Published : 23 Feb 2021 03:37 PM
Last Updated : 23 Feb 2021 03:37 PM

இடைக்கால பட்ஜெட்; பெட்ரோல், டீசல் மீதான வரியைக் குறைக்காதது ஏமாற்றம்: தினகரன்

டிடிவி தினகரன்: கோப்புப்படம்

சென்னை

தமிழக அரசின் இடைக்கால நிதிநிலை அறிக்கையில் பெட்ரோல், டீசல் மீதான வரியைக் குறைக்காதது ஏமாற்றம் தருகிறது என, அமமுக பொதுச் செயலாளரும், சட்டப்பேரவை உறுப்பினருமான டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக டிடிவி தினகரன் இன்று (பிப். 23) வெளியிட்ட அறிக்கை:

"தமிழக அரசின் கடன்தொகை ஒரே ஆண்டில் ரூ.4 லட்சம் கோடியிலிருந்து ரூ.5.70 லட்சம் கோடியாக உயர்ந்திருப்பதாக அரசின் இடைக்கால நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பது பெரும் கவலை அளிக்கிறது.

சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்ட தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட்டில், கரோனா பேரிடர் காலத்தில் எதிர்பார்த்ததை விட வரி வருவாய் அதிகரித்துள்ளது என்று குறிப்பிட்டுவிட்டு, இன்னொரு பக்கம் அரசின் கடன் தொகையும் அதிகரித்திருப்பதாகக் கூறப்பட்டுள்ளது நகை முரணாக உள்ளது.

கடந்த மார்ச் மாதத்திலிருந்து கிட்டத்தட்ட நாடே செயல்படாத நிலையில், வளர்ச்சிப் பணிகள், வழக்கமான திட்டங்கள் பெருமளவில் அமல்படுத்தப்படாத நிலையில், தமிழக அரசு ரூபாய் 1 லட்சம் கோடிக்கு மேல் கடன் வாங்கியுள்ளது, அரசின் செலவினங்கள் வெளிப்படைத் தன்மையோடு இல்லையோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

அதுமட்டுமின்றி, அளவுக்கு அதிகமாக கடன் வாங்கியுள்ள நிலையிலும், நடப்பு நிதியாண்டில் பற்றாக்குறை 84 ஆயிரம் கோடி ரூபாயாக இருக்கும் என்ற அறிவிப்பு அரசின் நிர்வாகத் திறமையின்மையை தெள்ளத்தெளிவாகக் காட்டுகிறது.

முதல்வரின் நெடுஞ்சாலைத் துறைக்கு மட்டும் 18 ஆயிரத்து 750 கோடி ரூபாய் நிதியை வாரி வழங்கியிருப்பது பல்வேறு கேள்விகளையும் மக்களிடம் எழுப்பியிருக்கிறது. வறுமைக்கோட்டுக்குக் கீழே வாழும் குடும்பங்களுக்கான விபத்து மற்றும் ஆயுள்காப்பீடு செலவினை அரசே ஏற்கும் என்ற அறிவிப்பு வரவேற்கத்தக்கதாகும்.

பேரிடர் காலத்தில் அழிவுக்குள்ளாகும் நெற்பயிருக்கான இழப்பீடு ஹெக்டேருக்கு ரூபாய் 13 ஆயிரத்திலிருந்து 20 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால், மேற்கண்ட இரண்டு திட்டங்களையும் முறைகேடுகளுக்கு இடம் கொடுக்காமல் செயல்படுத்துவது முக்கியமானதாகும்.

பெட்ரோல், டீசல் மீதான மாநில அரசின் வரியை மேற்கு வங்கம், ராஜஸ்தான், அசாம், மேகாலயா உள்ளிட்ட மாநிலங்கள் குறைத்திருப்பதைப் போல, தமிழகத்தில் குறைத்து அறிவிக்கப்படும் என அனைவரும் எதிர்பார்த்த நிலையில், செஸ் வரியை மட்டும் குறைக்குமாறு மத்திய அரசுக்குப் பரிந்துரை செய்யப்போவதாக அறிவித்திருப்பது ஏமாற்றம் தருகிறது. மொத்தத்தில் மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ற அறிவிப்புகள் இல்லாமல் பெயரளவுக்கான அறிக்கையாக அமைந்திருக்கிறது".

இவ்வாறு டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x