

தமிழகத்தில் உருமாறிய கரோனா தொற்று பரவ வாய்ப்பில்லை என, தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.
தேனி மாவட்டம், போடியில் புதிய நீதிக்கட்சியின் சார்பில், வஉசி சிலை இன்று திறக்கப்பட்டது.
சிலையை துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் திறந்தார். இந்நிகழ்ச்சியில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், புதிய நீதிக்கட்சித் தலைவர் ஏ.சி.சண் முகம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் பங்கேற்க இவர்கள் விமான மூலம் மதுரை வந்தனர்.
விமான நிலையத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரன் செய்தியாளர் களிடம் கூறும்போது, ‘‘தமிழகத்தில் அரசு உரிய முறையில் கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்ததால் தொற்று கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
இருப்பினும் கேரளா, மகாராஷ்டிரா போன்ற ஒரு சில மாநிலங்களில் நோய் அதிகரிப்பை கவனித்துக் கொண்டுதான் இருக்கிறோம். அதேவேளையில், தமிழகத்தில் தொடர்ந்து தடுப்பு மருந்துகள் கொடுக்கப்படுகிறது. இதனால், தமிழகத்தில் இரண்டாவது அலை வருவதற்கு சாத்தியக்கூறுகள் மிகமிகக் குறைவு என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
எனினும், மக்கள் முகக்கவசம் அணிதல், கைகளைக் கழுவதல், சமூக இடைவெளியைக் கடைபிடித்தல் ஆகியவற்றை தொடர்ந்து பின்பற்ற வேண்டும்.
தமிழகத்தில் இதுவரை கரோனா தடுப்பு மருந்து எடுத்துக்கொண்ட முன்களப் பணியாளர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்துள்ளது. அவர்களை நாங்கள் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். எனவே முன்பதிவு செய்துகொண்டு தடுப்பு மருந்துகளை பொதுமக்கள் எடுத்துக்கொள்ள முன்வர வேண்டும்.
மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி 50 வயதிற்கு மேல் உள்ள இணை நோய் அற்றவர்களுக்கு விரைவில் தடுப்பு மருந்து வழங்கப்படும்’’ என்றார்.
தொடர்ந்து ஏ.சி.சண்முகம் கூறுகையில், ‘‘தமிழக அரசு சிறப்பாக செயல்படுகிறது. 11 மருத்துவக்கல்லூரிகளை கொண்டு வந்துள்ளது. இதன்மூலம் சுமார் 1000 மாணவ, மாணவி யர்களுக்கு மருத்துவக் கல்விக்கு வாய்ப்பு கிடைத் துள்ளது. மீண்டும் அதிமுக ஆட்சியே அமையும். கூட்டணியில் குறைந்தது 6 தொகுதிகளை கேட்டு பெறுவோம்,’’ என்றார்.