Published : 24 Feb 2021 03:17 am

Updated : 24 Feb 2021 05:33 am

 

Published : 24 Feb 2021 03:17 AM
Last Updated : 24 Feb 2021 05:33 AM

தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்: கோவையில் ரூ.6,683 கோடியில் மெட்ரோ ரயில் திட்டம்; 6 முதல் 10-ம் வகுப்பு வரை கணினி அறிவியல் பாடம் அறிமுகம்; ரூ.1,580 கோடியில் 2,700 புதிய பேருந்துகள்

tn-budget-2021
தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட்டை சட்டப்பேரவையில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்து உரையாற்றினார். படம்: ம.பிரபு

சென்னை

தமிழக அரசின் 2021-22 நிதியாண்டுக் கான இடைக்கால பட்ஜெட்டை சட்டப் பேரவையில் துணை முதல்வர் ஓ.பன் னீர்செல்வம் தாக்கல் செய்தார். கோவையில் ரூ.6,683 கோடியில் மெட்ரோ ரயில் திட்டம், 6 முதல் 10-ம் வகுப்பு வரை கணினி அறிவியல் பாடம் அறிமுகம், ரூ.1,580 கோடி யில் 2,700 புதிய பேருந்துகள் உள் ளிட்ட பலவேறு அறிவிப்புகள் இடைக்கால பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ளன. காப்பீடு திட்டத்தில் வறுமைக்கோட்டுக்குகீழ் வாழும் குடும்பத்தின் தலைவரது இயற்கை மரணத்துக்கு ரூ. 2 லட்சம், விபத்து மரணத்துக்கு ரூ.4 லட்சம் காப்பீட்டுத் தொகை வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டப்பேரவை பொதுத் தேர்தல் வரும் ஏப்ரல் இறுதியில் நடக்கலாம் என எதிர்பார்க்கப்படு கிறது. தேர்தல் வருவதால், தமிழக அரசின் 2021-22 நிதியாண்டுக்கான முழுமையான பட்ஜெட்டை தற் போதைய அரசு தாக்கல் செய்ய முடியாது. எனவே, இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்வதற்காக தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர், கலைவாணர் அரங்கின் 3-வது தளத்தில் உள்ள பல்வகை கூட்ட அரங் கில் நேற்று தொடங்கியது. இடைக் கால பட்ஜெட்டை நிதியமைச்சரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர் செல்வம் தாக்கல் செய்தார்.


முன்னதாக, ஓமந்தூரார் தோட்ட வளாகத்தில் உள்ள ஆலமரத்தடி விநாயகர் ஆலயத்தில் துணை முதல் வர் ஓபிஎஸ் தரிசனம் செய்தார். அதன்பின், காலை 10.58 மணிக்கு முதல்வர் பழனிசாமியுடன் பேர வைக்கு வந்த ஓபிஎஸ், சரியாக 11 மணிக்கு பட்ஜெட் உரையை வாசிக்கத் தொடங்கினார். அப்போது, எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன் எழுந்து பேச வாய்ப்பு கேட்டார். அதற்கு அனுமதி மறுத்த பேரவைத் தலைவர் பி.தனபால், ‘‘நீங்கள் எது பேசினாலும் அவைக் குறிப்பில் பதிவாகாது’’ என்றார். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்எல்ஏக்கள் எழுந்து நின்று முழக்க மிட்டனர். இதனால் பேரவையில் சிறிது நேரம் கூச்சல், குழப்பம் ஏற்பட்டது. துரைமுருகன் பேச பேர வைத் தலைவர் அனுமதி மறுத்ததால் பட்ஜெட் உரையை புறக்கணித்து திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். அவர்களுக்கு ஆதரவாக காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உறுப்பினர்களும் வெளிநடப்பு செய்தனர்

அதன்பின் இடைக்கால பட் ஜெட்டை துணை முதல்வர் தாக்கல் செய்தார். அப்போது அவர் பேசிய தாவது:

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வின் ஆசியுடன் முதல்வர் பழனிசாமி தலைமையில் செயல்பட்டு வரும் இந்த அரசு, தனது ஆட்சிக்காலத்தை முழுமையாக நிறைவு செய்தது மட்டுமின்றி, தமிழகத்தை நாட்டி லேயே தலைசிறந்த மாநிலமாக மாற்றியுள்ளது. கரோனா பெருந் தொற்றால் தமிழகத்தில் ஏற்பட்ட முன்நிகழ்வற்ற சவால்கள் மற்றும் மிகப்பெரிய தாக்கத்தின் விளைவு கள் இந்த பட்ஜெட்டில் காணப்படு கிறது. ஆய்வு செய்தல், பரிசோதனை மேற்கொள்ளுதல், தனிமைப்படுத்து தல் மற்றும் சிகிச்சை அளித்தல் சார்ந்த பொது சுகாதார வழிகாட்டி நெறிமுறைகளை பின்பற்றியதால் கரோனா பரவலை கட்டுக்குள் கொண்டுவர முடிந்தது. கரோனா பொருந்தொற்று மீட்டெடுப்பு நட வடிக்கைககளுக்காக ரூ.13,352 கோடியே 85 லட்சம் செலவிடப் பட்டுள்ளது. 2020-21-ம் ஆண்டில் தமிழகம் 2.02 சதவீதம் நேர்மறை வளர்ச்சியை பதிவு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகத்தில் வறுமைக்கோட் டுக்குகீழ் வாழும் 55 லட்சத்து 67 ஆயிரம் தகுதியான குடும்பங்களில் குடும்பத் தலைவர் இயற்கை மரணம் அடைந்தால், ‘புரட்சித்தலைவி அம்மா விரிவான விபத்து மற்றும் ஆயுள் காப்பீட்டுத் திட்டம்’ மூலம் ரூ.2 லட்சம் காப்பீட்டுத் தொகை வழங்கப்படும். குடும்பத் தலைவர் விபத்தில் இறந்தால் 4 லட்சமும், நிரந்தர இயலாமை ஏற்பட்டால் ரூ.2 லட்சமும் காப்பீட்டுத் தொகை யாக வழங்கப்படும்.

