தமிழ்மொழி என்றென்றும் நிலைத்து நிற்கும்: திருச்சி சிவா எம்.பி பெருமிதம்

தமிழ்மொழி என்றென்றும் நிலைத்து நிற்கும்: திருச்சி சிவா எம்.பி பெருமிதம்
Updated on
1 min read

தமிழ்மொழி என்றென்றும் நிலைத்து நிற்கும் என மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா தெரிவித்தார்.

திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியின் வரலாற்றுத் துறை சார்பில் பன்னாட்டு தாய்மொழி நாள் கருத்தரங்கு நேற்று நடைபெற்றது. கருத்தரங்குக்கு கல்லூரியின் கணினித் துறைத் தலைவர் சத்தியசீலன் தலைமை வகித்தார்.

சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா பேசியது:

தன் தேவைக்காக மட்டுமின்றி ஒடுக்கப்படும் மக்களின் உரிமைக்காகவும், அடிப்படை தேவைக்காகவும் பரிந்து பேசுவதுதான் பேச்சுரிமை. இதற்கு எடுத்துக்காட்டாக விளங்கியவர் பெரியார்.

கிரேக்கம், லத்தீன், எபிரேயம், சீனம், சம்ஸ்கிருதம், தமிழ் ஆகிய மொழிகளில் கிரேக்கம், லத்தீன் ஆகிய மொழிகள் அழிந்துவிட்டன. பைபிள் பயன்பாட்டால் எபிரேய மொழி உயிர்ப்புடன் உள்ள நிலையில், சீன மொழி வடிவத்திலேயே தங்கிவிட்டதால் அதைப் பிறர் கற்றுக் கொள்ள முடியவில்லை. சம்ஸ்கிருதம் பேச்சு வழக்கில் இல்லாததால் சிறப்பு பெறவில்லை. ஆனால், மாற்றங்களை ஏற்றுக் கொள்வதால் உலகிலேயே தமிழ்மொழி மட்டுமே உயிருடனும், உயிர்ப்புடன் வளர்ந்துள்ளதுடன், என்றென்றும் நிலைத்து நிற்கும் மொழியாக விளங்குகிறது என்றார்.

தொடர்ந்து, மாணவ, மாணவிகளுடனான கலந்தாய்வில், அரியலூர் மாவட்டத்தில் காணப்படும் படிமங்கள் தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டும் என்று மாணவி ஒருவர் வலியுறுத்தினார். இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்கும் வகையில் நாடாளுமன்ற அடுத்தக் கூட்டத்தில் பேசுவதாக திருச்சி சிவா உறுதி அளித்தார்.

முன்னதாக, கல்லூரி வரலாற்றுத் துறைத் தலைவர் பெமிலா அலெக்சாண்டர் வரவேற்றார். கவுரவ பேராசிரியர் அருளானந்து நன்றி கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in