Published : 24 Feb 2021 03:17 AM
Last Updated : 24 Feb 2021 03:17 AM

கோடங்கிபாளையம், இச்சிபட்டி கல்குவாரிகளால் பல்வேறு பாதிப்புகள்: ஆட்சியர் தலைமையில் கருத்துகேட்புக் கூட்டம் நடத்த கிராம மக்கள் வலியுறுத்தல்

வாராந்திர மக்கள் குறைதீர் கூட்டம், திருப்பூர் ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் க.விஜயகார்த்திகேயன் தலைமையில் நடைபெற்றது. பல்வேறு பிரச்சினைகளுக்காக பொதுமக்கள் மனுக்கள் அளித்தனர்.

பல்லடம் வட்டம் கோடங்கிபாளையம் கிராம மக்கள் அளித்த மனு: பல தலைமுறைகளாக கோடங்கிபாளையம், இச்சிபட்டி ஊராட்சிகளுக்கு உட்பட்ட கிராமங்களில் வாழ்ந்து வருகிறோம். விவசாயம் மற்றும் விசைத்தறி பிரதானத் தொழில். எங்கள் பகுதியில் கல்குவாரிகள் உள்ளன. முறைகேடாக இயங்கும் தார் கலவை தொழிற்சாலைகளும் உள்ளன. அரசின் விதிமுறைகளை மீறி கல்குவாரிகளில் பாறைகளை வெட்டி எடுக்கின்றனர். வெடி வைக்கும்போது வெளிவரும் வெடி மருந்து கலந்த புகையால், பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர்.

தினமும் ஆயிரம் லாரிகளில் ஜல்லி கற்கள், டஸ்ட், எம்.சாண்ட், பி.சாண்ட் எடுத்துச் செல்லப்படுகிறது. அதிக பாரம் ஏற்றிச் செல்வதுடன், அதிவேகமாகவும் செல்கிறது. இதனால் சாலைகளில் விபத்துகள் ஏற்படும் சூழலும் நிலவுகிறது. சுவாசக்கோளாறு உட்பட பல்வேறு உடல் உபாதைகளுக்கு மக்கள் ஆளாகின்றனர். தார் பிளாண்ட் குடியிருப்பு பகுதியில் இருந்து150 மீ. தொலைவில் அமைந்துள்ளது. 300 மீ. தூரத்தில் அரசுப் பள்ளியும் உள்ளன. விளைநிலங்களில் மாசு படிவதால் கால்நடைகளை மேய்ச்சலுக்கு விட முடியவில்லை.

இந்நிலையில் புதிதாக கல்குவாரிகளுக்கு உரிமம் வழங்குவது தொடர்பாக, கடந்த 17-ம் தேதி நடந்த கருத்துகேட்புக் கூட்டத்தில் ஆட்சியரை சந்திக்கவிடாமல் செய்தனர். இது, பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆகவே, பாதிக்கப்பட்ட கோடங்கிபாளையம், இச்சிபட்டி, பெருமாக்கவுண்டம்பாளையம், கொத்துமுட்டிபாளையம் ஆகிய பகுதிகளில் பொதுமக்கள் முன்னிலையில் மீண்டும் கலந்தாய்வுக் கூட்டத்தை ஆட்சியர் நடத்த வேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளனர்.

நிர்ணயிக்கப்பட்ட கூலி?

தமிழ்நாடு மின்வாரிய ஒப்பந்தத் தொழிலாளர் சங்கம் சார்பில் அளிக்கப்பட்ட மனுவில், "மின் வாரியத்தில் சுமார் 8400 பேர், கடந்த 15 ஆண்டுகளாக உற்பத்தி மற்றும் பகிர்மான பிரிவுகளில் பணிபுரிந்து வருகிறோம்.

தமிழகத்தில் ஏற்படும் பேரிடர் நேரங்களில் எங்களின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது. 2018-ம் ஆண்டு பிப்.22-ம் தேதி நடந்த மின்வாரிய ஊதிய ஒப்பந்தத்தில், ஒப்பந்தத் தொழிலாளர்களின் தினக்கூலி ரூ.380 என நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், இன்றுவரை எங்களுக்கு வழங்கப்படவில்லை. மின் சீரமைப்பு ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கும் நிர்ணயிக்கப்பட மேற்கண்ட கூலி வழங்கப்படவில்லை.

மின் வாரியம் நஷ்டத்தில் இயங்குவதாக கூறும் நிலையில், ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு மாதம் ரூ.9120 வழங்க மறுக்கின்றனர். அதேசமயம், அனுபவம் இல்லாத புதியவர்களுக்கு ரூ.18800 வழங்குகின்றனர். அனுபவத் தொழிலாளர்களை புறக்கணிக்கிறது மின்வாரியம். எனவே, நிர்ணயிக்கப்பட்ட கூலியை வழங்க வேண்டும்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

பிசியோதெரபி

திருப்பூர் மாவட்ட இயன்முறை மருத்துவர்கள் பெருமன்றம் சார்பில் அளிக்கப்பட்ட மனுவில், "மாநில பிசியோதெரபி கவுன்சில் அமைப்பதற்காக போடப்பட்ட அரசாணைகளில், பிசியோதெரபிஸ்ட்களின் நேரடி மருத்துவ சேவை பாதிக்கும். இதில் டாக்டர் (Dr) என்ற முற்சேர்க்கை பயன்படுத்தக்கூடாது என ஷரத்து திணிக்கப்பட்டுள்ளது. மற்ற மாநிலங்களில் இது மாதிரியான நிலை இல்லை. நாட்டுக்கே தவறான முன்னுதாரணமாக தமிழக பிசியோதெரபி கவுன்சிலின் அரசாணை உள்ளது.

எனவே, மேற்குறிப்பிட்ட ஷரத்தை நீக்குவதுடன், பிசியோதெரபி கவுன்சில் அரசாணையை திருத்தம் செய்து, நியாயமான முறையில் நியமன உறுப்பினர்களை தேர்வு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x