Published : 25 Feb 2021 10:12 AM
Last Updated : 25 Feb 2021 10:12 AM

குழந்தைகள் உரிமைகளுக்கான தேர்தல் அறிக்கை: 30 முக்கிய அம்சங்கள்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வருவதைத் தொடர்ந்து குழந்தைகள் உரிமையைப் பாதுகாக்கும் பொருட்டு குழந்தைகள் உரிமைகளுக்கான தேர்தல் அறிக்கையை குழந்தை நல அமைப்புகள் இணைந்து உருவாக்கி வெளியிட்டுள்ளன.

எழும்பூரில் உள்ள இக்சா நிலையத்தில் நேற்று (புதன்கிழமை) காலை குழந்தைகள் உரிமைகளுக்கான தேர்தல் அறிக்கையை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி விமலா வெளியிட்டார். தேர்தல் அறிக்கையின் முதல் பதிப்பை பத்திரிகையாளர் சாவித்திரி கண்ணன் பெற்றுக் கொண்டார்.

இத்தேர்தல் அறிக்கையை பேராசிரியர் ஆண்ரூ சேசுராஜ், ஸ்டெக்னா ஜென்சி, முனைவர் வெர்ஜில் டிசாமி,
தேவநேயன், பசுமை மூர்த்தி, வழக்கறிஞர் சுப.தென்பாண்டியன் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர்.

குழந்தைகள் உரிமைகளுக்கான தேர்தல் அறிக்கையில் உள்ள முக்கிய அம்சங்கள்:

* தமிழ்நாட்டில் பெண் குழந்தை பிறப்பு விகிதம் தொடர்ந்து சரிந்து வருகிறது. 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பும் அதனைத் தொடர்ந்து தேசிய குடும்ப நலவாழ்வு கணக்கெடுப்பும் அபாயகரமான அளவில் பெண் குழந்தை பிறப்பு குறைந்து வருவதைக் காட்டுகிறது. ஏற்கெனவே கருவில் இருப்பது ஆணா பெண்ணா என்பதைக் கண்டறிவது தண்டனைக்குரிய குற்றம் என்று இருந்தும் இப்படிப்பட்ட கொடுமைகள் நிகழ்ந்து வருவது தமிழ்நாட்டின் மேம்பாட்டு அடைவுக்கு கவலை அளிக்கும் விஷயம். சட்டத்தினை
முழுமையாகத் திறம்பட நடைமுறைப்படுத்த கள அனுபவமுள்ள தொண்டு நிறுவனங்களின் பங்களிப்போடு குழுக்கள் உருவாக்கி கண்காணிப்பைப் பலப்படுத்த வேண்டும்.

* கிராமங்கள் மற்றும் நகரங்களில் உள்ள மக்கள் தங்களது நலவாழ்வு தேவைகளுக்கு அரசின் நலவாழ்வு மையங்களையே நம்பி உள்ளனர். எனவே அவற்றைத் தரம் உயர்த்தி பல்நோக்கு சிகிச்சை மையங்களாகவும் பரிசோதனை கூடங்களையும் உள்ளடக்கியதாக அமைந்திட ஆவன செய்ய வேண்டும்.

* 0-3 வயது வரை உள்ள குழந்தைகளின் பராமரிப்பு சேவைகளான ஊட்டச்சத்து/ நோய்த் தடுப்பு/ வளர்ச்சியைக் கண்காணித்தல் போன்ற சேவைகளை அங்கன்வாடி மையங்களில் கவனிக்க வேண்டும். தாய்மார்களின் பேறுகால முன் கவனிப்பு/ பின் கவனிப்பு சேவைகளையும் அங்கன்வாடி மையங்களில் தரமாக வழங்கிட வேண்டும்.

* 3 முதல் 6 வயது வரை முன்பருவப் பள்ளிக் கல்வியைக் கல்வித் திட்டத்துடன் இணைக்க வேண்டும். ஆரம்ப அல்லது நடுநிலைப் பள்ளி வளாகங்களிலேயே முன்பருவப் பள்ளிகளை இணைத்து அதற்கென சிறப்பு படிப்புத் தகுதி பெற்ற ஆசிரியர்களை நியமித்து முன் பருவக் கல்வியை சமமான தரமானதாக அனைத்து குழந்தைகளுக்கும் வழங்கிட வேண்டும்.

