Published : 24 Feb 2021 03:17 AM
Last Updated : 24 Feb 2021 03:17 AM

தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்துக்கு வரும் புகார்கள் மீது தீர்வு காண்பதில் சுணக்கம்: 2 ஆண்டுகளில் 186 மனுக்களுக்கு மட்டுமே தீர்வு

மனோஜ் முத்தரசு

தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தில் ஆண்டுக்கு ஆண்டு புகார்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், அதன் மீது தீர்வு காணப்படும் எண்ணிக்கை குறைந்து வருகிறது.

நாடு முழுவதும் 2,418 சாதியினர் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதற்காக தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் 1993-ம் ஆண்டு அமைக்கப்பட்டது. தமிழகத்தில் சுமார் 250 சாதிகள்பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் உள்ளன. சாதிய ரீதியாக ஒடுக்குமுறை, சமூகம் மற்றும் கல்வி ரீதியான உரிமை மறுக்கப்படும்போது ஆணையம் தலையிட்டு பிரச்சினைக்கு தீர்வு காண்கிறது.

அதன்படி, பாதிக்கப்பட்டவர் ஆணையத்தின் தலைவர், உறுப்பினர், செயலாளர் என யாரிடம்வேண்டுமென்றாலும் புகார் அளிக்கலாம். 2019 மற்றும் 2020-ம் ஆண்டுகளில் தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்துக்கு வந்த புகார்கள் குறித்தும் தீர்வு காணப்பட்ட புகார்களின் எண்ணிக்கை குறித்தும் தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம்தெரியவந்த பல்வேறு விவரங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

கடந்த 2019-ல் மட்டும் 1,452 புகார்கள் ஆணையத்துக்கு வந்துள்ளன. இதில் 1,056 புகார்கள் மட்டுமே ஆணையத்தின் செயல்பாட்டுக்கு உட்பட்டதாக இருந்தது.அதில், வெறும் 159 புகார்களுக்கு மட்டுமே தீர்வு காணப்பட்டுள்ளன. 237 புகார்கள் மட்டுமே விசாரணையில் உள்ளன. 660 புகார்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளன.

அதேபோல், 2020-ல் வரப்பெற்ற1,542 புகார்களில், 1,017 மட்டும் விசாரணைக்கு எடுக்கப்பட்டன. ஆனால்,அதில் வெறும் 27-க்கு மட்டுமே தீர்வு காணப்பட்டுள்ளது. 498 புகார்கள் விசாரணையிலும் 492 புகார்கள் நிலுவையிலும் உள்ளன. இதன்படி 2019 மற்றும் 2020-ல் மட்டும் 1,152 புகார்கள் மீது இதுவரை எந்த ஒரு விசாரணையையும் ஆணையம் தொடங்கவில்லை.

இதுதொடர்பாக தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் அதிகாரி ஒருவர் கூறியதாவது:

ஆணையத்துக்கு வரும் புகார்கள் 5 வகையாக விசாரிக்கப்படுகிறது. அதன்படி, நேரடியாகவோ விசாரணை குழு மூலமாகவோ மாநில அல்லது மண்டல அளவிலான மாநில பிரநிதிகள் வழியாகவோ அல்லது மாநில, மத்தியஅரசு நிறுவனங்கள் மூலமாகவோ விசாரிக்கப்படும். பிரச்சினையின் தீவிரத்தை பொருத்தே விசாரணையின் தன்மை தீர்மானிக்கப்படுகிறது.இதில் மாநில மற்றும் மத்தியஅரசு நிறுவனங்கள் மேற்கொள்ளும் விசாரணை மெதுவாகவே நடக்கின்றன. இதனாலேயே பல புகார்கள் குறித்த விசாரணை தாமதமாகின்றன. 2019-ல் முக்கியமான 98 பிரச்சினைகளுக்கு ஆணையம் நேரடியாகவே தீர்வு கண்டுள்ளது. 2020-ல் கரோனா பாதிப்பால் பணிகள் முடங்கின.

அதேபோல், இடஒதுக்கீடு தொடர்பாகவும் அதிகப்படியான புகார்கள் வந்துள்ளன. இதுகுறித்து நீதிமன்றத்தில் வழக்குகளும் மத்திய அரசு கொள்கை முடிவும் இருப்பதால் ஆணையம் விசாரணை நடத்த முடியவில்லை. இதனாலும், பல புகார்கள் நிலுவையில் உள்ளன. ஆணையத்தின் செயல்பாட்டுக்கு உட்பட்டு இருக்கும் புகார்கள்மீதான விசாரணை முடுக்கிவிடப் பட்டுள்ளன என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x