

புதுச்சேரியில் காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்ததற்கு ஸ்டாலினே காரணம் என அமமுக பொதுச் செயலாளார் டிடிவி தினகரன் குற்றம் சாட்டியுள்ளார்.
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 73-வது பிறந் தநாள் விழாவை முன்னிட்டு இன்று தாம்பரம் சண்முகம் சாலையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இதில், டிடிவி தினகரன் கலந்துகொண்டு பேசியதாவது:
''ஜெயலலிதாவின் உண்மைத் தொண்டர்களை வைத்துக்கொண்டு அடுத்த ஆட்சியை அமைக்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வோம். ஆட்சி அதிகாரம் வேண்டும் என்றால் எங்கள் சட்டப்பேரவை உறுப்பினர்கள் இழந்திருக்க மாட்டோம்.
ஜெயலலிதாவின் இயக்கம் காப்பாற்றப்பட வேண்டும் என்பதற்காக 16 எம்எல்ஏக்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்தார்கள். கட்சிக்காகத் தியாகம் செய்தவர்கள் அனைவரையும் மக்கள் மீண்டும் சட்டப்பேரவைக்கு அனுப்பி வைப்பார்கள்.
தினகரன் தனிமரம் என்று சிலர் சொல்கிறார்கள். ஆனால், சசிகலா பெங்களூரில் இருந்து வரும்போது என்னுடன் இருந்தவர்கள் பலர் சிறப்பான வரவேற்பு கொடுத்தார்கள். இதைக் கண்டு பலருக்கு ரத்தக் கொதிப்பு ஏற்பட்டது.
ரூ.200 கோடி செலவு செய்து சசிகலா வருவதாகச் சொல்கிறார்கள். காசு கொடுத்து கூடிய கூட்டமல்ல அம்மாவின் உண்மை தொண்டர்கள். சசிகலா பெங்களூரில் இருந்து காரில் வரும்போது ஒரு போலீஸ் அதிகாரி கொடியை அவிழ்த்தார். இன்று அவரின் நிலை பரிதாபமாக உள்ளது. பெண் அதிகாரியிடம் தவறாக நடந்துகொண்டதாக அவர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
எம்ஜிஆர், ஜெயலலிதா உருவாக்கிய இயக்கத்தை மீண்டும் தமிழகத்தில் கொண்டுவரவும் தொண்டர்கள் பாடுபட வேண்டும். திமுக ஆட்சிக்கு வந்தால் சட்டம்-ஒழுங்கு மோசமான நிலைக்குச் செல்லும். ஜெயலலிதா ஆட்சியின்போது சட்டம்- ஒழுங்கு சிறப்பாக இருந்தது.
திமுக ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தில் நிலை என்பதை மக்கள் சிந்திக்க வேண்டும். ஜெயலலிதாவின் தொண்டர்கள் ஒற்றுமையாக இருந்து திமுக ஆட்சிக்கு வர விடக்கூடாது என்று சசிகலா தெரிவித்தார்.
கரோனா காலத்தில் எந்த அரசு திட்டங்களும் நடைபெறவில்லை. ஆனால், கரோனா காலத்தில் அரசின் வரி வருவாய் அதிகரித்துள்ளது என்று அரசு கூறுகிறது. ஆனால், இன்னொரு பக்கம் கடனாக ரூபாய் ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி வாங்கியதாக நிதிநிலை அறிக்கையில் பன்னீர்செல்வம் தெரிவிக்கிறார்.
இதைக் கேட்டால் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. பணத்தை எல்லாம் கறையான் அரித்துச் சென்றுவிட்டதா? வெள்ளம் வரவில்லை, புயல் அடிக்கவில்லை. அப்படியென்றால் பணம் எங்கே போனது?
இந்தச் சந்தேகங்கள் எல்லாம் வருங்காலத்தில் கண்டிப்பாக விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகம் கடனில் தள்ளாடுகிறது. வெற்றிநடை போடவில்லை.
புதுச்சேரியில் திமுக எம்எல்ஏ ராஜினாமா செய்ததால்தான் காங்கிரஸ் அரசு கவிழ்ந்தது. இதற்கு திமுக தலைவர் ஸ்டாலின் என்ன சொல்லப் போகிறார் என்பதைப் பார்ப்போம்.
தாம்பரத்தில் மேம்பாலத்தால் வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளது என வியாபாரிகள் சங்கத்தினர் மனு அளித்துள்ளனர். மேம்பால வடிவமைப்பை மாற்ற வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளனர். அமமுக ஆட்சிக்கு வந்தவுடன் அதனைச் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்''.
இவ்வாறு டிடிவி தினகரன் பேசினார்.
கூட்டத்தில் மாநிலத் துணைத் தலைவர் எஸ். அன்பழகன், மாவட்டச் செயலாளர் ம.கரிகாலன், தாம்பரம் நகரச் செயலாளர் என்.கிருஷ்ணமூர்த்தி, தாம்பரம் நாராயணன் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.