* இன்று தமிழ்நாட்டில் முன்பருவக்கல்வி முற்றிலும் தனியார் மயம்/ வணிக மயமாக்கப்பட்டுள்ளது. சமூகத்தில் விளிம்பு நிலை குடும்பங்களைச் சார்ந்த குழந்தைகள் (தலித்/ பழங்குடி/ பிற்படுத்தப்பட்ட ஏழைகள்/ நாடோடி சிறப்புக் குழுக்கள்) மட்டுமே அரசின் பால்வாடி மையங்களுக்கு வருகின்றனர். இந்தக் குழந்தைகளுக்குத் தரமான முன்பருவக் கல்வி கிடைக்கவில்லை. புற்றீசல் போல் பெருகியுள்ள நர்சரி பள்ளிகள்/ விளையாட்டுப் பள்ளிகள் ஆகியவற்றைத் தடுக்கவும் அரசின் பொறுப்பாக முன் பருவக் கல்வியை ஆக்கிடவும் தமிழ்நாடு அரசாங்கம் கொள்கை முடிவு எடுத்திட வேண்டும்.

* தமிழ்நாட்டில் உள்ள அங்கன்வாடி மையங்களைத் தரமுயர்த்தி குழந்தைகளின் நலவாழ்வு, உடல் வளர்ச்சி மற்றும் ஆற்றல் மேம்பாட்டிற்கு வாய்ப்பளிக்கும் மையங்களாக மாற்றிட வேண்டும். அங்கன்வாடி மையங்கள் தற்போது சிறப்பாகச் செயல்பாட்டு வந்தாலும் தற்போதைய காலகட்டத்திற்கு ஏற்ற திறன் மேம்பாட்டினைக் குழந்தைகளுக்கு ஏற்படுத்தும் திறன் அற்றவையாக உள்ளன.

* மாண்டிசோரி முறையை உள்ளடக்கிய முறையில், இப்போது வேலைக்குச் செல்லும் பெண்களின் எண்ணிக்கையையும் அவர்களது வேலை நேரத்தினையும் கருத்தில் கொண்டு காலை எட்டு மணி முதல் இரவு எட்டு மணி வரை மையங்களின் செயல்படும் நேரத்தினை அதிகப்படுத்தி கூடுதல் பணியாளர்களை நியமித்து நடத்திட வேண்டும். அங்கன்வாடி மையங்களில் பொறுப்பான குழந்தை வளர்ப்பு குறித்த பயிற்சி மற்றும் திறன் மேம்பாட்டிற்கான கூறுகளையும் சேர்த்திட வேண்டும்.

* பிறப்பு முதல் 18 வயது வரையுள்ள குழந்தைகளின் இலவச, தரமான, கட்டாய/ சமத்துவமான கல்வி உரிமையும் கிடைத்திட குழந்தைகளின் இலவச, கட்டாய கல்வி உரிமைச் சட்டம் 2009-ஐ முழுமையாக நடைமுறைப்படுத்துவதை உறுதி செய்திட வேண்டும். கல்வி உரிமைச் சட்டம் 2009-ன் வயது வரம்பை பிறப்பு முதல் 18 வயது வரை உள்ள குழந்தைகளுக்கும் நீட்டித்திடவேண்டும் பள்ளிகளில் சட்ட விதிகளுக்குட்பட்ட அமைப்பான பள்ளி மேலாண்மைக் குழுக்களை வலுப்படுத்தி கல்வியில் சமுதாயப் பங்கேற்பை உறுதி செய்திட வேண்டும்.

* கல்வியில் உள்ள சமத்துவமின்மையை மாற்றி பொதுப் பள்ளிக் கல்வி முறைக்கான மாற்றத்தை நோக்கிய செயல்முறைகளை வகுத்திட வேண்டும். கல்வி வணிக மயமாவதையும்/ தனியார் மயமாவதையும் தடுத்து நிறுத்தி வலுவான ஒழுங்கு முறை சட்டத்தின் மூலம் தனியார் பள்ளிகளின் கட்டண உயர்வை கட்டுப்படுத்துவதுடன் தனியார் பள்ளிகளின் பொறுப்புடைத் தன்மையை மக்களுக்கு உறுதி செய்திட வேண்டும்.

