Last Updated : 23 Feb, 2021 08:43 PM

 

Published : 23 Feb 2021 08:43 PM
Last Updated : 23 Feb 2021 08:43 PM

கலைமாமணி விருதுக்கு தேர்வுக் குழு அமைக்கக் கோரி வழக்கு: தமிழக அரசுக்கு நோட்டீஸ்

மதுரை

கலைமாமணி விருதுக்கு நிபுணர் குழு அமைக்கவும், தனி விதிகளை உருவாக்கவும் கோரிய மனு தொடர்பாக தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தூத்துக்குடி ஆறுமுகநேரியைச் சேர்ந்த சேர்மதுரை, உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு:

தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றம் சார்பில் கலைமாமணி விருதுகள் வழங்கப்படும். மாநில அளவில் கலைமாமணி விருதுகளும், மாவட் அளவில் 18 வயதுக்கு குறைவானவர்களுக்கு கலை இளமணி விருதும், 19 முதல் 35 வயதுடையவர்களுக்கு கலை வளர் மணி விருதும், 36 முதல் 50 வயதினருக்கு கலைசுடர்மணி விருதும், 51 முதல் 60 வயதுடையவர்களுக்கு கலை நன்மணி விருதும், 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கலை முதுமணி விருதும் வழங்கப்படுகிறது.

இந்தாண்டு கலை மாமமணி விருதுக்கு பரிந்துரை வழங்க உரிய கால வரம்பு விதிக்கப்படவில்லை. இது தொடர்பான வழக்கை விசாரித்த நீதிமன்றம் பல்வேறு கலைகளுடன் தொடர்புடையவர்களிடம் விண்ணப்பங்கள் பெற்று கலை மாமணி விருதுக்கு பரிசீலிக்க வேண்டும் என உத்தரவிட்டது. இருப்பினும் இந்த ஆண்டு கலைமாமணி விருதுகள் அவசர அவசரமாக வழங்கப்பட்டுள்ளது.

எனவே, கலைமாமணி விருதுகள் வழங்குவது தொடர்பாக விதிகளையும், தனி குழு அமைக்கவும், அந்த குழுவின் பரிந்துரையின் பேரில் தகுதியானவர்களுக்கு விருதுகள் வழங்க நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், எஸ். ஆனந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனு தொடர்பாக தமிழக கலை மற்றும் கலாச்சாரத்துறை இயக்குநர், தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்ற உறுப்பினர் செயலர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x