கனமழையால் கட்டுமான பணிகள் பாதிப்பு: சொந்த ஊர் செல்ல ரயில் நிலையத்தில் குவிந்த வடமாநில தொழிலாளர்கள்

கனமழையால் கட்டுமான பணிகள் பாதிப்பு: சொந்த ஊர் செல்ல ரயில் நிலையத்தில் குவிந்த வடமாநில தொழிலாளர்கள்
Updated on
1 min read

விரைவு ரயில்கள் ரத்தானதால் ஏமாற்றம்

*

கட்டுமான பணிகள் பாதிக்கப்பட்ட தால் வடமாநில தொழிலாளர்கள் பலரும் தங்கள் சொந்த ஊர் செல்ல சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் குவிந்தனர். இந்நிலையில் நேற்று 27 ரயில்கள் ரத்து செய்யப்பட்டதால் அவர்கள் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர்.

தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தீவிரமடைந்துள்ளதால் சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் தொழிற்சாலைகள், கட்டுமானப் பணிகள் முடங்கியுள்ளன. பெரும் பாலான இடங்களில் 10 நாட் களுக்கு பிறகே கட்டுமான பணிகள் நடைபெறும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் கட்டுமானப் பணிகளுக்காக வந்து செங்கல்பட்டு, பரனூர், கூடுவாஞ்சேரி, கோவளம், திருவான்மியூர், திருவள்ளூர், உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தற்காலிக குடியிருப்புகளில் தங்கி யிருக்கும் சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வடமாநில தொழி லாளர்கள் நேற்று தங்கள் சொந்த ஊருக்கு செல்ல சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு வந்திருந்தனர். இதனால் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கூட்டம் அதிகமாக இருந்தது.

இந்நிலையில் ஆந்திராவில் பெய்துவரும் கனமழை காரணமாக சென்னையில் இருந்து ஆந்திரா வழியாக வடமாநிலங்களுக்கு இயக்கப்படும் 27 விரைவு ரயில்கள் நேற்று ரத்து செய்யப்பட்டன. இதனால் சொந்த ஊர் செல்வதற்காக வந்த வடமாநில தொழிலாளர்கள் ஏமாற்றத்துடன் இருப்பிடம் திரும்பினர்.

இதுகுறித்து அவர்களில் சிலர் கூறியதாவது:

ஜெ.கோவிந்த்குமார்:

கனமழையால் கடந்த ஒருவாரமாக கட்டுமான பணிகள் நடக்கவில்லை. அடுத்த வாரம்தான் பணி தொடங்கும் என்று கூறியுள்ளனர். இதனால், என் சொந்த மாநிலமான உத்திரப்பிரதேசத்துக்கு செல்கிறேன்.

ஆர்.பிரஜேஷ்:

கடந்த 2 ஆண்டுகளாக திருவள்ளூரில் உள்ள பிளாஸ்டிக் தொழிற்சாலையில் பணியாற்றி வருகிறேன். மழை காரணமாக தற்போது வேலை இல்லாததால் சொந்த ஊருக்கு செல்கிறோம்.

ர.விஜய்:

அடுத்த 2 வாரங்களுக்கு பணி இல்லை என்பதால் நாங்கள் சொந்த ஊருக்கு செல்ல சென்ட்ரல் வந்தோம். ஆனால், எங்கள் ஊருக்கு செல்லும் ஹவுரா விரைவு ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது.

சந்திரா:

ஆந்திரா மாநிலம் ஸ்ரீகாகுளம்தான் எனது சொந்த ஊர். மாம்பலத்தில் நானும் என் கணவரும் சிமென்ட் தொழிற்சாலையில் பணியாற்றி வருகிறோம். கனமழையால் அடுத்த 2 வாரங்களுக்கு பணி நடக்காது என்பதால், எங்கள் ஊருக்கு செல்கிறோம். ரயில்கள் ரத்து செய்துள்ளதால் கிடைக்கும் ரயில்களில் மாறி, மாறி செல்லவுள்ளோம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in