* கல்வியை ஒத்திசைவு பட்டியலிலிருந்து மாநிலப் பட்டியலுக்கு மாற்றிட நடவடிக்கை எடுத்திட வேண்டும்.
கல்வி உரிமைச் சட்டம் 2009-ல் உள்ள பிரிவு 16, குழந்தைகள் வகுப்பில் தோல்வியடைந்து பின்தங்காமல் கற்பதை உறுதி செய்கிறது. இந்த வாய்ப்பை தொடர்ந்து நடைமுறைப்படுத்தி குழந்தைகள் கல்வியில் தொடர்வதை உறுதி செய்ய வேண்டும்.

* பள்ளிகள் இணைப்பு என்ற பெயரில் அதிக எண்ணிக்கையிலான அரசுப் பொதுப் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. அப்பள்ளிகளை உடனே திறந்து மாணவர் சேர்க்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுத்திட வேண்டும்.

* உடனடியாக தமிழகத்தில் பள்ளிகள் அனைத்தும் பாதுகாப்புடன் திறக்கப்பட வேண்டும். முகக்கவசம், சானிடைசர், சோப்பு உள்ளிட்ட பாதுகாப்பு சாதனங்கள் அனைத்து மாணவர்களுக்கும் பள்ளிகளிலேயே வழங்கப்பட வேண்டும். பள்ளிகள் திறக்கப்படும் வரை ஆசிரியர்கள் குழந்தைகளின் வீடுகளுக்குச் சென்று குழந்தைகளை நேரடியாகச் சந்தித்து பாடம் நடத்தும் முறையைக் கொண்டு வந்தால் குழந்தைகள் மீது நடந்து வரும் வன்முறையைக் குறைய வாய்ப்பு ஏற்படும்.

* பெண்கள் மற்றும் குழந்தைகளுக்காக தமிழகத்தில் தனித் துறையை உடனடியாக உருவாக்கிட வேண்டும்.
குழந்தைகள் பாதுகாப்புக்கென்று தனி இயக்குனரகம் தமிழகத்தில் உருவாக்கிட வேண்டும். தமிழக சட்டப்பேரவையில் குழந்தைகளுக்காக தனிநிலை குழு உருவாக்கிட வேண்டும்.

* மாநில குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்திற்கு புதிய சட்ட விதிகள் உருவாக்கப்பட வேண்டும். குழந்தைகள் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான மாநில ஆணையத்தில் உறுப்பினர்களை நியமிப்பதில் வெளிப்படைத்தன்மை பின்பற்றப்பட வேண்டும். தனி அந்தஸ்து மற்றும் முழு கட்டமைப்புகள் கொண்ட
அமைப்பாக இயங்க வேண்டும்.

* தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் குழந்தைகள் மீதான வன்முறை வழக்குகளுக்கு விரைவாக நீதி கிடைக்க குழந்தைகளுக்கான நட்பு சூழல், நடைமுறைகளைக் கொண்ட தனி நீதிமன்றம் உருவாக்கப்பட வேண்டும். குழந்தைகளுக்கான பாதுகாப்பு அமைப்புகள் மாநில மற்றும் மாவட்ட அளவில் உள்ளது. இதில் குழந்தை உரிமை மற்றும் குழந்தை பாதுகாப்பில் நிபுணத்துவம் மற்றும் கள அனுபவம் பெற்றவர்களை முழு நேர பணியாளர்களாக நியமிக்கப்பட வேண்டும். நியமனத்தில் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும்.

* தமிழகத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளில் மற்றும் கல்வி சார்ந்த நிறுவனங்களில் குழந்தை உரிமை பாதுகாப்புக் கொள்கை உருவாக்கி நடைமுறைப்படுத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.

* ஒருங்கிணைந்த குழந்தை பாதுகாப்பு திட்டத்தின் கீழ் ஒன்றிய மற்றும் கிராம அளவில் உருவாக்கப்பட்ட குழந்தை பாதுகாப்பு குழுக்களைச் சிறப்பாக செயல்பட குழந்தைகள் பிரச்சினைகளைக் கண்காணித்து, தடுத்திட பாதுகாத்திட போதிய நிதியை அளித்துச் செயல்பட வலுப்படுத்திட வேண்டும்.

