

புதுவை அரசை கலைத்திருப்பதன் மூலம் தமிழகத்துக்கு ஓரு சிக்னல் கொடுத்துள்ளனர், தமிழகத்தில் திமுக அரசு அமைந்தால் அதனையும் அசைத்து பார்க்க முடியும் என எச்சரிக்கை விடுக்கும் ஒத்திகை போல இதை பார்க்கிறோம் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிறுவனர் தொல். திருமாவளவன் குறிப்பிட்டார்.
புதுச்சேரியில் காங்கிரஸ் அரசு கவிழ்ந்ததையடுத்து மத்திய பாஜக அரசை கண்டித்து காங்கிரஸ், திமுக உள்ளிட்ட மதச்சார்பற்ற கூட்டணி கட்சிகளின் சார்பில் அண்ணாசிலை அருகே இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. முன்னாள் முதல்வர் நாராயணசாமி, திமுக அமைப்பாளர் எஸ்பி.சிவக்குமார், இந்தியகம்யூனிஸ்ட் மாநில செயலாளர் சலீம்,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பிரதேச செயலாளர் ராஜாங்கம், மற்றும் கூட்டணி கட்சிகள், இயக்கங்களை சேர்ந்த தலைவர்கள், நிர்வாகிகள் பங்கேற்றனர்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி நிறுவனர் தொல் திருமாவளவன் பேசியதாவது:
”இந்தியாவில் பல மாநிலங்களில் ஆட்சியை பாஜகவினர் கவிழ்த்துள்ளனர். அநாகரீக அரசியலை அரங்கேற்றி வருகின்றனர். தேசத்தை பிடித்திருக்கும் பெரும் தீங்கு பாஜக. கரோனாவை விட பாஜக கொடிய நோய். எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கி ஆட்சி கவிழ்ப்பை செய்துள்ளனர். ஒரு வகையில் காங்கிரசுக்கு பாஜக நல்லதையே செய்துள்ளது. வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் மக்கள் மீண்டும் காங்கிரஸ் திமுக கூட்டணிக்கு வாக்களிப்பார்கள்.
பாஜகவின் அடாவடி அரசியலுக்கு என்ஆர்.காங்கிரஸ், அதிமுக துணை சென்றுள்ளது. அவர்களையும், ராஜினாமா செய்தவர்களையும் வாக்குக்கேட்க வரும்போது வீதிக்குள் நுழையவிடாமல் விரட்டியடிக்க வேண்டும். புதுவை அரசை கலைத்திருப்பதன் மூலம் தமிழகத்துக்கு ஓரு சிக்னல் கொடுத்துள்ளனர். தமிழகத்தில் திமுக அரசு அமைந்தால் அதனையும் அசைத்து பார்க்க முடியும் என எச்சரிக்கை விடுக்கும் ஒத்திகை போல பார்க்கிறோம். ஆனால் தமிழகத்தில் பாஜக முயற்சி, கனவு பலிக்காது" என்று குறிப்பிட்டார்.