

உருமாற்ற கரோனா பாதிப்பு குறித்து உரிய தடுப்பு நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் எடுத்து வருவதாகப் பொதுநல வழக்கின் மீதான விசாரணையில் பதில் அளிக்கப்பட்டதை அடுத்து மேலும் உத்தரவிட்டுச் சுமையை ஏற்ற விரும்பவில்லை. ஆனால், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
உருமாற்றம் பெற்ற கரோனா பரவலைத் தடுக்க அனைத்து வெளிநாட்டுப் பயணிகளையும் பரிசோதனைக்கு உள்ளாக்கக் கோரி திருச்செந்தூரைச் சேர்ந்த வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன், சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்குத் தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, மத்திய அரசுத் தரப்பில் அளித்த பதிலில், “புதிய கரோனா தடுப்புக்கான புதிய விதிமுறைகள் பிப்ரவரி 17ஆம் தேதி வெளியிடப்பட்டுள்ளது. குறிப்பாக சீனா மற்றும் பிரிட்டன் மட்டுமல்லாமல், தென்னாப்பிரிக்கா, பிரேசில் ஆகிய நாடுகளிலிருந்து வரும் பயணிகளையும் சோதனைக்கு உள்ளாக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டது.
மாநில அரசுத் தரப்பில், மத்திய அரசின் வழிகாட்டுதல்கள் முழுமையாகப் பின்பற்றப்படும் என உத்தரவாதம் அளிக்கப்பட்டது.
இவற்றைப் பதிவு செய்த தலைமை நீதிபதி அமர்வு, உருமாற்றம் பெற்ற கரோனாவின் தாக்கம் ஆந்திராவின் அமராவதி மற்றும் மகாராஷ்டிராவின் அகோலா ஆகிய இடங்களில் கண்டறியப்பட்டுள்ளதாகவும், அது நம் எல்லையிலிருந்து வெகுதொலைவில் இல்லை என்றும் குறிப்பிட்டது.
கரோனா தடுப்பு குறித்த பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய, மாநில அரசுகள் கையாண்டு வரும் நிலையில், உத்தரவுகளைப் பிறப்பித்து அரசுக்கு மேலும் சுமை ஏற்ற விரும்பவில்லை எனத் தெரிவித்த நீதிபதிகள், குடிமக்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க மத்திய - மாநில அரசுகள் உடனடி நடவடிக்கைகளை எடுக்க உத்தரவிட்டு, விசாரணையை ஏப்ரல் 5-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.