

பல்வேறு சங்கங்களின் போராட்டங்கள் காரணமாக விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவாயில் கேட் இன்று மூடப்பட்டது. இதனால் ஊழியர்களும் பொதுமக்களும் அலுவலகத்திற்குச் செல்ல முடியாமல் தவித்தனர்.
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை இன்று காலை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
இதேபோல் சத்துணவு ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
போலீஸார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.
அதோடு மாற்றுத்திறனாளிகள் நல சங்கம் சார்பிலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கூடி ஏறும் போராட்டமும் நடைபெற்றது. ஒரே நாளில் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றதாலும் ஏராளமான போலீஸார் வளாகம் இன்று காலை களேபரமாக காட்சியளித்தது.
போராட்டக்காரர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குள் நுழைவதை தடுக்கும் வகையில் இரு நுழைவாயில்கள் அடைக்கப்பட்டனர். இதனால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு செல்ல முடியாமல் ஊழியர்களும் பொதுமக்களும் மிகுந்த சிரமப்பட்டனர்.
அதோடு போராட்டம் காரணமாக மாவட்ட ஆட்சியர் அலுவலக சாலையில் போக்குவரத்து தடை செய்யப்பட்டதால் காவல்துறை, சுகாதாரத்துறை, கல்வித்துறை, கூட்டுறவு துறை, கால்நடைத்துறை மற்றும் நீதிமன்றங்களுக்கு செல்வோர் மாற்று பாதையில் திருப்பி விடப்பட்டனர்.