Published : 23 Nov 2015 03:14 PM
Last Updated : 23 Nov 2015 03:14 PM

திருமணம் செய்யாமல் குடும்பம் நடத்திய பெண்ணுக்கு உரிமை கொண்டாடியவருக்கு அபராதம்: சென்னை வெள்ள நிவாரணத்துக்கு வழங்க உத்தரவு

திருமணம் செய்யாமல் குடும்பம் நடத்திய பெண்ணுக்கு உரிமை கொண்டாடிய இளைஞருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்த உயர் நீதிமன்றம், அந்தப் பணத்தை சென்னை வெள்ள நிவாரணத்துக்கு வழங்க உத்தரவிட்டது.

நெல்லை மாவட்டம், வள்ளி யூரைச் சேர்ந்த பி.சதீஷ்குமார். இவர் உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனுவில், நானும் சுபாஷினி என்பவரும் சிறுவயது முதல் காதலித்தோம். இருவரும் வேறு வேறு கல்லூரியில் பயின்றபோதும் காதல் தொடர்ந்தது. இருவரும் நெருங்கி பழகியதால் சுபாஷினி கர்ப்பமானார். அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. நான் 2007-ல் வேலைக்காக வெளிநாடு சென்றேன். அப்போது சுபாஷினியை அவரது தந்தையும், சகோதரரும் இலங்கைக்கு அழைத்துச் சென்றனர். சுபாஷினியை 2011-ல் மற்றொருக்கு திருமணம் செய்து வைத்தனர். பின்னர் அவர் விவாகரத்து செய்துவிட்டார்.

நான் 2011-ல் கவிதா என்பவரை மணந்தேன். எங்களுக்கு குழந்தை உள்ளது. 2012-ல் சுபாஷினி என்னை தொடர்புகொண்டு தன்னையும், குழந்தையையும் கவனிக்குமாறு கூறினார். தற்போது கவிதா, சுபாஷினி மற்றும் இரு குழந்தைகளையும் நான் கவனித்து வருகிறேன். தற்போது சுபாஷினி மற்றும் குழந்தையை அவரது தந்தை, சகோதரர் இருவரும் சட்டவிரோத காவலில் வைத்துள்ளனர். சுபாஷினியை வேறு ஒருவருக்கு திருமணம் செய்து வைக்க முயற்சிக்கின்றனர். இதனால் சுபாஷினி, குழந்தையை மீட்டு என்னிடம் ஒப்படைக்கவும், தந்தை, சகோதரர் மீது நடவடிக்கை எடுக்கவும் வள்ளியூர் போலீஸில் புகார் அளித்தேன். அந்தப்புகாரின் பேரில் வழக்கு பதிய உத்தரவிட வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை விசாரித்து நீதிபதி எஸ்.வைத்தியநாதன் பிறப்பித்த உத்தரவு: இதே பிரச்சினைக்காக மனுதாரர் ஏற்கெனவே ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம் மனுதாரருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்து 6.10.2015-ல் தள்ளுபடி செய்துள்ளது.

தற்போது மற்றொரு மனு மூலம் பின்வாசல் வழியாக நீதிமன்றம் வந்துள்ளார். இந்த மனுவில் மனுதாரர் தனக்கும் சுபாஷினிக்கும் திருமணம் நடைபெற்றதாகக் கூறவில்லை. இருப்பினும் அவரை மனைவி எனக்குறிப்பிட்டுள்ளார். இது உரிமையியல் பிரச்சினை. இதற்காக அவர் உரிமையில் நீதிமன்றம்தான் செல்ல வேண்டும் என ஏற்கெனவே உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதன் பிறகும் மனுதாரர் மீண்டும் நீதிமன்றம் வந்திருப்பது கண்டனத்துக்குரியது. இதனால் மனுதா ரருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது. இந்த அபராதத் தொகையை நான்கு வாரத்தில் சென்னை வெள்ள நிவாரணத்துக்கு வழங்குவதற்காக தலைமை நீதிபதி நிவாரண நிதிக்கு அனுப்ப வேண்டும் என நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x