைக் கிளையில் பொதுப் பணித் துறை மூலம் பணிக்கு அனுப்பப்பட்டுள்ள ஒப்பந்தப் பணியாளர்களையும் பணி நிரந்தரம் செய்வது குறித்துப் பரிசீலிக்க வேண்டும் என அறிவுறுத்திய நீதிபதி, வேலையில்லாமல் பொருளாதாரச் சிக்கலில் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை என்பதை அரசு உறுதி செய்ய வேண்டும் எனவும், பணிப் பறிப்பு எனும் கத்தி இவர்களின் தலை மீது தொங்கிக் கொண்டிருப்பதை அனுமதிக்க முடியாது எனவும் சுட்டிக் காட்டியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x