

கைத்தறி மற்றும் துணிநூல் துறைக்கு 2021-22-ம் ஆண்டில் ரூ.1,224 கோடியே 26 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆதிதிராவிடர் சிறப்பு கூறுகள் திட்டத்துக்காக ரூ.13,967 கோடியே 58 லட்சம், பழங்குடியினர் துணை திட்டத்துக்காக ரூ.1,276 கோடியே 24 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
உயர்கல்வி உதவித் தொகை திட்டத்துக்கான நிதி ரூ.1,932 கோடியே 19 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. ஆதிதிராவிடர் குடியிருப்பு பகுதிகளில்அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்காக ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் கல்வி உதவித் தொகை திட்டத்துக்காக ரூ.374.88 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 2021-22-ம் ஆண்டில் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டு கழகத்தால் 19,855 பயனாளிகளுக்கு கடனுதவி வழங்கப்படும். இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறைக்கு ரூ.229.37 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தற்போது செயல்பட்டு வரும் விரிவாக்கப்பட்ட தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கான புதிய மருத்துவ காப்பீட்டுதிட்டம், வரும் ஜூன் மாதம் நிறைவடைகிறது. மேம்படுத்தப்பட்ட சலுகையுடன் இத்திட்டம் நீட்டிக்கப்படும். தற்போதைய ஒட்டுமொத்த காப்பீட்டு தொகையான ரூ.4 லட்சம் ரூ.5 லட்சமாக அதிகரிக்கப்படும். குறிப்பிட்ட சிகிச்சைகளுக்கான காப்பீட்டு தொகைரூ.7.5 லட்சத்தில் இருந்து ரூ.10 லட்சமாக உயர்த்தப்படும்.