Published : 23 Feb 2021 04:48 PM
Last Updated : 23 Feb 2021 04:48 PM

அதிகரிக்கப்பட்ட வரிகளில் மாநில அரசுக்குரிய பங்கைப் பரிசீலிக்காத மத்திய அரசு: பட்ஜெட் உரையில் ஓபிஎஸ் விமர்சனம் 

சென்னை

மத்திய அரசு வரி வருவாயை மாநில அரசுகளுக்குப் பகிர்ந்தளிப்பதில் உள்ள வேறுபாட்டையும், உயர்த்தப்பட்ட செஸ் வரி, கூடுதல் வரிகளுக்குரிய பங்குகள், தனி நபர் வருமான வரியில் கூடுதலாகக் கிடைக்கும் வருவாயில் மாநிலத்துக்குரிய பங்கை மத்திய அரசு தருவது குறித்துப் பரிசீலிக்கவே இல்லை என நிதியமைச்சர் ஓபிஎஸ் தனது இடைக்கால பட்ஜெட் அறிக்கையில் குறிப்பிட்டு, வருத்தத்தைப் பகிர்ந்துள்ளார்.

தமிழக அரசின் கடைசி இடைக்கால பட்ஜெட்டை நிதி அமைச்சர் ஓபிஎஸ் இன்று தாக்கல் செய்தார். அதில் மத்திய மாநில உறவுகள், நிதிநிலை அறிக்கைகள், வரி வருவாய் ஒதுக்கீடு உள்ளிட்டவற்றில் மத்திய அரசு வருவாயைப் பகிராத போக்கைக் குறிப்பிட்டு சுட்டிக்காட்டியுள்ளார்.

இடைக்கால பட்ஜெட் அறிக்கை:

“சென்னை நீர்நிலைகளைச் சீரமைத்தல், வரலாற்றுச் சிறப்புமிக்க மற்றும் பழங்காலக் கோயில்களைப் புனரமைத்தல், பாரம்பரிய கட்டிடங்களைப் பராமரித்தல், பாரம்பரிய நீர்நிலைகளை மறுசீரமைத்தல் மற்றும் சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த முக்கிய நகரங்களின் மேம்பாடு உள்ளிட்ட ஐந்து திட்டங்களுக்கு மாநிலத்திற்கு குறிப்பிட்ட மானியமாக, தமிழ்நாட்டிற்கு 2,200 கோடி ரூபாயைக் குழு பரிந்துரைத்துள்ளது.

மத்திய நிதியமைச்சரின், நடவடிக்கை எடுக்கப்பட்ட குறிப்பாணையில், ‘மாநில அரசிடம் உள்ள நிபந்தனை இல்லாத நிதி ஆதாரங்கள் மற்றும் மத்திய அரசின் நிதி சார்ந்த பொறுப்புகளைக் கருத்தில் கொண்டு, மேற்கூறிய பரிந்துரைக்கு உரிய கவனம் செலுத்தப்படும்’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

நிதிக்குழுவின் பரிந்துரைகளை ஒரு தீர்ப்பாகச் செயல்படுத்தும் வழக்கத்தைப் பின்பற்றி, 15-வது நிதிக்குழுவால் பரிந்துரைக்கப்பட்ட, மாநிலத்திற்குக் குறிப்பிட்ட மானியங்களையும், துறைகளுக்கு குறிப்பிட்ட மானியங்களையும் எந்த ஒரு கூடுதல் நிபந்தனையையும் விதிக்காமல், மாநிலங்களுக்கு நேரடியாக விடுவிக்க வேண்டும் என்று மத்திய அரசை நாங்கள் வலியுறுத்துகிறோம்.

* 15-வது நிதிக்குழு அதன் அறிக்கையில், மத்திய அரசால் விதிக்கப்பட்ட மேல்வரிகள் மற்றும் கூடுதல் கட்டணங்கள் தொடர்ந்து அதிகரித்து வரும் போக்கைக் குறிப்பிட்டுள்ளது. இவை, மாநிலங்களுடன் பகிர்ந்துகொள்ளக் கூடிய வரி வருவாயின் பங்காக இல்லை. மத்திய அரசின் மொத்த வரி வருவாயில், மேல்வரி மற்றும் கூடுதல் கட்டணங்களின் பங்கானது, 2011-12ஆம் ஆண்டில் 10.4 சதவீதத்திலிருந்து, 2019-20 ஆம் ஆண்டின் திருத்த மதிப்பீடுகளில் 20.2 சதவீதமாக அதிகரித்துள்ளது என அறிக்கை குறிப்பிட்டுள்ளது.

