

பெண் ஐபிஎஸ் அதிகாரிக்குப் பாலியல் தொல்லை கொடுத்த சிறப்பு டிஜிபிக்கு எதிரான புகாரை விசாரிக்க கூடுதல் தலைமைச் செயலர் தலைமையில் 6 பேர் கொண்ட குழுவைத் தமிழக அரசு அமைத்துள்ளது.
தமிழகத்தில் மாவட்ட எஸ்.பி.யாக உள்ள பெண் ஐபிஎஸ் அதிகாரி ஒருவர் முதல்வர் பாதுகாப்புப் பணியில் இருந்துள்ளார். அவரது மேலதிகாரியான சிறப்பு டிஜிபி அவரது மாவட்டத்துக்கு வந்தபோது மரியாதை நிமித்தமாகச் சந்தித்தபோது அவரை காரில் ஏறச் சொன்ன உயர் அதிகாரி பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், அதுகுறித்து அந்தப் பெண் ஐபிஎஸ் அதிகாரி தமிழக சட்டம் ஒழுங்கு காவல்துறை டிஜிபி திரிபாதியிடமும், உள்துறைச் செயலரிடமும் புகார் அளித்ததாகவும் தகவல் வெளியானது.
இந்நிலையில் பாதிக்கப்பட்ட பெண் எஸ்.பி.க்கு ஆதரவாக சம்பந்தப்பட்ட சிறப்பு டிஜிபி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி திமுக எம்.பி.க்கள் கனிமொழி, தமிழச்சி தங்கபாண்டியன் உள்ளிட்டோர் கண்டித்தனர். எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் கடுமையாகக் கண்டித்து அறிக்கை வெளியிட்டார். சம்பந்தப்பட்ட அதிகாரியைப் பாதுகாக்க நினைத்தால் திமுக பெரும் போராட்டத்தில் குதிக்கும் என்று எச்சரித்தார்.
இந்நிலையில் பெண் ஐபிஎஸ் அதிகாரிக்குப் பாலியல் தொல்லை கொடுத்த சிறப்பு டிஜிபி குறித்து விசாரணை நடத்த கூடுதல் தலைமைச் செயலர் அந்தஸ்தில் உள்ள பெண் அதிகாரி தலைமையில் விசாரணை கமிட்டி அமைக்கப்பட்டு ஆணை வெளியிடப்பட்டுள்ளது.
இதுகுறித்த தமிழக அரசின் உள்துறைச் செயலர் இன்று வெளியிட்ட உத்தரவு:
''பெண் ஐபிஎஸ் அதிகாரிக்குப் பாலியல் தொல்லை அளித்ததாக வந்த புகாரில் சிறப்பு டிஜிபி (சட்டம் ஒழுங்கு) குறித்து விசாரணை நடத்த கீழ்க்கண்ட உறுப்பினர்கள் கொண்ட “விசாரணை கமிட்டி” அமைக்கப்படுகிறது.
1. திட்ட வளர்ச்சித்துறை செயலர் மற்றும் கூடுதல் தலைமைச் செயலர் ஜெயஸ்ரீ ரகுநந்தன் - தலைமை அலுவலராகவும்
உறுப்பினர்களாக
2. தலைமையிட கூடுதல் டிஜிபி சீமா அகர்வால்
3. நிர்வாகப் பிரிவு ஐஜி அருண்
4. காஞ்சிபுரம் டிஐஜி சாமுண்டீஸ்வரி
5. டிஜிபி அலுவலகத் தலைமை நிர்வாக அதிகாரி வி.கே.ரமேஷ் பாபு
6. லொரேட்டா ஜோனா தலைவர் நிகழ்ச்சி மேலாண்மை, சர்வதேச நீதி பணி (ஐஜெஎம்)
பணியிடங்களில் பெண்களுக்கான பாலியல் தொந்தரவுகளைத் தடுக்கும் சட்டம் 2013-ன்படி (மத்திய சட்டம் 14 முதல் 2013) இந்தக் குழு தேவையான அடுத்தகட்ட நடவடிக்கையை எடுக்கும். மேலும் விசாரணைக் குழு எவ்வாறு விசாரணை நடத்தும் முறை குறித்து இந்த உத்தரவில் இணைக்கப்பட்டுள்ளது”.
இவ்வாறு அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.