* 18 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தை தொழில் முறையையும் கொத்தடிமை தொழில் முறையாகக் கருதப்பட வேண்டும். 14 வயதிற்குட்பட்ட குழந்தைத் தொழிலாளர் நிலை குறைந்து வந்த போதிலும் 15-18 வயது குழந்தைகளை வேலையில் ஈடுபடுத்துவது அதிகரித்து வருகிறது. இந்தக் குழந்தைகள் அனைவரும் தலித், பழங்குடி, பெண் குழந்தைகள் மற்றும் நகர்ப்புற வறுமையில் உள்ளவர்களே. மேலும் 1990-ம் ஆண்டுக்குப் பின் வேலைக்காகப் பெற்றோருடன் வெளியேறும் குழந்தைகளின் எண்ணிக்கை பன்மடங்காக அதிகரித்துள்ளது.

இத்தகைய குழந்தைகள் குறிப்பாக பெண் குழந்தைகள் கொத்தடிமை வடிவமாக நிலவி வரும் கேம்ப் கூலி, ஜவுளித் தொழில், பெரிய மால்கள் போன்றவற்றில் வேலைக்கு அமர்த்தப்படுகிறார்கள். எனவே 18 வயதிற்குட்பட்ட குழந்தைகள் பணி செய்வதைத் தடுக்கும் விதமான அம்சங்களைக் கொண்ட தனிச் சட்டத்தை தமிழ்நாடு அரசு இயற்ற வேண்டும்.

* குழந்தைகளை ஈடுபடுத்தும் அனைத்து விதமான பணிகளிலும் குடும்பத்திற்கு உதவும் பணி, குடியிருக்கும் பகுதிகளில் மேற்கொள்ளும் பணி ஆகியவற்றைத் தடுப்பதுடன் அதன் உரிமையாளர்கள், அந்த இடத்தில் உள்ளவர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். கொத்தடிமை முறை ஒழிப்புச் சட்டம் 1976-ஐ முழுமையாக அமல்படுத்தப்பட வேண்டும்.

* கொத்தடிமை முறையிலிருந்து மீட்கப்படும் ஒவ்வொரு குழந்தைக்கும் ரூ.1,00,000 மறுவாழ்வுத் தொகை தரப்பட வேண்டும். இத்தகைய குழந்தைகளின் பெற்றோருக்கு வேலைவாய்ப்பையும் குடியிருப்பையும் உறுதிப்படுத்த வேண்டும். கொத்தடிமைத் தொழிலாளர் விடுவிக்கப்படும்போது குழந்தைகளையும் தனி நபர்களாகக் கருதி மறுவாழ்வையும் பள்ளிக் கல்வியையும் தருவதை உறுதி செய்ய வேண்டும். குழந்தைத் திருமணத்தைத் தடுப்பதற்கும் வரும் காலங்களில் இதுபோன்ற திருமணங்கள் நடக்காமல் இருப்பதற்கு முழு நேரக் குழந்தைத் திருமணத் தடுப்பு அலுவலரை நியமிக்க வேண்டும்.

*குழந்தைகள் பள்ளி சார்ந்த முடிவுகளில் தங்கள் கருத்துகளை வெளிப்படுத்த வாய்ப்பளிக்கும் வகையில் அனைத்துப் பள்ளிகளிலும் குழந்தைகள் மன்றங்கள் அமைக்கப்படவேண்டும். பள்ளி மேலாண்மைக் குழுவில் குழந்தைகள் கட்டாயம் பங்கேற்கும் வகையில் விதிகள் திருத்தியமைக்கப்பட வேண்டும்.

* கிராம மற்றும் நகர சபைக் கூட்டங்களில் எந்தவிதப் பாகுபாடும் இன்றி குழந்தைகள் கருத்து கேட்கப்படவேண்டும் (குழந்தைகள் கிராம / நகர சபைகள் சட்டபூர்வமாக அமைக்கப்படவேண்டும்). கிராம / நகர குழந்தை பாதுகாப்புக் குழுக்களில் குழந்தைகள் பங்கேற்க வழிவகை செய்ய வேண்டும்.

