

தமிழ்நாட்டில் காவிரி- குண்டாறு இணைப்புத் திட்டமானது 100 ஆண்டுகால கனவுத் திட்டம் மட்டுமல்ல விவசாயத்திற்கும், குடிநீருக்குமான மிக முக்கியமான திட்டமாகும். இந்நிலையில் இத்திட்டத்திற்கு கர்நாடக அரசும், அம்மாநிலத்தில் உள்ள சில அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவிப்பது கண்டிக்கத்தக்கது என ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தமாகா தலைவர் ஜி.கே.வாசன் இன்று வெளியிட்ட அறிக்கை:
“தமிழக அரசின் காவிரி- குண்டாறு இணைப்புத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் கர்நாடக அரசைக் கண்டிக்கிறோம். மத்திய அரசு இப்பிரச்சினையில் தலையிட்டு இத்திட்டமானது செயல்பட கர்நாடக அரசு எவ்விதத்திலும் தடையாக இருக்கக் கூடாது என்பதற்காக நடவடிக்கை எடுக்க வேண்டும். கர்நாடக அரசும் மனிதாபிமான அடிப்படையில் இத்திட்டத்திற்கு ஒத்துழைப்பு தர வேண்டும்
தமிழ்நாட்டில் காவிரி - குண்டாறு இணைப்புத் திட்டமானது 100 ஆண்டுகால கனவுத் திட்டம் மட்டுமல்ல விவசாயத்திற்கும், குடிநீருக்குமான மிக முக்கியமான திட்டமாகும். இந்நிலையில் இத்திட்டத்திற்கு கர்நாடக அரசும், அம்மாநிலத்தில் உள்ள சில அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவிப்பது கண்டிக்கத்தக்கது.
இத்திட்டத்தின் முதல் கட்டத்திற்கு ரூ.6,941 கோடி மதிப்பில் அடிக்கல் நாட்டப்பட்டதன் மூலம் கரூர், திருச்சி, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் ஏரிகளும், நிலங்களும் பயன்பெறும் வகையில் கால்வாய் வெட்டப்பட்டு தெற்கு வெள்ளாற்றுடன் இணைக்கப்படும்.
குறிப்பாக வெள்ளக் காலங்களில் காவிரியில் உபரியாக வெளியேறும் நீரைத் தமிழகத்துக்குப் பயன்படுத்துவதற்காகத்தான் காவிரி- குண்டாறு இணைப்புத் திட்டமானது கொண்டு வரப்படுகிறது. வெள்ளக் காலங்களில் வரும் உபரி நீரைத் தமிழகம் பயன்படுத்த கர்நாடக மாநிலம் எதிர்ப்பு தெரிவிப்பது நியாயமற்றது.
அதே சமயம் கர்நாடகத்தில் தண்ணீர் பஞ்சம் என்றால் அப்போது காவிரியின் உபரி நீரை கர்நாடக மாநிலத்திற்குப் பயன்படுத்திக் கொள்வது நியாயமானது. எனவே கர்நாடக அரசு, காவிரி - குண்டாறு இணைப்புத் திட்டத்திற்கு மனிதாபிமான அடிப்படையில் ஒத்துழைப்பு தர வேண்டும்.
இருப்பினும் மத்திய அரசும் இப்பிரச்சினையில் தலையிட்டு இத்திட்டமானது தமிழகத்தில் தொடங்கப்பட, செயல்பட கர்நாடக அரசு எவ்விதத்திலும் தடையாக இருக்கக் கூடாது என்பதற்காக உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமாகா சார்பில் வலியுறுத்துகிறேன்.
தமிழக அரசும் இத்திட்டப் பணிகளைத் தொடர்ந்து மேற்கொண்டு செயல்படுத்திட அனைத்து முயற்சிகளிலும் ஈடுபட வேண்டும்”.
இவ்வாறு ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.