

வேலூர் புதிய பேருந்து நிலையம் அருகே மாநகராட்சி ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தின் கீழ் ரூ.11 கோடி மதிப்பிலான கட்டி முடிக்கப்பட்டுள்ள பல் அடுக்கு வாகனம் நிறுத்தும் கட்டிடத்தை முதல்வர் பழனிசாமி காணொலி காட்சி வாயிலாக நேற்று திறந்து வைத்தார்.
வேலூர் மாநகராட்சியில் ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தின் கீழ் புதிய பேருந்து நிலையம் அருகே ரூ.11 கோடி மதிப்பிலான பல் அடுக்கு வாகன நிறுத்தும் கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.
தரைத்தளம் மற்றும் மூன்று அடுக்கு தளத்துடன் மொத்தம் 6 ஆயிரத்து 662 சதுரடி பரப்பளவில் கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இங்குள்ள தரைத்தளத்தில் 42 கார்களை நிறுத்தி வைக்க முடியும்.
முதல், இரண்டாவது மற்றும் மூன்றாம் தளங்களில் 1,059 இரு சக்கர வாகனங்களை நிறுத்தி வைக்க முடியும். இந்நிலையில், வேலூர் மாநகராட்சி பல் அடுக்கு வாகனம் நிறுத்தும் கட்டிடத்தை சென்னையில் இருந்தபடி முதல்வர் பழனிசாமி காணொலி காட்சி வாயிலாக நேற்று திறந்து வைத்தார்.
வேலூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம், குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.
அப்போது, மாநகராட்சி ஆணையர் சங்கரன், பொறியாளர் சீனிவாசன், நகர்நல அலுவலர் சித்ரசேனா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.