கரோனா நிவாரணத்துக்காக மாநில பேரிடர் பொறுப்பு நிதியில் இருந்து ரூ.11,943 கோடியே 85 லட்சம் செலவிடப்பட்டுள்ளது. தமிழகத்துக்காக 15-வது நிதிக் குழுவால் பரிந்துரைக்கப்பட்டுள்ள ரூ.1,360 கோடி போதுமானதாக இல்லை.

இவ்வாறு உரையாற்றினார்.

முக்கிய அம்சங்கள்

l காவல்துறைக்கு இந்த ஆண்டு ரூ.9,567 கோடியே 93 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

l தமிழகத்தில் 16 லட்சத்து 43 ஆயிரத்து 347 விவசாயிகள் செலுத்த வேண்டிய ரூ.12,110 கோடியே 74 லட்சம் பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்பட்டது. இதற்காக இடைக்கால பட்ஜெட்டில் ரூ.5 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

l பிரதமரின் பயிர்க் காப்பீட்டு திட்டத்தின்கீழ் புதிய இணை காப்பீட்டு முறையை தமிழக அரசு அறிமுகப்படுத்தி உள்ளது. இத்திட்டத்துக்காக ரூ.1,738 கோடியே 81 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது.

l இந்த நிதியாண்டில் ஊரக வளர்ச்சித் துறைக்காக ரூ.22,218 கோடியே 58 லட்சம், நெடுஞ்சாலைத் துறைக்காக ரூ.16,316 கோடியே 47 லட்சமும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

l ஜெர்மன் வளர்ச்சி வங்கியின் நிதியுதவியுடன் ரூ.1,580 கோடியில் 2,200 பிஎஸ்-6 வகை பேருந்துகளும், 800 மின்சார பேருந்துகளும் கொள்முதல் செய்யப்படும்.

l கோவை மெட்ரோ ரயில் திட்டத்தில் 44 கி.மீ. நீளமுள்ள முதல்கட்டத்தை ரூ.6,683 கோடியில் அமைப்பதற்கான விரிவான சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்கப்பட்டு ஆய்வில் உள்ளது.

l அனைத்து அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளிலும் 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு கணினி அறிவியல் அறிமுகப்படுத்தப்படும்.

l முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்துக்கு ரூ.19,420 கோடியே 54 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது.

l சத்துணவு திட்டத்துக்காக ரூ.1,953 கோடியே 98 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது.

l மாநிலத்தின் மொத்த வரி வருவாய் இந்த நிதியாண்டில் 17.64 சதவீதம் குறைந்துள்ளது. மத்திய அரசின் வருவாயில், மாநிலங்கள் தங்கள் பங்கை பெறுவதற்கு, மேல் வரி மற்றும் கூடுதல் கட்டணங்களை அடிப்படை வரி வீதங்களுடன் இணைக்க மத்திய அரசை மீண்டும் கேட்டுக் கொள்கிறேன்.

l மாநில அரசின் ஒட்டுமொத்த வருவாய் பற்றாக்குறை ரூ.65,994 கோடியே 5 லட்சமாக உயர்ந்துள்ளது. கரோனா பெருந்தொற்றால் வருவாய் கடுமையாக குறைந்துள்ளதால், அரசு கடன்கள் பெறுவதை தவிர்க்க இயலாது. இதனால் நிதிப்பற்றாக்குறை அதிகரிக்கும்.

l மாநில சொந்த வரி வருவாய் ரூ.1 லட்சத்து 35 ஆயிரத்து 641 கோடியே 78 லட்சமாக இருக்கும். மொத்த வருவாய் வரவினம் ரூ.2 லட்சத்து 18 ஆயிரத்து 991 கோடியே 96 லட்சமாக இருக்கும்.

l தற்போதைய நிலவர அடிப்படையில் வருவாய் வரவினங்கள் ரூ.2 லட்சத்து 60 ஆயிரத்து 409 கோடியே 26 லட்சமாக இருக்கும். இதன் அடிப்படையில், வருவாய் பற்றாக்குறை ரூ.41,417 கோடியே 30 லட்சமாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதனால் மூலதன செலவு ரூ.43,170 கோடியே 61 லட்சமாக இருக்கும்.

l ஒட்டுமொத்தக் கடனை பொறுத்தவரை 2021- மார்ச் 31-ம் தேதி ரூ.4 லட்சத்து 85 ஆயிரத்து 502 கோடியே 54 லட்சமாகவும், 2022 மார்ச் 31-ம் தேதி ரூ.5 லட்சத்து 70 ஆயிரத்து 189 கோடியே 29 லட்சமாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. செலவினங்களை தக்கவைக்க அதிக கடன் வாங்க வேண்டி வரும். மாநிலத்தின் மொத்த உற்பத்தி மதிப்பில் கடன் விகிதம் 24.98 சதவீதம் அதாவது விதிமுறைக்கு உட்பட்டே இருக்கும்.


TN budget 2021இடைக்கால பட்ஜெட்டைதுணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்மெட்ரோ ரயில் திட்டம்கணினி அறிவியல் பாடம்

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author

x