Published : 23 Feb 2021 04:53 PM
Last Updated : 23 Feb 2021 04:53 PM

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான செயல் இயக்குநராக மங்கு ஹனுமந்த ராவ் நியமனம் 

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான செயல் இயக்குநராக மருத்துவர் மங்கு ஹனுமந்த ராவை மத்திய அரசு நியமித்தது.

மங்கு ஹனுமந்த ராவ் தற்போது திருப்பதி எஸ்.வி. மருத்துவ கல்லூரி தலைவராகவும், மூத்த பேராசிரியராகவும் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் அவர் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை செயல் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழகத்தில் 'எய்ம்ஸ்' மருத்துவமனை அமையும் எனக் கடந்த 2015-ம் ஆண்டு மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது. அதன்பிறகு, தமிழகத்தில் எந்த நகரில் ‘எய்ம்ஸ்’ அமைகிறது என்பதற்கான இடம் தேர்வில் தாமதம் ஏற்பட்டது.

பின்னர், சென்னை உயர் நீதிமன்றம் மதுரைக் கிளை, இந்த விஷயத்தில் தலையிட்டு இடத்தை அறிவிக்க நெருக்கடி கொடுத்ததால் மத்திய அரசு மதுரையில் 'எய்ம்ஸ்' அமையும் என்று அறிவித்தது.

இதையடுத்து, அரசு ஆணை பிறப்பிக்கப்பட்டு பிரதமர் மோடி மதுரைக்கே நேரடியாக வந்து ரூ.1,264 கோடியில் 'எய்ம்ஸ்' மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டினார். அதன்பிறகு மக்களவை இடைத்தேர்தல் வந்ததால் 'எய்ம்ஸ்' மருத்துவமனை பணிகள் தாமதமானது.

மதுரை 'எய்ம்ஸ்' மருத்துவமனைக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டியதோடு பணிகள் தொடங்காமல் கிடப்பில் போடப்பட்டுள்ளதாகக் கூறப்படும் நிலையில், நிர்வாகப் பணிகளை விரைவுப்படுத்த மதுரை ‘எய்ம்ஸ்’ மருத்துவமனைக்கு நிர்வாக இயக்குநர் பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன.

இப்பதவிக்கு குறைந்தது 10 ஆண்டுகளாவது ஏதேனும் மருத்துவக் கல்லூரியின் தலைவராக இருந்திருக்க வேண்டும் அதில் குறைந்தது 5 ஆண்டுகளாவது மருத்துவக்கல்வி துறைத் தலைவராகவும், மருத்துவக் கல்வி நிறுவனத்தின் தலைவராகவும் இருந்திருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருந்தது. மேலும், விண்ணப்பதாரர்கள் 5 ஆண்டுகள் மருத்துவக் கல்வி பயிற்றுவித்த அனுபவமும் இருக்க வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது.

மத்திய சுகாதாரத் துறையின் அறிவிப்பின்படி ஏராளமானோர் இப்பதவிக்கு விண்ணப்பத்திருந்தனர். தகுதியின் அடிப்படையில் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு 34 பேர் தகுதியுடையவராகக் கருதப்பட்டனர்.

இவர்களில் 4 பேர் தமிழகம், ஜம்மு காஷ்மீர், குஜராத், இமாச்சலப் பிரதேசங்களில் புதிதாக அமையவுள்ள எய்ம்ஸ் மருத்துவமனைகளுக்கு செயல் இயக்குநர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஜம்மு காஷ்மீரில் உள்ள விஜய்பூர் எய்ம்ஸ் மருத்துவமனை, குஜராத் மாநிலத்தில் உள்ள ராஜ்கோட் எய்ம்ஸ் மருத்துவமனை, இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள பிலாஸ்பூர் எய்ம்ஸ் மருத்துவமனை ஆகியவற்றுக்கும் புதிய செயல் இயக்குநர்களை நியமனம் செய்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x