Published : 23 Feb 2021 03:01 PM
Last Updated : 23 Feb 2021 03:01 PM

மக்களவைத் தேர்தல், இடைத்தேர்தல், உள்ளாட்சித் தேர்தலில் சறுக்கல்: கலங்கிப்போய் நிற்கும் மதுரை அதிமுக

மதுரை

வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் மதுரை அதிமுகவுக்கு, ‘எய்ம்ஸ்’ மருத்துவமனை, திட்டமிடுதல் இல்லாமல் நடக்கும் ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டம், மேம்பாலப் பணிகள், பாதாள சாக்கடை பிரச்சினை உள்ளிட்டவை பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளன.

தமிழகத்திற்கு ‘எய்ம்ஸ்’ மருத்துவமனையை மத்திய அரசு அறிவித்து 6 ஆண்டுகளாகிவிட்டது. பிரதமர் மோடி, இந்தத் திட்டத்திற்கு மதுரை தோப்பூரில் அடிக்கல் நாட்டி 2 ஆண்டுகளாகிவிட்டது.

ஆனால், நாட்டின் பிற மாநிலங்களில் அறிவித்த ‘எய்ம்ஸ்’ மருத்துவமனைக்கு நேரடியாக நிதி ஒதுக்கிய மத்திய அரசு, மதுரைக்கு மட்டும் ஜப்பான் நிதியை எதிர்பார்த்து கட்டுமானப்பணியை தள்ளிப்போட்டுக் கொண்டே போகிறது.

நிதி ஒதுக்க அதிமுக அரசும், உள்ளூர் அமைச்சர்களும் மத்திய அரசுக்கு போதிய அழுத்தம் கொடுக்கவில்லை என உள்ளூர் மக்கள் ஆதங்கப்படுகின்றனர்.

அதனால், சமீப காலமாக எதிர்க்கட்சி மேடைகளில் மட்டுமில்லாது சமூக வலைதளங்களிலும் மதுரைக்கு அறிவித்த ‘எய்ம்ஸ்’ மருத்துவமனையை வடிவேலின் கிணறு காமெடியுடன் ஒப்பிட்டு ‘மீம்ஸ்’களை ட்ரெண்ட் செய்கின்றனர்.

அதுபோல், ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தில் மதுரைக்கு ஒதுக்கப்பட்ட ரூ.1000 கோடியை நிதியை தேவையில்லாத இடங்களில் போட்டு மாநகராட்சி வீணடித்துள்ளதாகவும், திட்டத்தை விரைவாக முடிக்காமல் திரும்பிய பக்கமெல்லாம் குழி தோண்டிப்போட்டு மதுரை மக்களின் இயல்பு வாழ்க்கையை முடக்கிப்போட்டுவிட்டதாகவும் எதிர்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றனர்.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் மதுரை வந்த ஸ்டாலின், ‘‘தமிழக ‘எய்ம்ஸ்’ மருத்துவமனைக்கு மட்டும் நிதி ஒதுக்காமல் அதனுடன் அறிவித்த ஆந்திராவுக்கு ரூ.782 கோடி, மகாராஷ்டிராவுக்கு ரூ.932 கோடி, மேற்கு வங்கத்துக்கு ரூ.882 கோடி, உத்தரப் பிரதேசத்துக்கு ரூ.702 கோடி, பஞ்சாப்புக்கு ரூ.597 கோடி, அசாமுக்கு ரூ.341 கோடி, இமாச்சலப் பிரதேசத்துக்கு ரூ.750 கோடி ஒதுக்கி தாராளம் காட்டிய மத்திய அரசு, மதுரைக்கு மட்டும் ஜப்பான் நிதியை எதிர்பார்ப்பதா? மதுரை இந்தியாவில் இருக்கிறதா? அல்லது ஜப்பானில் இருக்கிறதா? என்றும் கடந்த சில நாட்களுக்கு முன் மதுரை வந்த ஸ்டாலின், அதிமுகவையும், பாஜகவையும் விளாசினார்.

மேலும், அவர், ‘‘தமிழ்நாட்டில் பாஜகவோ அதன் கூட்டணியோ ஜெயிக்கப் போவதில்லை. பிறகு எதற்காகப் பணம் ஒதுக்க வேண்டும் என்று பிரதமர் நினைக்கிறாரா?, ’’ என்றதோடு மதுரை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தையும், அதில் நடக்கும் முறைகேடுகளை விளாசியதோடு தேர்தலுக்கு மதுரை அமைச்சர்கள் தலைமறைவாக வேண்டிய நிலை ஏற்படும், ’’ என்று ஆவேசமாக பேசிச் சென்றார்.

அவரது இந்தப் பேச்சு மதுரையில் அதிமுகவினர் மத்தியில் மட்டுமில்லாது பொதுமக்கள் மத்தியிலும் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. ஒரு புறமும் திமுக, மற்றொரு புறம் அமமுக கொடுக்கும் குடைச்சலால் மதுரை அதிமுகவினர் சற்று கலங்கிப்போய் உள்ளனர்.

கடந்த கால தேர்தல் வரலாற்றைப்பார்க்கும்போது அதிமுவுக்கு மதுரை மாவட்டம் எப்போதுமே செல்வாக்கான மாவட்டமாக இருந்து வந்துள்ளது. கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தமுள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில் 8 தொகுதிகளை அதிமுக கைப்பற்றியது.

அது அதிமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க பெரிதும் உதவியாக இருந்தது. ஆனால், அதற்குப் பிறகு நடந்த மதுரை மக்களவைத்தேர்தல், திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் அதிமுக தோல்வியை சந்தித்தது. இவ்வளவுக்கும் திருப்பரங்குன்றத்தில் அதிமுக 8 முறை வெற்றிப்பெற்றுள்ளது. அதன் கோட்டையில் அதிமுகவினர் கோட்டை விடும் அளவிற்கு மதுரையில் அதிமுக செல்வாக்கு சற்று சரியத்தொடங்கியது. உள்ளாட்சித் தேர்தலிலும் எதிர்கட்சியாக இருந்தாலும் திமுக, அதிமுகவுக்கு இணையான வெற்றியைப் பெற்றது.

தற்போது ‘எய்ம்ஸ்’ மருத்துவமனை, திட்டமிடுதல் இல்லாமல் நடக்கும் ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டம், மேம்பாலம் பணிகள், பாதாளசாக்கடை பிரச்சினை உள்ளிட்டவை அதிமுகவுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x