

`சட்டப்பேரவை தேர்தலை அமைதியாகவும், நேர்மையாகவும் நடத்தும் வகையில் விதிமீறல்களை தடுக்க, தென்காசி, கேரள மாநிலம் கொல்லம் மாவட்டங்களைச் சேர்ந்த அதிகாரிகள் அடங்கிய சிறப்பு குழுக்கள் அமைக்கப்படும்' என்று, தென்காசி ஆட்சியர் ஜி.எஸ். சமீரன், கொல்லம் ஆட்சியர் அப்துல் நாசர் ஆகியோர் தெரிவித்தனர்.
கேரளம் மற்றும் தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தலையொட்டி தென்காசி மற்றும் கொல்லம் மாவட்டங்களில் உள்ள மாநில எல்லை பகுதிகளில் விதிமீறல் களைத் தடுக்கவும், கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்தவும் அதிகாரிகள் குழுக்களை அமைப்பது தொடர் பான ஆலோசனைக் கூட்டம் தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. ஆட்சியர்களுடன், இரு மாவட்டங்களின் காவல்துறை, வனத்துறை, சுகாதாரத்துறை, போக்குவரத்துத்துறை, வணிகவரித் துறை அதிகாரிகளும் பங்கேற்றனர்.
கூட்டத்துக்குப்பின் செய்தி யாளர்களிடம் இருமாவட்ட ஆட்சியர்களும் கூறியதாவது:
தேர்தலின்போது மாநில எல்லை களில் சட்டவிரோத செயல்களைத் தடுக்கவும், தேர்தலை அமைதி யாகவும், நேர்மையாகவும் நடத்துவதற்காக தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி இந்த கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. தேர்தலின்போது எல்லையை ஒட்டியுள்ள வாக்குச்சாவடிகளில் முன்னேற்பாடுகள், சோதனைச் சாவடிகளில் எப்படி கண்காணிப்பு செய்வது, ஒருங்கிணைந்த குழுக் களை அமைத்து செயல்படுவது, தகவல் பரிமாற்றம் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
இரு மாவட்டங்களிலும் உள்ள அதிகாரிகள் இணைந்த குழுக்கள் அமைக்கப்படும். தேர்தலை முறையாகவும், நேர்மை யாகவும் நடத்த அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்படும். தீவிர சோதனை மேற்கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர்.