Published : 24 Feb 2021 03:17 AM
Last Updated : 24 Feb 2021 03:17 AM

ராமர் பிள்ளையிடம் மூலிகை பெட்ரோலுக்கு அனுமதி வாங்கித் தருவதாக மோசடி: சிபிசிஐடி விசாரணையில் தகவல்

சென்னை

மூலிகை பெட்ரோலுக்கு அனுமதி வாங்கித் தருவதாக கூறி, ராமர் பிள்ளையிடம் பல லட்சம் ரூபாய் மோசடி செய்த பெங்களூரு கும்பலிடம் சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

எம்.பி., துணை வேந்தர் போன்ற பதவிகளை வாங்கித் தருவதாகக் கூறி, பலரிடம் கோடிக்கணக்கில் மோசடி செய்ததாக பெங்களூருவைச் சேர்ந்த மகாதேவய்யா(54), அவரது மகன் அங்கித்(29) மற்றும் இடைத்தரகர் ஓம்(34) ஆகிய மூவரை சிபிசிஐடிபோலீஸார் கடந்த 9-ம் தேதி கைது செய்தனர். பிரதமர், மாநிலமுதல்வர்கள் மற்றும் ஆளுநர்கள் தங்களுக்கு மிகவும் நெருக்கம் என்பதுபோல் காட்டிக்கொண்டு எம்.பி. எம்எல்ஏ சீட்வாங்கி தருவதாகவும், பல்கலைக்கழக துணைவேந்தர் பதவி, பொதுப்பணித் துறை ஒப்பந்தங்களை நேரடியாக பெற்றுத் தருவதாகவும் கூறி பலரிடம் இவர்கள் மோசடி செய்ததும் விசாரணையில் தெரியவந்தது.

ஒவ்வொரு நபரிடம் இருந்தும் ஒன்றரை கோடி ரூபாய் முதல் 10 கோடி ரூபாய் வரை பணம் வசூல் செய்து, தமிழகத்தில் மட்டும் ரூ.100 கோடிக்கும் மேல் மோசடி செய்திருப்பதும் விசாரணையில் தெரியவந்தது. கைதான 3 பேரையும் காவலில் எடுத்து சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை நடத்தியதில், பிரதமர் அலுவலகத்தில் வேலைப்பார்த்து ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரிகள் 2 பேர் மோசடி செய்வதற்கு உதவி செய்ததும் தெரியவந்தது.

மூலிகை பெட்ரோல் கண்டுபிடித்து விட்டதாக கூறி நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியவர் ராமர் பிள்ளை. ஆனால், அவரது மூலிகை பெட்ரோலுக்கு மத்திய அரசு அங்கீகாரம் கொடுக்கவில்லை. அவரை கைது செய்து சிறையிலும் அடைத்தனர். இந்நிலையில், மூலிகை பெட்ரோலுக்கு அனுமதி வாங்கி கொடுப்பதாக மகாதேவய்யா கும்பல் ராமர் பிள்ளையை தொடர்புகொண்டு பேசியுள்ளனர். மேலும், இதற்காக பல லட்சம் ரூபாயையும் ராமர்பிள்ளையிடம் இருந்து வாங்கிஉள்ளனர். இதுகுறித்து ராமர் பிள்ளையிடம் தனியாக புகார் வாங்கி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த சிபிசிஐடி போலீஸார் முடிவு செய்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x