* அமைப்புசாரா தொழிலாளர்களே நாட்டின் உற்பத்தியில் பெரும் பங்கு வகிக்கின்றனர். இவர்கள் 92% உழைக்கும் தொழிலாளர் பட்டியலில் உள்ளனர். இவர்களுக்கு கிராமப்புறங்களில் இன்று நடைமுறையில் உள்ள 100 நாள் வேலைத்திட்டத்தை 200 நாட்களாக மாற்றுவதற்கு மாநில அரசு கொள்கைகள் சட்டங்கள் இயற்ற வேண்டும். இவர்களின் குழந்தைகள் அனைவருக்குமான ஊட்டச்சத்து, உடல்நலம் ஆகியவற்றில் கவனம் செலுத்துவதுடன் இந்தக் குழந்தைகள் அனைவரும் பள்ளிகளில் இணைப்பதையும், இடைவிலகல் இன்றி கல்வியில் தொடர்வதையும் சிறப்பு கவனிப்பு செய்யப்படல் வேண்டும்.

* புலம்பெயர் தொழிலாளர் பிரச்சினையில் அரசின் பதிவில் 3 லட்சத்து 6 ஆயிரம் பேர்தான் உள்ளனர். பதிவில் இல்லாமல் மேலும் 3 லட்சம் பேர் உள்ளனர் என ஊடகங்கள் (மே 5, 2020 - இந்து தமிழ்) கூறுகின்றன. விரைவாக இவர்கள் அனைவரும் கீழ் பதிவு செய்யப்பட்டால்தான் அவர்களது குழந்தைகளின் நலனில் அக்கறை செலுத்த முடியும். என்பதால் உடனே பதிவு செய்ய வேண்டும்.

* தாழ்த்தப்பட்டோர் பழங்குடியினர் குழந்தைகளுக்கு +1 முதல் கல்லூரி படிப்பு வரை இதுநாள் வரை வழங்கப்பட்டு வந்த மத்திய அரசு மற்றும் மாநில அரசு உதவியுடன் போஸ்ட் மெட்ரிக் ஸ்காலர்ஷிப் தொடர்ந்து அணைத்து மாணவர்களுக்கும் தொய்வின்றி வழங்கிட வழி வகை செய்யவேண்டும்.

* தூய்மைப் பணியாளர்கள் குழந்தைகளே பள்ளிகளிலிருந்து அதிகம் இடைவிலகலாகி வருகின்றனர். இதைத் தடுத்து இவர்களின் குழந்தைகளை பள்ளிகளில் தொடர்ந்து தக்க வைத்திட வேண்டும். எனவே சுகாதாரமற்ற பணிகளில் ஈடுபட்டு வருவோர் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகையை உயர்த்தி வழங்கிட வேண்டும்.

* ஆதிவாசிப் பகுதிகளில் உள்ள பழங்குடி மாணவ மாணவியர்கள் படித்து வரும் அங்கன்வாடிகள் பள்ளிக்கூடங்களில் ஆசிரியர்கள் காப்பாளர்கள் சரியான நேரத்துக்கு வருவதில்லை சரியாகவும் பராமரிப்பதில்லை. எனவே இவற்றின் பராமரிப்பு பாதுகாப்பை ஆதிவாசி பழங்குடி மக்களிடமே ஒப்படைக்க வேண்டும்.

* பழங்குடியினர் குழந்தைகளுக்கு சாதிச்சான்று உரிய நேரத்தில் வழங்காமல் மறுக்கப்பட்டு வருவதால் பழங்குடியினர் குழந்தைகளின் உயர்கல்வி பாதிக்கப்படும் நிலை உள்ளது. எனவே பழங்குடியினர் சாதிச்சான்று கிடைப்பதை எளிமைப்படுத்திட வேண்டும்.

* நடைமுறையில் உள்ள குழந்தைகளுக்கான சட்டங்கள் திட்டங்களில் ஒரே சீராக 18 வயதிற்குட்பட்டவர்கள் அனைவரும் குழந்தைகள் என்ற வரையறை செய்யப்பட வேண்டும். குழந்தைகளின் நலனை முக்கியமாகக் கொண்டு குழந்தைகளின் எண்ணிக்கைக்கேற்ப பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்பட வேண்டும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x