

தமிழ்நாட்டில் முதல் முறையாக விரைவில் பூரண குணமடையும் முழுமையான முழங்கால் மாற்று சிகிச்சையான ‘ஃபாஸ்ட் ட்ராக் ஃபுல் நீ ரீப்ளேஸ்மென்ட்’ அறுவை சிகிச்சையை வெற்றிகரமாகச் செய்து அப்பல்லோ மருத்துவமனை சாதனை படைத்துள்ளது.
இதுகுறித்து அப்பல்லோ மருத்துவமனைகள் குழு இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:
''மும்பையைச் சேர்ந்த சுபலக்ஷ்மி என்ற 66 வயதான பெண்ணிற்கு முழங்காலில் கடுமையான வலி ஏற்பட்டது. அடுத்த சில ஆண்டுகளில் அவருக்கு நடப்பதில் அதிக சிரமம் ஏற்பட்டது. அவருக்கு வலி அதிகமிருந்த போதிலும், கோவிட் பெருந்தொற்றின் காரணமாக, அவர் மருத்துவ சிகிச்சை எடுக்க மருத்துவமனைக்குச் செல்லத் தயக்கம் காட்டி வந்தார். இந்நிலையில். அவர் தனது அன்றாட நடவடிக்கைகளை மேற்கொள்வதில் தடை வந்தபோதிலும், வலியைப் பொறுத்தபடி சமாளித்து வந்தார். ஆனால் அவரது வயது மற்றும் அதிகப்படியான வீட்டு வேலைகளின் காரணமாக, அவரது முழங்கால் மூட்டுகளில் உள்ள குருத்தெலும்பு முற்றிலுமாகத் தேய்ந்து, கடினமானதாக மாறியது. மேலும், எலும்புகளின் பாதுகாப்பிற்கு அத்தியாவசியமான இடைவெளியும் குறைந்துபோனது. நீண்ட காலமாகக் காட்டிய அலட்சியம், மூட்டு எலும்புகளுக்கு இடையில் உராய்வு ஏற்படுவதில் கொண்டுவந்து விட்டுவிட்டது. அடுத்து வலி அதிகரிக்க, அது அவரை முழங்காலை அசைக்க முடியாமல் முற்றிலும் முடக்கிவிட்டது.
இதனால் அவர் வேறுவழியின்றி தனது சொந்த ஊரில், மருத்துவர்களைச் சந்தித்து ஆலோசனை கேட்டறிந்தார். மருத்துவர்கள் முழங்காலை முழுமையாக மாற்ற வேண்டும். அதற்கான அறுவைச் சிகிச்சைக்கு அவர் குறைந்தபட்சம் எட்டு முதல் பத்து நாட்கள் வரை மருத்துவமனையில் தங்குமாறு பரிந்துரைத்தனர். இதற்கு பிறகே சுபலக்ஷ்மி தனது மருத்துவ சிகிச்சை மற்றும் அறுவை சிகிச்சைக்காக சென்னை அப்பல்லோ மருத்துவமனைக்கு வருகை தந்தார்.
மிகவும் அபாயமிகுந்த மதிப்பீட்டிற்குப் பிறகு டாக்டர் மதன் திருவெங்கடா மற்றும் மருத்துவக் குழுவினர், நோயாளி விரைந்து நலம் பெறுவதற்கான, மருத்துவமனையில் தங்கியிருந்து பெறும், ‘ஃபாஸ்ட் ட்ராக் டோட்டல் நீ ரீப்ளேஸ்மென்ட்’மருத்துவ நடைமுறை குறித்து திட்டமிட்டனர்.
பொதுவாக முழங்கால் மாற்று போன்ற ஒரு பெரிய அறுவை சிகிச்சைக்கு, நோயாளி தொடர் கண்காணிப்பு மற்றும் பராமரிப்பிற்காக 4 முதல் 5 நாட்கள் மருத்துவமனையில் தங்க வேண்டியிருக்கும். ஆனால், இந்த நோயாளியைப் பொறுத்தவரை டாக்டர் மதன் ஒரு பன்முக நடைமுறைகளிலான அணுகுமுறையைக் கையாண்டார். இம்முறையில் தனித்துவமான அறுவை சிகிச்சை நுட்பம், நேர்மறையான முடிவுகளை அளிப்பதை உறுதிப்படுத்தும் சான்றுகள் சார்ந்த சிகிச்சை மற்றும் உகந்த உபகரணங்கள் ஆகியவற்றைப் பயன்படுத்தி சுபலக்ஷ்மிக்கு 2021 ஜனவரி 12-ம் தேதி பெருங்குடி, ஓஎம்ஆர், அப்பல்லோ மருத்துவமனையில் டோட்ல் முழங்கால் மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அறுவை சிகிச்சை முடிந்த 3 மணி நேரத்திற்குள் ஊன்றுகோல் உதவியுடன் அவரால் நடக்க முடிந்தது. அறுவை சிகிச்சைக்குப் பிறகு அடுத்த 16 மணி நேரத்திற்குள் அவரால் படிகள் ஏற முடிந்தது குறிப்பிடத்தக்கது.
அப்பல்லோ மருத்துவமனைகள் குழுமத்தின் நிர்வாக இயக்குநர் சுனீதா ரெட்டி கூறுகையில், “நோயாளிகளுக்கு மிகச் சிறப்பான பராமரிப்பை வழங்குவதில், நவீனத் தொழில்நுட்பம் மற்றும் புதிய கண்டுபிடிப்புகளை ஒருங்கிணைத்துச் செயல்படுத்துவது, அப்பல்லோ மருத்துவமனையில் மிகச் சிறப்பான முறையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சிறப்பான வாழ்க்கைத் தரத்தை எதிர்பார்க்கும் மக்களுக்கு, அவர்களது எதிர்ப்பார்ப்பைப் பூர்த்தி செய்யும் தரமான சுகாதாரச் சேவையை அளிப்பதில் நாங்கள் தொடர்ந்து அக்கறையுடன் செயல்பட்டு வருகிறோம்.
டாக்டர் மதன் திருவெங்கடா மற்றும் அவரது குழுவினர் நோயாளிக்கு ஒரு புதிய நவீன மருத்துவ நடைமுறையைச் செய்துள்ளனர். இது நோயாளியைத் தாமாகவே இயங்குவதற்கு முற்றிலும் உதவியிருக்கிறது. அப்பல்லோ இன்ஸ்டிடியூட் ஆஃப் ஆர்த்தோபிடிக்ஸ், மிகவும் மேம்பட்ட அதிநவீன நுட்பங்களை உருவாக்குவதோடு, நோயாளிகளின் அறுவை சிகிச்சையின் அதே நாளில் வீட்டிற்குச் செல்ல அனுமதிக்கும் துல்லியமான கருவிகளைப் பயன்படுத்துகிறது’’ என்றார்.
இவ்வாறு அப்பல்லோ மருத்துவமனை தெரிவித்துள்ளது.