Published : 24 Feb 2021 06:46 PM
Last Updated : 24 Feb 2021 06:46 PM

மதுரைக்கு மெட்ரோ ரயில் திட்டம் அறிவிக்காதது ஏன்?- சட்டப்பேரவைத் தேர்தல் நேரத்தில் அதிமுகவுக்கு சிக்கல்

வரைபடம்: ஆர்.ராஜேஷ்

மதுரை

கோவைக்கு மட்டும் மெட்ரோ ரயில் திட்டத்தை அறிவித்து விட்டு மதுரையைப் புறக்கணித்ததால் இது சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவுக்கு சிக்கலை ஏற்படுத்தும் வாய்ப்புள்ளது.

கடந்த பிப்ரவரி 1-ம் தேதி முதல்வர் கே.பழனிசாமி, மத்திய அரசு பட்ஜெட் 2021-2022 குறித்து வெளியிட்ட அறிக்கையில், ‘‘கோவை, மதுரைக்கு மெட்ரோ ரயில் திட்டம் கொண்டு வர ஒப்புதல் வழங்க வேண்டும்’’ என்று வலியுறுத்தியிருந்தார்.

ஆனால், தமிழக அரசின் இந்த இடைக்கால பட்ஜெட்டில் கோவைக்கு மட்டும் மெட்ரோ ரயில் திட்டம் தொடங்குவதற்கு ரூ.6,683 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மதுரைக்கு மெட்ரோ ரயில் திட்டம் அறிவிக்கப்படவில்லை.

மதுரை சென்னைக்கு தமிழகத்தின் பெரிய நகரம். உலகப் புகழ்பெற்ற மீனாட்சியம்மன் கோயில், மதுரை உயர் நீதமன்றக் கிளை, சர்வதேச விமான நிலையம், மிகப்பெரிய ரயில்வே கட்டமைப்பு, கோயம்பேடுக்கு அடுத்த மிகப்பெரிய மாட்டுத்தாவணி பேருந்து நிலையம், ஐடி நிறுவனங்கள், காமராஜர் பல்கலைக்கழகம், வேளாண் பல்கலைக்கழக கல்லூரி மற்றும் அரசு, தனியார் அரசு கலை அறிவியல் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள் உள்ளிட்டவை ஏராளமாக உள்ளன.

விரைவில் ‘எய்ம்ஸ்’ மருத்துவமனை, பஸ்போர்ட் உள்ளிட்ட பிரம்மாண்ட திட்டங்களும் வர உள்ளன. 20 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் மாநகரப்பகுதிகளில் வசிக்கின்றனர். சுற்றுலா, வர்த்தகம், மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு வகைகளில் தினமும் நாடு முழுவதும் இருந்து மதுரைக்கு வந்து செல்கின்றனர்.

ஆனால், மதுரைக்கு மெட்ரோ ரயில் திட்டம் அறிவிக்காமல்விட்டது தென் மாவட்ட மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும், ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இது சட்டமன்றத் தேர்தல் நேரமான தற்போது அதிமுகவுக்கு சிக்கலை ஏற்படுத்தும் வாய்ப்புள்ளது.

அதிமுக ஆட்சியைப்பிடிக்க கடந்த சட்டமன்ற தேர்தலில் மதுரை மாவட்டத்தில் மொத்தமுள் 10 தொகுதிகளில் 8 தொகுதிகளில் இக்கட்சி பெற்ற வெற்றி பெரிதும் உதவியது.

ஆனால், தற்போது ஏற்கெனவே அறிவித்த ‘எய்ம்ஸ்’ மருத்துவமனைக்கு நிதி ஒதுக்காமல் இருப்பது, அறிவித்த பஸ்போர்ட் திட்டத்தைக் கொண்டு வர முயற்சி எடுக்காதது, கோரிப்பாளையம், சிம்மக்கல், பெரியார் பேருந்து நிலையம் நெரிசலைக் குறைக்க அறிவித்த பறக்கும் பாலம் திட்டத்தை நிறைவேற்றாமல் இருப்பது உள்ளிட்டவை அதிமுகவுக்கு இந்தத் தேர்தலில் பெரும் சவாலை ஏற்படுத்தியுள்ளது.

தென்னக ரயில்வே பயணிகள் நலச்சங்க பொதுச்செயலாளர் பத்மநாபன் கூறுகையில், ‘‘கோவையில் உள்ள மக்கள் பிரதிநிதிகள் கொடுத்த அழுத்தம் காரணமாக இந்த இக்காட்டன கரோனா நிதி நெருக்கடியிலும் ரூ.6683 கோடியில் கோவைக்கு மெட்ரோ ரயில் திட்டத்தை அறிவித்துள்ளார்கள். ஆனால், மதுரையைச் சேர்ந்த மக்கள் பிரதிநிதிகள், இதுபோன்ற திட்டத்தை வலியுறத்தவில்லை.

அதனால், மதுரைக்கு மெட்ரோ ரயில் திட்டம் கிடைக்கவில்லை. மதுரைக்கு மெட்ரோ ரயில் திட்டத்தின் அவசியம் பற்றி மத்திய, மாநில அரசுகளுக்கு ரயில்வே பயணிகள் சார்பில் மனு அளிக்க உள்ளோம், ’’ என்றார்.

தொழில் வர்த்தக சங்கத் தலைவர் என்.ஜெகதீசன் கூறுகையில், ‘‘தென் தமிழகம் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவது தெரிகிறது. 1974ம் ஆண்டிலே இரண்டாவதாக அறிவிக்கப்பட்ட மாநகராட்சி மதுரை. கோவையைவிட போக்குவரத்து நெரிசல் மதுரையில் அதிகம். மதுரையின் ஒரு பகுதியில் இருந்து மற்றொரு பகுதிக்குச் செல்வது எளிதான காரியம் இல்லை. மெட்ரோ ரயில் திட்டத்தை அறிவிக்க 10 லட்சம் மக்கள் தொகை போதும். ஆனால், மதுரையில் 20 லட்சம் மக்கள் இருக்கிறார். இப்படி எல்லா வகையிலும் மதுரைக்கு மெட்ரோ ரயில் திட்டத்தை அறிவிப்பதற்கான சாதக அம்சங்கள் நிறைந்திருக்கின்றன.

நாங்கள் கோவைக்கு கொடுக்க வேண்டாம் எனச் சொல்லவில்லை. மதுரைக்கும் சேர்த்து அறிவித்து இருக்கலாம் என்று சொல்கிறோம். மத்திய அரசு, 2025ம் ஆண்டிற்குள் 25 நகரங்களுக்கு மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்த உள்ளதாக அறிவித்துள்ளது.

மொத்த திட்ட நிதியில் 50 சதவீதம் மாநில அரசு ஏற்றுக் கொண்டு பரிந்துரை செய்தால் மத்திய அரசு உடனே ஏற்றுக் கொள்வதாகவும், மீதித் தொகையையும் தருவதாகவும் தெளிவாகக் கூறியிருக்கிறது.

அதனால், தமிழக அரசு மதுரைக்கும் சேர்த்து இந்த திட்டத்தை செயல்படுத்த உடனடியாக அறிவிப்பு வெளியிட வேண்டும், ’’ என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x