இந்தப் போக்கை நிதிக்குழு குறிப்பிட்டிருந்தாலும், தமிழ்நாடு உட்பட பல்வேறு மாநிலங்கள் கோரியபடி, அடிப்படை வரி விகிதத்தில் மேல்வரி மற்றும் கூடுதல் கட்டணங்களை இணைப்பது அல்லது அவற்றை மாநிலங்களுடன் பகிர்ந்துகொள்ளக் கூடிய மொத்த வரி வருவாயுடன் சேர்ப்பது குறித்து எந்தவொரு திட்டவட்டமான பரிந்துரையையும் 15-வது நிதிக்குழு செய்யவில்லை என்பது வருத்தமளிக்கிறது.

* 2020ஆம் ஆண்டு மே மாதத்தில், பெட்ரோல் மற்றும் டீசல் மீது விதிக்கப்படும் ஆயத்தீர்வையில் மத்திய அரசு மேல்வரி மற்றும் கூடுதல் கட்டணங்களின் பங்கைக் கணிசமாக உயர்த்தி, அடிப்படைத் தீர்வையின் பங்கைக் குறைத்துள்ளது. பெட்ரோல் மற்றும் டீசல் மீதான பல்வேறு வரிகளின் காரணமாக மத்திய அரசின் வருவாய் ஏப்ரல் முதல் நவம்பர் வரையிலான காலத்தில், 2019ஆம் ஆண்டை ஒப்பிடும்போது, 2020ஆம் ஆண்டில் 48 சதவீத வளர்ச்சியைக் கண்டது. ஆனால், இதே காலகட்டத்தில், 2019ஆம் ஆண்டை ஒப்பிடும்போது, 2020ஆம் ஆண்டில் தமிழ்நாட்டின் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான ஆயத்தீர்வையின் பங்கு குறைந்து, 39.40 சதவீதம் மட்டும் பெற்றுள்ளது.

* 2021ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 18ஆம் தேதியன்று நடைபெற்ற வரவு-செலவுத் திட்டத்திற்கு முந்தைய கூட்டத்தில், மத்திய வரிகளிலிருந்து பகிர்ந்தளிக்கப்படும் உரிய பங்கினை மாநிலங்கள் பெறும் வகையில், அனைத்து மேல்வரி மற்றும் கூடுதல் கட்டணங்களை அடிப்படை வரி விகிதத்துடன் இணைக்க வேண்டும் என்று நான் தனிப்பட்ட முறையில் மத்திய நிதியமைச்சரிடம் கேட்டுக்கொண்டேன்.

முதல்வரும் இப்பிரச்சினையை மத்திய அரசின் கவனத்திற்கு எடுத்துச் சென்றுள்ளார். இருப்பினும், 2021-22ஆம் ஆண்டின் மத்திய வரவு-செலவுத் திட்ட அறிக்கையில், பெட்ரோல் மற்றும் டீசல் மீதான அடிப்படை ஆயத்தீர்வையை மேலும் குறைத்து, விவசாய உட்கட்டமைப்பு மேம்பாட்டு மேல்வரி விதிக்கப்பட்டது.

* இதேபோல் 2013-14ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட தனிநபர் வருமான வரி மீதான கூடுதல் கட்டணம் மேலும் விரிவாக்கப்பட்டு, அதிகரித்ததன் மூலம் மத்திய அரசிற்குப் பெருமளவிலான வருவாயை அளித்து வருகிறது. ஆனால், இந்த அதிகரிக்கப்பட்ட வருவாயில் இருந்து, மாநிலங்களுக்கு எந்தவிதமான பங்கும் கிடைப்பதில்லை.

2021-22ஆம் ஆண்டின் மத்திய அரசின் வரவு-செலவுத் திட்டத்தில் தங்கம், வெள்ளி, மதுபானங்கள், கச்சா சமையல் எண்ணெய், நிலக்கரி, பழுப்பு நிலக்கரி மற்றும் முற்றா நிலக்கரி (Lignite and Peat), ஆப்பிள்கள், பருப்பு வகைகள் மற்றும் தரமான உரங்கள் உட்பட பல்வேறு பொருட்கள் மீதான அடிப்படை சுங்க வரி குறைக்கப்பட்டு, அதற்கு மாற்றாக வேளாண்மை உட்கட்டமைப்பு மேம்பாட்டு மேல்வரி விதிக்கப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கைகள் அனைத்தும் மாநிலங்களுடன் பகிர்ந்துகொள்ளக் கூடிய மத்திய வரி வருவாயை மேலும் குறைத்துள்ளன. அனைத்து மேல்வரிகள் மற்றும் கூடுதல் கட்டணங்களை அடிப்படை வரி விகிதத்துடன் இணைக்கவும், மாநிலங்கள் தங்களது உரிய வருவாயின் பங்கினைப் பெறுவதை உறுதி செய்யவும் மத்திய அரசை நாங்கள் வலியுறுத்துகிறோம்”.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x