

சிவகங்கை, திண்டுக்கல் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் ரூ.10 கோடியே 64 லட்சத்து 60 ஆயிரம் மதிப்பில் கட்டப்பட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் அலுவலக கட்டிடங்களை முதல்வர் ஜெயலலிதா காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
இது தொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்ப தாவது:
சிவகங்கை, திண்டுக்கல், நாமக்கல் மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் செயல்படும் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய மாவட்ட அலுவலகங் களுக்கு சொந்த கட்டிடங்கள் கட்டப்படும் என முதல்வர் ஜெயலலிதா சட்டப்பேரவையில் அறிவித்திருந்தார்.
இதன்படி, திண்டுக்கல் மாவட்ட சுற்றுச்சூழல் பொறி யாளர் அலுவலகம் மற்றும் மாவட்ட சுற்றுச்சூழல் ஆய்வகம், விருதுநகர், நாமக்கல், சிவகங்கை, விழுப்புரம் ஆட்சியர் அலுவலகங்களில் கட்டப்பட்ட மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் அலுவலக கட்டிடங்களை காணொலி காட்சி மூலம் முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத் தார்.
இதுதவிர, தஞ்சை, புதுக்கோட்டை சிப்காட் வளாகங்களில் கட்டப்பட்டுள்ள தஞ்சை, புதுக்கோட்டை மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் கட்டிடங்களையும் முதல்வர் திறந்து வைத்தார். திறக்கப்பட்ட கட்டிடங்களின் மொத்த மதிப்பு 10 கோடியே 64 லட்சத்து 60 ஆயிரம் ரூபாயாகும்.
இக்கட்டிடங்களில், வரவேற் பாளர் அறை, தொழில்நுட்பப் பிரிவு அறை, நிர்வாகம் மற்றும் கணக்குப் பிரிவுகளுக்கான அறைகளும் கட்டப்பட்டுள்ளன. மேலும், வாகன நிறுத்தம், பொதுமக்கள் இருக்கை, குடிநீர் மற்றும் கழிவுநீர் வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.
நிகழ்ச்சியில், அமைச்சர்கள் எம்.எஸ்.எம்.ஆனந்தன், தோப்பு என்.டி.வெங்கடாசலம், தலைமை செயலர் கு.ஞானதேசிகன், அரசு ஆலோசகர் ஷீலா பால கிருஷ்ணன், செயலர் ஹன்ஸ்ராஜ் வர்மா, மாசுக்கட்டுப்பாட்டு வாரிய தலைவர் கி.ஸ்கந்தன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.