Published : 23 Feb 2021 02:37 PM
Last Updated : 23 Feb 2021 02:37 PM

இன்று வெளிநடப்பு; அடுத்து ஸ்டாலின் முதல்வரான பின்னர் இந்த சபைக்குள் நுழைவோம்: துரைமுருகன் பேட்டி

சென்னை

இன்று வெளிநடப்பு செய்யும் நாங்கள் அடுத்து ஸ்டாலின் முதல்வரான பின்னர் மீண்டும் இந்த சபைக்குள் நுழைவோம் என்று துரைமுருகன் தெரிவித்தார்.

இடைக்கால பட்ஜெட் தாக்கலின்போது பேச வாய்ப்பு தரவில்லை என திமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர். அதன்பின் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த துரைமுருகன் கூறியதாவது:

“கூட்டத்தொடரை திமுக புறக்கணிக்கிறது என்பதற்கான காரண காரியங்களை சபையில் படித்துவிட்டு வெளிநடப்பு செய்துள்ளோம். நாங்கள் சொன்ன காரண காரியங்கள் உண்மை என்பதை வருகிற வழியில் முதல்வரின் பேச்சைக் காதில் கேட்டோம், அசந்து போய்விட்டோம். திமுக தலைவர் கருணாநிதி தலைமையில் ஆட்சியிலிருந்து இறங்கும்போது தமிழக அரசின் கடன் ஒரு லட்சம் கோடியாகத்தான் இருந்தது.

இன்றைக்கு எடுத்த எடுப்பிலேயே கொஞ்சம் கூட வெட்கம் இல்லாமல் நிதியமைச்சர் எங்கள் ஆட்சியின் கடன் ரூ.5.70 லட்சம் கோடி என்று சொல்கிறாரென்றால், ஆட்சி செய்ய அருகதையற்ற அரசு இது என்பதற்கு வேறு சான்று தேவையில்லை.

நாங்கள் சபையில் சொல்லிவிட்டு வந்தோம். தமிழக நிர்வாகத்தையும், நிதி நிர்வாகத்தையும் நீர்மூலமாக்கிய ஆட்சிதான் இந்த ஆட்சி. இத்தகைய தனது அந்திமக் காலத்தில் வழங்கும் இடைக்கால நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்வதை எதிர்த்து வெளிநடப்பு செய்கிறோம்.

கடன் வாங்கி, வாங்கி தமிழகத்தை ரூ.5.70 லட்சம் கோடியாக ஆக்கிய கடனாளி அரசுதான் இந்தப் பழனிசாமி அரசு. கடன் வாங்கி மக்களுக்கு நன்மை செய்யவில்லை, டெண்டர் விட்டு பினாமிகளுக்குச் சலுகைகள் செய்து கொடுத்துள்ளார்கள். கரோனா காலத்தில் பொதுமக்களுக்கு நேரடியாகப் பண உதவி செய்யாமல் தேர்தல் நேரத்தில் சுயநலத்தால் பணம் கொடுக்கிறது பழனிசாமி அரசு.

விளம்பர மோகத்தால் கோடிக்கணக்கான ரூபாய் பணத்தைச் செலவு செய்கிறார் பழனிசாமி. தேர்தலுக்கு முன்பு பணிகளை முடிக்க முடியாது என்று தெரிந்தும் கடந்த 3 மாதங்களில் மட்டும் 40 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேற்பட்ட மதிப்புள்ள டெண்டரை விட்டு அரசு கஜானாவை காலி செய்துள்ளார். தமிழகத்தின் வளர்ச்சியை 50 ஆண்டு காலம் பின்னோக்கி இழுத்துச் சென்றுவிட்டார்கள்.

தமிழக நிதி மேலாண்மை நிகழ்ச்சியில் ஓபிஎஸ், எடப்பாடி இருவரும் அழிக்க முடியாத கரும்புள்ளியை ஏற்படுத்தியுள்ளனர். அனைத்துத் துறைகளிலும் படுதோல்வி அடைந்த ஒரு அவல ஆட்சியைக் கொடுத்து விட்டுச் செல்வோரின் கடைசி நிதி நிலை அறிக்கைத்தான் இது. திமுக ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் நிதிநிலை மேலாண்மையில் ஏற்பட்டுள்ள அனைத்து முறைகேடுகளையும் விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும். நிதி நிலைமை வேகமாகச் சீரமைக்க்கப்படும்.

உங்கள் தொகுதியில் ஸ்டாலின் நிகழ்ச்சி மூலம் 152 தொகுதிகளில் உள்ள மக்கள் ஸ்டாலினை நேரடியாகச் சந்தித்துள்ளார்கள். கடந்த பத்தாண்டுகள் ஆட்சி என்ற ஒன்றே இல்லை என்பதற்கு உதாரணம்தான் அவரிடம் வழங்கப்பட்ட மனுக்கள்.

புதுவையில் நடந்த நிகழ்வு ஜனநாயகத்தை எந்த வகையிலும் பாஜக கொலை செய்யும் என்பதற்கு உதாரணம். இன்று திமுக கூட்டத் தொடரிலிருந்து வெளிநடப்பு செய்கிறது. திமுக மகத்தான வெற்றி பெற்றபின் நாங்கள் மீண்டும் இந்த சபைக்குத் திரும்புவோம்''.

இவ்வாறு துரைமுருகன் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x