Published : 25 Feb 2021 09:55 AM
Last Updated : 25 Feb 2021 09:55 AM

சிறப்பு டிஜிபி மீது உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் ஆட்சிக்கு வந்தால் சும்மா விடமாட்டோம்: ஸ்டாலின் எச்சரிக்கை

சென்னை

சிறப்பு டிஜிபியைக் காத்திருப்போர் பட்டியலில் வைத்திருக்கிறார்கள் என்ற செய்தி எனக்குக் கிடைத்திருக்கிறது. உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் இதை நாங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு சும்மா விடமாட்டோம் என்று திமுக தலைவர் ஸ்டாலின் எச்சரித்துள்ளார்.

திமுக தலைவர் ஸ்டாலின் அவரது சட்டப்பேரவைத் தொகுதியான கொளத்தூரில் கட்டப்பட்டுள்ள காமராஜர் திருமண மண்டபத்தை நேற்றிரவு திறந்துவைத்துப் பேசியதாவது:

“நீங்கள் எல்லாம் வேண்டுகோள் வைக்கிறீர்கள். அந்த வேண்டுகோளை நான் முடிந்தவரை நிறைவேற்றிக் கொண்டு இருக்கிறேன். இப்போது நான் உங்களிடத்தில் ஒரு வேண்டுகோள் வைக்கிறேன். வரவிருக்கும் தேர்தலில் நீங்கள் ஒரு சிறப்பான ஆட்சியை தமிழகத்தில் உருவாக்க வேண்டும் என்ற ஒரு வேண்டுகோளை உங்கள் முன் வைக்கிறேன்.

ஏனென்றால் இப்போது ஒரு ஆட்சி இருக்கிறது. சட்டம்- ஒழுங்கைப் பாதுகாக்க வேண்டிய பாதுகாப்புப் பணியில் இருக்கும் காவல்துறை இன்றைக்கு என்ன நிலையில் உள்ளது என்று பார்த்தீர்கள் என்றால் இன்றைக்கு இந்து பத்திரிகை பார்த்திருப்பீர்கள். காலை பத்திரிகைகளில் படித்திருப்பீர்கள்.

ஒரு சிறப்பு டிஜிபி பாலியல் விவகாரத்தில் ஈடுபட்டிருக்கிறார். இதுதான் வெட்கக்கேடு. அது என்ன நிலைமையில், முதல்வருக்குப் பாதுகாப்பு தரும் காவலர்கள், அதில் பெண் காவலர்களும் இருக்கிறார்கள். ஒரு பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு ஒரு சிறப்பு டிஜிபி பாலியல் தொல்லை கொடுத்து இருக்கிறார். அது இன்றைக்கு எல்லாம் பத்திரிகைகளில் செய்தியாக வந்திருக்கிறது.

நான் அந்தச் செய்தியைப் படித்துவிட்டு அதிர்ச்சி அடைந்தேன். சட்டம்-ஒழுங்கைப் பாதுகாக்க வேண்டிய ஒரு சிறப்பு டிஜிபியே இப்படி ஒரு கேவலமான ஒரு சூழலில் ஈடுபட்டிருக்கிறார். இது தேவையா? இது நியாயமா?

முதல்வருடைய பாதுகாப்பிற்குச் சென்ற காவல்துறையே இப்படிச் சென்றிருப்பதால் அவர்கள் மூடி மறைக்கிறார்கள் என்று நான் இன்று ஒரு அறிக்கை விட்டு, மதியம் எல்லாத் தொலைக்காட்சிகளிலும் அது வந்தது. மாலை பத்திரிகைகளிலும் வந்திருக்கிறது.

இப்போது நான் வீட்டிலிருந்து இந்த நிகழ்ச்சிக்கு வருகிறபோது ஒரு செய்தியைக் கேள்விப்பட்டேன். அந்த சிறப்பு டிஜிபியை காத்திருப்போர் பட்டியலில் வைத்திருக்கிறார்கள் என்ற செய்தி எனக்குக் கிடைத்திருக்கிறது. உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் இதை நாங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு சும்மா விடமாட்டோம் என்பதையும் இந்த நேரத்தில் தெரிவித்துக்கொண்டு, எதற்காக இதைச் சொல்கிறேன் என்றால், இந்த அளவிற்கு இன்றைக்கு சட்டம்- ஒழுங்கு எப்படி எல்லாம் கெட்டுப்போய் இருக்கிறது என்பதற்கு இன்றைக்கு காவல்துறை அதற்கு ஒரு உதாரணமாக விளங்கிக் கொண்டிருக்கிறது.

அந்தக் காவல்துறை என்பது எவ்வளவு சிறந்த துறையாக தலைவர் இருந்த காலத்தில், அண்ணா இருந்த காலத்தில், காமராஜர் காலத்தில் இருந்தது. அதை இன்றைக்கு எப்படி எல்லாம் கேவலப்படுத்தும் நிலைக்கு உருவாக்கி இருக்கிறார்கள் என்பதைச் சிந்தித்துப் பார்க்கும்போது வேதனையாக இருக்கிறது”.

இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x