‘மை இந்தியா கட்சி’ ஆட்சிக்கு வந்தால் பிளஸ் 2 வரை இலவச கல்வி: தேர்தல் அறிக்கை வெளியிட்டு தலைவர் ஸ்ரீஅனில்குமார் தகவல்
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பிளஸ் 2 வரை இலவசக் கல்வி அளிக்கப்படும், சுங்கக் கட்டணத்தை முழுமையாக ரத்து செய்வோம் என ‘மை இந்தியா கட்சி'யின் தேசியத் தலைவர் ஸ்ரீஅனில்குமார் கூறினார்.
‘மை இந்தியா’ என்ற பெயரில் சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் ஸ்ரீஅனில்குமார் புதிய கட்சியைத் தொடங்கினார். தமிழக சட்டப்பேரவை தேர்தலில் 234 தொகுதிகளிலும் போட்டியிட திட்டமிட்டு மதுரையில் தனது தேர்தல் சுற்றுப்பயணத்தை நேற்று தொடங்கினார். முன்னதாக மேலப்பொன்னகரம் பகுதியில் கட்சி அலுவலகத்தை திறந்து வைத்தார். மாலையில் தனியார் ஓட்டலில் தேர்தல் திட்ட அறிக்கை வெளியீடு நிகழ்ச்சி நடந்தது.
பின்னர் செய்தியாளர்களிடம் ஸ்ரீஅனில்குமார் கூறியதாவது: தமிழகம் எனது தாய் வீடு. இங்கிருந்தே எனது அரசியல் பயணத்தைத் தொடங்குகிறேன். பெரிய கட்சிகளுக்கு கட்டமைப்புகள் இருந்தாலும், எங்களுக்கு மக்கள் இருக்கிறார்கள்.
பிரதமர் மோடி நல்ல திட்டங்களைக் கொண்டு வந்தாலும், நடைமுறைப்படுத்துவதில் பூஜ்யம். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் தமிழக பதிவெண்கள் கொண்ட வாகனங்களுக்கு ஒரு பைசா கூட சுங்கக் கட்டணம் வசூலிக்கமாட்டோம்.
விவசாயிகளின் கடன்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்வோம். 65 வயதுக்கு மேற்பட்ட விவசாயிகளுக்கு ரூ.5 ஆயிரம் மாத உதவித்தொகை வழங்கப்படும். எல்கேஜி முதல் 12-ம் வகுப்பு வரை இலவசக் கல்வி அளிக்கப்படும். மகளிருக்குப் பேருந்துக் கட்டணம் இலவசம்.
தொழில் தொடங்க கடன் பெறும் சுயஉதவிக் குழுவினருக்கு ரூ.5 ஆயிரம் வரை தள்ளுபடி செய்யப்படும். அனைவருக்கும் இலவச மருத்துவம், ரூ.2 லட்சத்துக்கு ஆயுள் காப்பீடு ரூ.10 லட்சத்துக்கான விபத்துக் காப்பீடு வழங்கப்படும். பள்ளிகளில் சாதி, மத, இனம் குறித்த தகவல் அளிப்பது கட்டாயமாக்கப்படாது.
எங்களது கட்சியின் முதல்வர் வேட்பாளர் யார் என நிர்வாகிகளுடன் ஆலோசித்து முடிவெடுக்கப்படும். மக்கள் எங்களை ஆதரிப்பார்கள். நிச்சயம் வெற்றி பெறுவோம். ஊழலை கண்காணிக்கவே சிசிடிவி கேமரா சின்னம் பெற்றுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.
மாநிலத் தலைவர் நாராயணபிரபு, மாவட்டத் தலைவர் ஈஸ்வரி ஆகியோர் உடனிருந்தனர்.
