Published : 24 Feb 2021 03:17 AM
Last Updated : 24 Feb 2021 03:17 AM

மாநகராட்சியுடன் இணைந்து ஐசிஐசிஐ வங்கி வழங்கும் `நம்ம சென்னை ஸ்மார்ட் கார்டு' திட்டம்: முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார்

சென்னையில் மாநகராட்சியுடன் இணைந்து ஐசிஐசிஐ வங்கி வழங்கும் `நம்ம சென்னை ஸ்மார்ட் கார்டு' திட்டத்தை முதல்வர் பழனிசாமி நேற்று தொடங்கி வைத்தார்.

தமிழக அரசு சார்பில் சென்னை மாநகராட்சி, நகராட்சி நிர்வாகம், சென்னை குடிநீர் வாரியம், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், பேரூராட்சிகள் இயக்ககம் மற்றும் சென்னை ஆறுகள் சீரமைப்பு அறக்கட்டளை சார்பில் ரூ.2 ஆயிரத்து 181 கோடியே 50 லட்சம் மதிப்பிலான திட்டப் பணிகளை பொதுமக்களின் பயன்பாட்டுக்கு அர்ப்பணிக்கும் விழா மற்றும் ரூ.931 கோடி மதிப்பில் புதிய திட்டங்களின் அடிக்கல் நாட்டு விழா சென்னை தீவுத்திடலில் நேற்று நடைபெற்றது.

இதில் முதல்வர் பழனிசாமி பங்கேற்று துறைச் சார்ந்த திட்டங்களைத் தொடங்கி வைத்தார். அப்போது சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பொதுமக்களின் பணப் பரிவர்த்தனையை எளிதாக்கும் வகையில் `நம்ம சென்னை ஸ்மார்ட் கார்டு'களை முதல்வர் பழனிசாமி வெளியிட, சென்னை மாநகராட்சி ஆணையர் கோ.பிரகாஷ், ஐசிஐசிஐ வங்கி நிர்வாகிகள் பெற்றுக் கொண்டனர். இந்த `நம்ம சென்னை ஸ்மார்ட் கார்டு' அட்டையை மாநகராட்சியின் சேவைகள், வாகன நிறுத்தக் கட்டணம், நாடு முழுவதும் ரூபே அட்டை வழியே பணப் பரிவர்த்தனை செய்யும் உணவகங்கள், கடைகள், சில்லறை வணிகம் சார்ந்த இடங்கள், ஆன்லைன் பணப் பரிவர்த்தனை மற்றும் ஆன்லைன் விற்பனையகங்களில் பயன்படுத்தலாம்.

ரூ.1,295 கோடியில் திட்டங்கள்

அதைத் தொடர்ந்து சென்னை மாநகராட்சியின் திருவொற்றியூர், மணலி, மாதவரம் மற்றும் அம்பத்தூர் ஆகிய 4 மண்டலங்களுக்கு உட்பட்ட 48 வார்டுகளில் தனியார் நிறுவனம் மூலம் வீடுதோறும் திடக்கழிவுகளை சேகரித்தல், சேகரித்த கழிவுகளை அதற்குரிய பதப்படுத்தும் நிலையங்களுக்கு கொண்டு செல்லுதல் ஆகிய பணிகளை மேற்கொள்ளும் திட்டத்தையும் முதல்வர் பழனிசாமி தொடங்கிவைத்தார்.

இதற்காக தொடர்புடைய தனியார் நிறுவனத்துக்கு ஆண்டுக்கு ரூ.152 கோடி வீதம், 8 ஆண்டுகளுக்கு ரூ.1,216 கோடி செலவிடப்பட உள்ளது. மேலும் பல்வேறு திடக்கழிவு மேலாண்மை திட்டங்களையும் தொடங்கி வைத்தார். தொடர்ந்து ரிப்பன் மாளிகை வளாகத்தில் ரூ.50 லட்சத்தில் அமைக்கப்பட்டுள்ள மின்னணு உணர்வு மையத்தையும் திறந்து வைத்தார். இவ்வாறு சென்னை மாநகராட்சியில் மட்டும் மொத்தம் ரூ.1,295 கோடியே 44 லட்சத்தில் முடிவுற்ற திட்டப் பணிகளை பொதுமக்களின் பயன்பாட்டுக்காக முதல்வர் அர்ப்பணித்தார்.

சென்னை ஆறுகள் சீரமைப்பு அறக்கட்டளையின் ஒருங்கிணைந்த கூவம் ஆறு சுற்றுச்சூழல் சீரமைப்புத் திட்டத்தின்கீழ் 60 கி.மீ தூரத்துக்கு (30 கிமீ ஆறின் இரு கரைகள்) ஆற்றின் கரையோரங்களை பலப்படுத்தி, பல்லுயிர் பெருக்கத்தை அதிகரிக்க ரூ.36 கோடியே 61 லட்சத்தில் 108 உள்ளூர் தாவர இனங்களைச் சேர்ந்த 4 லட்சத்து 53 ஆயிரம் தாவரங்களை நடவு செய்யும் பணிகளையும் முதல்வர் தொடங்கி வைத்தார்.

இவ்விழாவில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன், தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, ஜெயக்குமார், பெஞ்சமின், தலைமைச் செயலர் ராஜீவ் ரஞ்சன் நகராட்சி நிர்வாகத் துறைச் செயலர் ஹர்மந்தர் சிங், ஐசிஐசிஐ வங்கியின் நிறுவன வர்த்தகம் மற்றும் ஜிபிஜி பிரிவு மண்டலத் தலைவர் ஜி.வெற்றிவேல், சில்லறை வர்த்தக பிரிவு மண்டலத் தலைவர் மாடிபட்லா ஹிமாதார் ஆகியோர் கலந்துகொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x