

தேர்தல் நெருங்க நெருங்க எதிர்க்கட்சிகள் விடும் ஏவுகணைகளை சமாளிப்பதைவிட, சொந்தக் கட்சியினர் கொண்டுவரும் பஞ்சாயத்துகளை சமாளிப்பது முதல்வருக்கு பெரும் பாடாகிவிடும் போலிருக்கிறது. திருப்பூர் மாவட்டத்தில் தேர்தல் பிரச்சாரம் செய்த முதல்வர், பல்லடம் தொகுதியில் பேசும்போது, தொகுதியின் முன்னாள் எம்எல்ஏ-வான கே.எஸ்.துரைமுருகனின் பெயரைச் சொல்லாமல் விட்டுவிட்டார்.
இதற்கு அந்த இடத்திலேயே அமைச்சர் வேலுமணியிடம் பஞ்சாயத்துக் கூட்டிய துரைமுருகன், “முதல்வர் உரைக்கு கட்சிப் பொறுப்பாளர்கள் பட்டியலை தயாரித்துக் கொடுப்பவர், வேண்டுமென்றே எனது பெயரைப்புறக்கணிக்கிறார். இதற்கு முன்பும் இப்படித்தான் நடந்தது. நான் இந்தக் கட்சியில் இருக்கட்டுமா போகட்டுமா?” என்று சவுண்டு விட்டார்.
அவரை சாந்தப்படுத்திய அமைச்சர் வேலுமணி, “உங்கள் பெயரை யார் அப்படி புறக்கணிப்பது?”என்று கேட்க, “வேற யாரு... மாவட்ட அமைச்சரா இருக்கிற இவர்தான்” என்று அருகில் நின்ற அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணனை கை நீட்டினார். இதைச் சற்றும் எதிர்பார்க்காத வேலுமணி, “சரி, சரி... இந்தப் பஞ்சாயத்தை அப்புறம் பேசிக்கலாம்” என்று சொல்லி, அப்போதைக்கு ஆட்டையைக் கலைத்துவிட்டார்.