

திமுக ஆட்சிக்கு வந்தவுடன் கிராமப்புற இளைஞர்களுக்கு அதிகளவில் வேலைவாய்ப்புகள் வழங்கப்படும் என முன்னாள் அமைச்சரும், திமுக மாநில துணைப் பொதுச் செயலாளருமான ஐ.பெரியசாமி தெரிவித்தார்.
ஆத்தூர் தொகுதிக்குட்பட்ட அணைப்பட்டி ஊராட்சியில் திமுக சார்பில் மக்கள் கிராமசபைக் கூட்டம், ஊராட்சித் தலைவர் தங்கப்பொண்ணு தலைமையில் நடந்தது. ஒன்றியச் செயலாளர் நெடுஞ்செழியன் வரவேற்றார். வேலுச்சாமி எம்.பி., ஒன்றியத் தலைவர் ராஜா முன்னிலை வகித்தனர். இதில் பங்கேற்ற ஐ.பெரியசாமி எம்.எல்.ஏ., பேசி யதாவது:
சத்துணவுப் பணியாளர்கள் நியமனத்துக்கு லஞ்சம் கேட்கின் றனர். திமுக ஆட்சியின் போது எதையும் எதிர்பார்க்காமல் மின்வாரியத்தில் பணிகளை வழங்கியவர் முன்னாள் முதல்வர் கருணாநிதி.
ஆத்தூர் தொகுதியில் சத்து ணவு, அங்கன்வாடி, ஓட்டுநர், நடத்துநர் எனப் பல பணிகளைப் பலருக்கு வாங்கித் தந்துள்ளதால் அவர்கள் இன்றுவரை விசுவாசமாக உள்ளனர். 60 நாட்களுக்குப் பிறகு இந்த ஆட்சி அகற்றப்பட்டு திமுக ஆட்சிக்கு வந்தவுடன் கிராமப்புற இளைஞர்களுக்கு அரசு வேலை வாய்ப்புகள் அதிகளவில் வழங்கப் படும் என்றார்.