Published : 24 Feb 2021 07:27 PM
Last Updated : 24 Feb 2021 07:27 PM

சிறப்பு டிஜிபி பதவி தரமிறக்கம்: சட்டம்-ஒழுங்கு கூடுதல் டிஜிபியாக ஜெயந்த் முரளி நியமனம்

சென்னை

சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ், பெண் ஐபிஎஸ் அதிகாரி மீதான பாலியல் புகாரில் சிக்கியதால் கட்டாயக் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார். இதையடுத்து, சிறப்பு டிஜிபி பதவியும் தரமிறக்கப்பட்டு கூடுதல் டிஜிபி அந்தஸ்து அதிகாரி ஜெயந்த் முரளி நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு டிஜிபி பதவி, டிஜிபி பதவியில் முதன்மையானது. ஒட்டுமொத்தக் காவல்துறைக்கு டிஜிபி சட்டம்- ஒழுங்கு தலைமையும், மண்டல ஐஜிக்கள், மாவட்ட எஸ்.பி.க்களுக்குத் தலைமை வகிக்கும் பொறுப்பில் கூடுதல் டிஜிபி (சட்டம்- ஒழுங்கு) இருப்பார். இது ஐபிஎஸ் அதிகாரிகளின் கனவுமிக்க ஒரு பதவி ஆகும்.

சட்டம்- ஒழுங்கு டிஜிபிக்கு இணையாக குற்றப்பிரிவு டிஜிபி, உளவுத்துறை டிஜிபி என எந்தப் பதவியையும் உருவாக்கி சட்டம்- ஒழுங்கு டிஜிபியின் பணியில் தலையிடக் கூடாது என உச்ச நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் சட்டம்- ஒழுங்கு கூடுதல் டிஜிபி பதவியைத் தரம் உயர்த்தி புதிதாக சிறப்பு சட்டம்- ஒழுங்கு டிஜிபி என்கிற பதவி சமீபத்தில் உருவாக்கப்பட்டது. அதன் பொறுப்பில் ராஜேஷ் தாஸ் இருந்தார்.

இந்நிலையில் பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் சிக்கியதால் அவர் கட்டாயக் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார். அவர் வகித்து வந்த பதவியும் தரமிறக்கம் செய்யப்பட்டு அதற்கான அதிகாரியை நியமித்து உள்துறைச் செயலர் உத்தரவிட்டுள்ளார். மேலும் சில ஐபிஎஸ் அதிகாரிகளும் மாற்றப்பட்டனர்.

அதுகுறித்து விவரம்:

1. லஞ்ச ஒழிப்புத்துறை கூடுதல் டிஜிபி ஜெயந்த் முரளி மாற்றப்பட்டு சட்டம் - ஒழுங்கு கூடுதல் டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார். இதுவரை சிறப்பு டிஜிபி அந்தஸ்தில் இருந்த இப்பதவி தரமிறக்கம் செய்யப்பட்டுள்ளது. சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் கட்டாயக் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

2. போலீஸ் பயிற்சிக் கல்லூரி டிஜிபி கரன் சின்ஹா மாற்றப்பட்டு மதுவிலக்கு அமல் பிரிவு சிறப்பு டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

3. மதுவிலக்கு அமல் பிரிவு சிறப்பு டிஜிபி ஷகில் அக்தர் மாற்றப்பட்டு போலீஸ் பயிற்சிக் கல்லூரி சிறப்பு டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

4. பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்புப் பிரிவு எஸ்.பி. கயல்விழி மாற்றப்பட்டு திருவாரூர் எஸ்.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதற்கான உத்தரவை உள்துறைச் செயலர் எஸ்.கே.பிரபாகர் பிறப்பித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x