

வாணியம்பாடி அருகே சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக பொதுமக்கள்அளித்த புகாரை தொடர்ந்து, வனத் துறையினர் அங்கு கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
திருப்பத்தூர் மாவட்டம் வாணி யம்பாடி அடுத்த சென்னாம்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் தென்னை வியாபாரி ஜெயராமன். இவருக்கு சொந்தமான தென்னந்தோப்பு மாதகடப்பா வனப் பகுதியையொட்டி உள்ளது. இங்கு, வாணியம்பாடியைச் சேர்ந்த மல்லிகா (42) என்பவர் காவல் பணியில் ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில், நேற்று பிற்பகல்1 மணியளவில் மல்லிகா தென்னந் தோப்பில் கூலியாட்களுடன் வேலையில் ஈடுபட்டிருந்தார். அப்போது, சிறுத்தை ஒன்று நாய்களை விரட்டிய படி ஓடி வந்தது. இதைக்கண்ட மல்லிகா மற்றும் கூலித்தொழிலாளிகள் அங்கிருந்து தப்பியோடினர்.
நாய்களை விரட்டி வந்த சிறுத்தை அங்குள்ள வனப்பகுதிக்குள் சென்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பொதுமக்கள், திருப்பத்தூர் வனத்துறை யினருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில், திருப்பத்தூர் மாவட்ட உதவி வனபாதுகாவலர் ராஜ்குமார் தலைமையில், திருப்பத்தூர் வனச்சரகர் பிரபு மற்றும் 10-க்கும் மேற்பட்ட வனத்துறையினர் சென்னாம் பேட்டை பகுதிக்கு விரைந்து சென்று, பொதுமக்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது, கடந்த சில நாட்களாக இப்பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாகவும், இன்று (நேற்று) சிறுத்தை ஒன்று நாய்களை விரட்டியபடி தென்னந்தோப்பு வழியாக ஓடி வருவதை தொழிலாளர்கள் பார்த்தாக கூறிய கிராம மக்கள் மற்றும் கால்நடைகளுக்கு தகுந்த பாதுகாப்பு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
இதைத்தொடர்ந்து, ஜெயராமன் தென்னந்தோப்பு பகுதிக்கு வனத்துறையினர் சென்றனர். அங்கு சிறுத்தை சென்றதின் கால்தடம் பதிவானதாக பொதுமக்கள் கூறிய இடத்தை வனத்துறையினர் ஆய்வு செய்தனர். பிறகு, தென்னந்தோப்பு மற்றும் வனப்பகுதியையொட்டி யுள்ள விவசாய நிலம் அருகே 3 கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி வனவிலங்குகள் நடமாட்டத்தை கண்காணிக்க வனத்துறையினருக்கு மாவட்ட உதவி வன பாதுகாவலர் ராஜ்குமார் உத்தரவிட்டார்.
அதேநேரத்தில், சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக வெளியான தகவலால் வனப்பகுதியையொட்டி வசிக்கும் பொதுமக்கள் இரவு நேரங்களில் வெளியே நடமாட வேண்டாம் என்றும், கால்நடைகளை பாதுகாப்புடன் கண்காணிக்க வேண்டும் என்றும், சிறுத்தை உள்ளிட்ட வன விலங்குகள் ஊருக்குள் நுழைந்தால் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என தண்டோரா மூலம் கிராம மக்களுக்கு வனத்துறை சார்பில் நேற்று எச்சரிக்கை விடுக்கப்பட்டது.