

ராமேசுவரம் கடற்பகுதியில் ஜெல்லி மீன்கள் பரவலாகத் தென்படு வதால், அங்கு கடலில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை விதித்து விழிப்புணர்வு ஏற்படுத்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ராமேசுவரம், பாம்பன், தனுஷ்கோடி கடற்கரைகளைக் கண்டு ரசிக்க தினமும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். வார விடுமுறை நாட்கள் என்றால் பயணிகளின் கூட்டம் 2 மடங்காகி விடும். ராமேசுவரம், பாம்பன் மற்றும் தனுஷ்கோடி கடல் அலைகளின் சுழல்கள் மிகவும் ஆபத்தானவை.
மேலும் இதன் மணல் படுகைகள், சகதி, பாறை மற்றும் ஆழமான பள்ளங்கள் அமைந்துள்ளதால், இங்கு குளிப்பவர்கள் நீரில் மூழ்கி உயிரிழக்கும் அபாயம் உள்ளது. இதனால் தனுஷ்கோடி, மூன்றாம்சத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், ஆபத்தை அறியாமல் சுற்றுலாப் பயணிகள் கடலில் குளிக்கின்றனர்.
இந்நிலையில், ராமேசுவரம் தீவு கடற்கரைப் பகுதிகளில் ஜெல்லி மீன்களின் வரத்து அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. இதுகுறித்து மீனவர்கள் கூறியதாவது:
ராமேசுவரம் தீவு மற்றும் அதனைச் சுற்றியுள்ள கோரி தீவு, குருசடை தீவு, மணலி தீவு உள்ளிட்ட பகுதிகளில் ஜெல்லி மீன்கள் இனப் பெருக்கத்துக்காக வரத் தொடங்கி உள்ளன. இதனால் ராமேசுவரம், பாம்பன், தனுஷ்கோடி பகுதி கரையோரங்களில் குளிக்கும் சுற்றுலாப் பயணிகளை ஜெல்லி மீன்கள் தாக்கும் அபாயம் உள்ளது.
இறந்துபோன ஜெல்லி மீன்களை தொட்டால் கூட மனிதர்களுக்கு அரிப்பு ஏற்படும். அதே சமயம், அம்மீன்கள் மனிதர்களைத் தாக்கினால் வாந்தி, மயக்கம் ஏற்பட்டு ஒவ்வாமையால் அதிகபட்சம் மரணம் கூட நிகழலாம். இதனால் ஜெல்லி மீன்கள் அதிகம் உள்ள கடற்கரைப் பகுதி களில் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்க அறிவிப்புப் பலகைகளை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மேலும் காவல்துறையினர் கண்காணிப்பைத் தீவிரப்படுத்த வேண்டும் என்றனர்.