Published : 25 Feb 2021 03:16 AM
Last Updated : 25 Feb 2021 03:16 AM

புதுச்சேரி, காரைக்காலில் நபார்டு வங்கி நிதி உதவியுடன் சாலை, பாலங்கள் செப்பனிட ரூ.80 கோடி ஒதுக்கீடு: துணைநிலை ஆளுநர் தமிழிசை ஒப்புதல்

புதுச்சேரியில் நபார்டு வங்கி நிதி உதவியுடன் பொதுப்பணித்துறை மூலம் 11 இடங்களில் ரூ.80 கோடிமதிப்பில் சாலைகளை செப்பிடவும், பாலங்களை மறுகட்டமைப்பு செய்யவும் துணைநிலை ஆளுநர் தமிழிசை ஒப்புதல் அளித்துள்ளார்.

அதன் விவரம்:

காரைக்கால் – திருநள்ளாறு சாலையை ரூ.4.79 கோடியில் மேம்படுத்தவும், கோர்கோடு சாலையில் குறுவையாறு பாலத்தில் இருந்து குமாரமங்கலம் பாலம் வரையிலும், கோர்க்காடு ஏரிக்கரை சாலை ஆகியவற்றை ரூ.3.44 கோடியில் செப்பனிடவும், வழுதாவூர் சாலையில் ஏஎப்டி சுற்றுச்சுவரில் இருந்து கூனிமேடு சந்திப்பு வரை ரூ.9.92 கோடியில் மேம்படுத்தவும் ஒப்புதல் அளித்துள்ளார். மேலும், கொம்பாக்கம் சாலையை ரூ.8.56 கோடியில் அகலப்படுத்தவும், புதுச்சேரியில் உள்ள சாலைகளை செப்பனிடவும், மேம்படுத்தவும், யு மற்றும் எல் வடிகால் வாய்க்கால் கட்டு மானத்துக்கு மொத்தமாக ரூ.16.46 கோடி ஆளுநர் ஒப்புதல் கொடுத்துள்ளார்.

இதுதவிர, திருநள்ளாறு முதல் நல்லாத்தூர் கிராமம் வரை உள்ள சொரக்குடி சாலையை ரூ.6.41 கோடியில் மேம்படுத்தவும், நிரவி சாலை மற்றும் டி.ஆர்.பட்டினத்தில் உள்ள சாலைகளை ரூ.8.08 கோடியில் மேம்படுத்தவும், கிருமாம்பாக்கம் நுழைவு வாயிலில் இருந்து வம்புப்பட்டு வரை உள்ள சாலையை ரூ.3.85 கோடியில் மேம்படுத்தவும், மூலக்குளத்தில் இருந்து மூலக்கடை வரையில் உள்ள பெரம்பை சாலையை ரூ.7.90 கோடியில் அகலப்படுத்தவும் அனுமதி அளித்துள்ளார்.

நெட்டப்பாக்கத்தில் மத கடிப்பட்டு சந்திப்பில் இருந்து பண்டசோழநல்லூர் சந்திப்பு வரை உள்ள சாலையை ரூ.3.93 கோடியில் மேம்படுத்தவும், கம்பளிக்காரன் குப்பத்தில் உள்ள நத்தமேடு சந்திப்பு, நெட்டப்பாக்கத்தில் உள்ள புதுக்குப்பம் சாலை ஆகிய பகுதிகளில் உள்ள பாலங்களை ரூ.7.06 கோடி மறுகட்டமைப்பு செய்யவும் ஆளுநர் தமிழிசை ஒப்புதல் அளித்துள்ளார்.

புயல் பெருமழைக்குப் பின் சாலைகள் சீரமைக்கப்படாமல் இருந்தன. இதனால் வாகன ஓட்டிகள் கடும் பாதிப்படைந்தனர். அரசு தரப்பில் பல்வேறு காரணங்கள் கூறப்பட்டன. இது கடுமையாக விமர்ச்சிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் ஆளுநர், சாலை சீரமைப்புக்கு ரூ. 80 கோடி ஒதுக்கீடு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x